தொல்குடி அமெரிக்கர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதி
இந்திய ஒதுக்கீடு (Indian reservation) ஐக்கிய அமெரிக்காவில் அவை அமைந்திருக்கும் பகுதியின் மாநில அரசுகளால் அல்லாது ஐக்கிய அமெரிக்க இந்திய விவகாரத் துறையின் கீழ் தொல்குடி அமெரிக்கர்களுக்கு (அமெரிக்க இந்தியர்) ஒதுக்கப்பட்டு அவர்களால் மேலாளப்படும் நிலப்பகுதிகளுக்கான சட்டப்பூர்வப் பெயராகும். ஐக்கிய அமெரிக்காவிலுள்ள 326[1] இந்திய ஒதுக்கீடுகளுக்கும் ஒரு தனிப்பட்ட தேசப் பெயர் உண்டு. நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 567 இனக்குழுக்களில்[3][4] அனைவருக்குமே ஒதுக்கீடு இல்லை; சில இனங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஒதுக்கீடும் சிலருக்கு ஒன்று கூட இல்லாதும் உள்ளது. தவிரவும், கடந்தகால நில ஒதுக்கீடுகளில் தொல்குடி அமெரிக்கரல்லாதோருக்கு விற்கப்பட்டமையால் சில ஒதுக்கீடுகள் மிகவும் துண்டாக்கப்பட்டுள்ளன; தொல்குடிகள், தனிநபர், தனியார் நிலம் என இவை தனித்தனி அயலகங்களாக பிரிபட்டுள்ளன. இத்தகைய பிரிவுகள் பெரும் நிர்வாக, அரசியல், சட்டப் பிரச்சினைகளை உண்டாக்குகின்றன.[5] அனைத்து ஒதுக்கீடுகளின் ஒத்துமொத்த பரப்பளவு 56,200,000 ஏக்கர்கள் (22,700,000 ha; 87,800 sq mi; 227,000 km2) ஆகும்.[1] இது கிட்டத்தட்ட ஐடஹோவின் பரப்பளவிற்கு இணையானது. அமெரிக்க மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பெரும்பாலான ஒதுக்கீடுகள் மிகவும் சிறியன. இருப்பினும் 12 இந்திய ஒதுக்கீடுகள் றோட் தீவை விடப் பெரியவை. மிகப் பெரிய நில ஒதுக்கீடாக நவயோ தேச ஒதுக்கீடு உள்ளது; இதன் பரப்பு மேற்கு வர்ஜீனியாவிற்கு இணையானது. ஒதுக்கீடுகள் நாட்டில் சமமாக இல்லாது பரவலாக உள்ளது; பெரும்பான்மையான ஒதுக்கீடுகள் மிசிசிப்பி ஆற்றின் மேற்கே உள்ளன.[6] தொல்குடியினருக்கு இப்பகுதிகளில் இறையாண்மை வழங்கப்பட்டிருப்பதால், மட்டுபடுத்தப்பட்ட போதும், சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து தொல்குடி நிலப் பகுதிகளில் சட்டங்கள் வேறுபடுகின்றன.[7] இந்தச் சட்டங்களின்படி ஒதுக்கீடுகளில், காட்டாக சுற்றுலாப் பயணிகளைக் கவர சூதாட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன. உள்ளக அரசு அல்லது கூட்டரசு அல்லாது தொல்குடியினரின் அவை இப்பகுதிகளில் ஆள்கின்றன. ஒவ்வொரு ஒதுக்கீட்டுப் பகுதியும் வெவ்வேறான அரசமைப்பு முறைமையைக் கொண்டுள்ளன. இவை சில நேரங்களில் சூழ்ந்துள்ள ஒதுக்கீடல்லாத பகுதியில் நிலவும் அரசமுறையைத் தழுவி இருக்கும். பெரும்பாலான தொல்கிடி ஒதுக்கீடுகளை கூட்டரசே நிறுவியது; மிகச்சிலவே, குறிப்பாக கிழக்கில், மாநில அரசால் நிறுவப்பட்டவை.[8] ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு ஏற்கப்பட்டபோது தொல்குடி அமெரிக்கர்களுக்கு தனித்த இறையாண்மை இருந்தது என்ற கருத்தியலின்படி "ஒதுக்கீடு" என்ற சொற்பயன்பாடு எழுந்தது. எனவே, துவக்க கால அமைதி உடன்பாடுகளில் தொல்குடி அமெரிக்கர்கள் பெரும்பகுதியான நிலத்தை அமெரிக்காவிற்கு இழந்தபோது இப்பகுதிகள் தங்களுக்கு ஒதுக்கிக் கொண்டவை என குறிப்பிடப்பட்டன. [9] கூட்டரசு இப்பகுதிகளை கைப்பற்றி அவர்களுக்கு தொடர்பில்லாத பகுதிகளில் கட்டாயமாக மாற்று நிலப்பகுதிகள் கொடுத்த நிலையிலும் இச்சொற்பயன்பாடு நீடித்தது. பெரும்பாலான தொல்குடி அமெரிக்கர்களும் அலாசுக்கா தொல்குடியினரும் தங்களுக்கான ஒதுக்கீடுகளில் இல்லாது வேறுபகுதிகளில், பல நேரங்களில் பீனிக்ஸ், லாஸ் ஏஞ்சலஸ் போன்ற பெரிய மேற்கத்திய நகரங்களில், வாழ்கின்றனர்.[10][11] 2012இல், 2.5 மில்லியனுக்கும் கூடுதலான தொல்குடி அமெரிக்கர்களில் 1 மில்லியன் பேர் ஒதுக்கீடுகளில் வாழ்கின்றனர்.[12] மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia