தொலைக்காட்சி பரப்புகை அமைப்பு

தொலைக்காட்சி வண்ணக் குறியீடு அமைப்புகள். என்டிஎஸ்சி நாடுகள் பச்சை வண்ணத்திலும் பால் நாடுகள் நீல வண்ணத்திலும் சீகேம் நாடுகள் இளஞ்சிவப்பு வண்ணத்திலும் காட்டப்பட்டுள்ளன.

தொலைக்காட்சி பரப்புகை அமைப்புகள் (Broadcast television systems) அல்லது ஒளிபரப்பு அமைப்புகள் புவிப்புறத் தொலைக்காட்சியின் குறிப்பலைகள் ஒளிபரப்பப்படுவதற்கும் தொலைக்காட்சிப் பெட்டியில் பெற்றிடவும் ஏற்ற வகையில் குறியிடப்படுவதையும் வடிவமைப்பு சீர்தரங்களையும் குறித்ததாகும்.

அலைமருவித் தொலைக்காட்சி அமைப்புகள்

மூன்று முதன்மையான அலைமருவித் தொலைக்காட்சி அமைப்புகள் உலகெங்கும் தற்போது பயன்படுத்தப்படுகின்றன: என்டிஎஸ்சி, பால், மற்றும் சீகேம். என்டிஎஸ்சி அமைப்பை ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடாவிலும் பால் அமைப்பை உலகின் பெரும்பான்மை ஐரோப்பிய, ஆபிரிக்க, ஆசிய மற்றும் ஓசியானியா நாடுகளிலும் சீகேம் அமைப்பை பிரான்சு மற்றும் சில ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அமைப்புகளில் ஒளிபரப்பு குறிப்பலைக்கான தொழினுட்ப கூறளவுகள், வண்ணத்தை குறியீடு செய்வதற்கான குறியீடு அமைப்பு மற்றும் பன்மொழியில் ஒலிகளை ஏற்றிச்செல்ல அமைப்புகள் போன்ற பல தனித்தனி அங்கங்கள் விவரிக்கப்படுகின்றன. ஒரு சீர்தரத்தில் உருவாக்கப்பட்ட தொலைக்காட்சி குறிப்பலைகளை மற்றொரு சீர்தர பெட்டியில் காணவியலாது. எனவே பிந்நாட்களில் தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகள் இந்த மூன்று அமைப்புக்களிலும் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டன.

எண்ணிமத் தொலைக்காட்சி அமைப்புகள்

எண்ணிமத் தொலைக்காட்சி பரப்புகை அமைப்புகள்.[1]

எண்ணிமத் தொலைக்காட்சியில் இந்த அங்கங்கள் அனைத்துமே ஒன்றாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. உலகளவில் பெரும்பாலான நவீன தொலைக்காட்சி அமைப்புகளுமே எம்பெக் செலுத்துகை ஓடையை அடிப்படையாகக் கொண்டு எச்.262/எம்பெக்-2 பகுதி2 ஒளித கோடெக்கைப் பயன்படுத்துவதால் தொலைக்காட்சி பெட்டிகள், ஒளிதப்பதிவுக் கருவிகள் மற்றும் பிற துணை கருவிகளின் வடிவமைப்பு எளிதாகி உள்ளது. இருப்பினும் செலுத்துகை ஓடைகள் எவ்வாறு ஒளிபரப்பிற்கேற்றவாறு மாற்றப்படுகின்றன என்பதில் பெரும் வேறுபாடுகள் உள்ளன.

முன்னேறிய தொலைக்காட்சி முறைமைக் குழுவின் சீர்தரங்கள் (ATSC) அமைப்புகள் ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் எண்ணிம ஒளிதப் பரப்புகை-புவிப்புறம் (DVB-T) அமைப்புகள் உலகின் பிற பாகங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. எண்ணிம ஒளிதப் பரப்புகை-பு சீர்தரம் ஐரோப்பாவில் முன்னதாக வடிவமைக்கப்பட்ட செய்மதித் தொலைக்காட்சிக்கான எண்ணிம ஒளிதப் பரப்புகை-செய்மதியடனும் சில வட அமெரிக்க விண்ணின்று வீடு சேவையுடனும் ஒவ்வுமை உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது; கம்பிவடத் தொலைக்காட்சிக்காக எண்ணிம ஒளிதப் பரப்புகை-கம்பிவடம் உள்ளது. சப்பானில் மூன்றாவது வகையான, எண்ணிம ஒளிதப் பரப்புகை-புவிப்புறத்துடன் நெருங்கியத் தொடர்புடைய, புவிப்புற ஒருங்கிணைந்த சேவைகள் எண்ணிம பரப்புகையை பயன்படுத்துகிறது. தென்னமெரிக்க நாடுகளில் இதனுடன் தொடர்புள்ள பிரேசில்லின் தொலைக்காட்சிப் பரப்புகை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. சீன மக்கள் குடியரசு எண்ணிம புவிப்புற பல்லூடக பரப்புகை - ஒத்தியங்கு நேரப்பகுப்பு (DMB-T/H) தொழினுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

சான்றுகோள்கள்

  1. DVB.org, Official information taken from the DVB website

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya