நீதித்துறை (judiciary, அல்லது அறமன்ற அமைப்பு) என்பது அரசால் இயற்றப்படும் சட்டங்களுக்கு சரியான புரிதல் கொடுத்து அவற்றைச் செயல்படுத்தும் நீதிமன்றங்களின் (அறமன்றங்களின்) அமைப்பாகும். நீதித்துறை பிணக்குகளுக்குத் தீர்வு காணும் அமைப்புக்களாகவும் உள்ளது. அதிகாரப் பிரிவினை கருதுகோளில் நீதித்துறை பொதுவாக சட்டமியற்றுவதுமில்லை (அதாவது, முழுமையான முறையில் இயற்றுவதில்லை;சட்டவாக்க அவைகளே இப்பொறுப்பை ஏற்றுள்ளன) அல்லது சட்டத்தை வலிந்து செயற்படுத்துவதுமில்லை (இது நிர்வாகத்துறையின் பொறுப்பாகும்); ஆனால் சட்ட விளக்கத்தைத் தருவதும் ஒவ்வொரு வழக்கிலும் தரவுகளுக்கேற்ப சட்டத்தை பயன்படுத்துவதும் இதன் பொறுப்புகளாக உள்ளன. சட்டத்தின் கீழ் அனைவருக்கும் சமநிலையான நீதியை நிலைநிறுத்துவதே அரசின் இந்த அங்கத்தின் முதன்மைப் பொறுப்பாகும். பொதுவாக இறுதி முறையீட்டு அறமன்றம் (உச்சநீதிமன்றம் அல்லது "அரசியல் யாப்பு நீதிமன்றம்" என இவை அழைக்கப்படும்) ஒன்றின் கீழ் அடுக்கதிகார முறையில் அமைந்த கீழ் அறமன்றங்களால் நீதித்துறை கட்டமைக்கப்பட்டிருக்கும்.
பல ஆட்சிப்பகுதிகளில் நீதித்துறைக்கு சட்டங்களை மீளாய்வு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்ட மீளாய்வு அதிகாரம் கொண்ட நீதிமன்றங்கள் அரசால் இயற்றப்பட்ட சட்டங்களை செல்லாதாக்க இயலும்; இந்தச் சட்டங்கள் முதன்மை சட்டத்துடனோ, அரசமைப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுடனோ அல்லது பன்னாட்டுச் சட்டங்களுக்கோ பொருந்தாதிருந்தால் இவ்வாறு செல்லாதாக்கலாம். அரசமைப்பினை சரியாக விளங்கிக் கொள்ளவும் செயற்படுத்தவும் நீதியரசர்கள் முதன்மைப் பங்காற்றுகின்றனர். மேலும் நடைமுறைப்படியான பொதுச் சட்டம் நிலவும் நாடுகளில் முதன்மையான அரசமைப்புச் சட்டங்களின் களஞ்சியமாக உள்ளனர்.
ஐக்கிய அமெரிக்காவில் அண்மைக் காலங்களில் நீதித்துறை பொருளியல் சிக்கல்களிலும் பொருளியல் உரிமைகளிலும் முனைப்புக் காட்டி வருகிறது.[3] 1980களில் இந்திய உச்ச நீதிமன்றம் வறியவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக பல பொது நலன் வழக்குகளை ஏற்று இந்திய அரசமைப்பின் பல அங்கங்களுக்கு விரிவான விளக்கங்கள் அளித்து வந்துள்ளது.[4]
பல வளர்ந்துவரும் நாடுகளிலும் மாறிவரும் நாடுகளிலும் நீதித்துறையின் வரவுசெலவுத் திட்டத்தை முழுமையாக நிர்வாகத்துறையே கட்டுப்படுத்துகிறது. இதனால் நீதித்துறை நிதி ஆதாரங்களுக்கு அரசையே நம்பி உள்ளது. இதனால் அதிகாரப் பிரிவினை பாதிக்கப்படுவதுடன் நீதித்துறையின் தனித்தன்மையும் பாதிக்கப்படுகிறது. நீதித்துறையில் நிலவும் ஊழல் இருவகைப்பட்டது: ஒன்று,அரசால் வழங்கப்படும் சலுகைகளும் பல்வேறு திட்டச் செலவுகளும் கொண்டது; மற்றது தனிநபர்களிடமிருந்தானது.[5] சிலநாடுகளில் நீதியரசர்களின் நியமனமும் இடமாற்றங்களும் நிர்வாகத்துறையால் கையாளப்படுகிறது. இதுவும் நீதியரசர்களை நிர்வாகத்துறைக்கு சாதகமாக தீர்வுகள் காண தூண்டுகின்றன.
"நீதித்துறை" என்ற சொல் சிலநேரங்களில் நீதிமன்ற அமைப்புக்களைத் தவிர அங்கு பணியாற்றும் நீதிபதிகள், நீதித் துறை நடுவர்கள் மற்றும் பிற பிணக்கு தீர்வாளர்களையும்அவர்களுக்கு துணை புரியும் அலுவலர்களையும் ஒடுமொத்தமாகக் குறிப்பிடலாம்.
வரலாறு
பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு சட்டமன்றத்தினர் நீதிமன்றங்களால் சட்டத்திற்கான விளக்கம் அளிக்கப்படுவதை நிறுத்தினர். சட்டமன்றம் மட்டுமே சட்டத்திற்கான விளக்கத்தை அளிக்க இயன்றது. ஆனால் இந்த நிறுத்தம் நெப்போலியன் காலத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது.[6]
குடிசார் சட்ட ஆட்புலங்களில் நீதிபதிகள் பொதுச் சட்டத்தைப் போன்றே சட்டப் புரிதலை மேற்கொள்கின்றனர்; இருப்பினும் பொதுச் சட்டத்தினை விட இது வேறானது; பொதுச்சட்டத்தில் மட்டுப்பட்ட அதிகாரம் சட்டமியற்றலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, பிரான்சில், உச்சநீதிமன்றம் அல்லது மாநிலங்களவைகளின் நிலைத்த நீதி என்பது பொதுச்சட்டத்தில் பின்பற்றப்படும் முன்காட்டிற்கு ஈடானது. இருப்பினும் லூசியானா உச்சநீதிமன்றம் இந்த இரு சட்ட முறைமைகளுக்கும் இடையேயுள்ள முதன்மை வேறுபாடாக இவ்வாறு குறிக்கிறது: பொதுச்சட்டத்தில் ஒற்றை நீதிமன்றத்தின் தீர்ப்பு பொதுச்சட்ட முன்காட்டிற்கு போதுமானதாக உள்ளது; ஆனால் குடிசார் சட்ட முறைமையில் அனைத்தும் ஒத்திசைந்த, தொடர்ச்சியான தீர்ப்புக்கள் நிலைத்த நீதி வழமைக்குக் காரணமாக அமைகின்றன.[7] மேலும், லூசியானா மேல்முறையீட்டு நீதிமன்றம் மிகத் மெளிவாக நிலைத்த நீதி என்பது ஓர் இரண்டாம்நிலை சட்ட மூலமே தவிர அதற்கு தனி அதிகாரம் இல்லை என்றும் பொதுச்சட்டத்தின் முன்காட்டிற்கு இணையானதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.[8]
பல்வகை செயற்பாடுகள்
பொதுச்சட்டம் நிலவும் நாடுகளில் நீதிமன்றங்கள், அரசமைப்புச் சட்டங்கள், அரசாணைகள், முறைப்படுத்தல்கள் போன்ற சட்டங்களைக் குறித்த சரியான புரிதலை வழங்குகின்றன. மேலும் முந்தைய வழக்குச் சட்டம் அடிப்படையில், சட்டமன்றங்கள் சட்டமியற்றாத வழக்குகளில், மட்டுபட்ட அளவில் சட்டங்களை ஆக்குகின்றன. எடுத்துக்காட்டாக, பெரும்பான்மையான பொதுச்சட்ட நாடுகளில் அலட்சியத்தினால் எழும் உரிமைத்தீங்குக்கு எந்த சட்டமன்ற சட்டத்திலிருந்தும் தீர்வு பெறப்படாது உள்ளது.
குடிசார் சட்ட நாடுகளில், நீதிமன்றங்கள் சட்டத்திற்கான புரிதலை வழங்குகின்றன;ஆனால் அவை சட்டத்தை ஆக்குவதிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். எனவே குறிப்பிட்ட வழக்குக்கிற்கான தீர்ப்பை மட்டுமே வழங்குகிறார்களே தவிர பொதுவான தீர்வுகளை முன்வைப்பதில்லை. சட்டநெறி வழக்குச் சட்டத்திற்கு இணையான பங்கு வகிக்கிறது.
ஐக்கிய அமெரிக்காவின் நீதிமன்ற அமைப்பில் உச்ச நீதிமன்றம் கூட்டாட்சி அரசமைப்பின் புரிதலை வழங்கும் அதிகாரம் கொண்டுள்ளது. இந்த அரசமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்து சட்டமன்ற சட்டங்களும் முறைப்படுத்தல் ஆணைகளும் பல்வேறு மாநிலங்களின் சட்டங்களும் இந்த நீதிமன்றத்தால் புரிதல் வழங்கப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்காவின் கூட்டாட்சி நீதிமன்ற முறைமையில் கூட்டாட்சி வழக்குகள் ஐக்கிய அமெரிக்க மாவட்ட நீதிமன்றங்கள் எனப்படும் விசாரணை நீதிமன்றங்களிலும் பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றங்களிலும் இறுதியாக உச்ச நீதிமன்றத்திலும் நடத்தப்பெறுகின்றன. மாநில நீதிமன்றங்கள் 98% வழக்காடல்களை மேற்கொள்கின்றன;[9] இவை வெவ்வேறு பெயர்களுடன் தனிப்பட்ட அமைப்புக்களையும் கொண்டுள்ளன. இவற்றின் கீழுள்ள விசாரணை நீதிமன்றங்கள் "பொது முறையீடு நீதிமன்றம்", என்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் "உயர்நிலை நீதிமன்றங்கள்" அல்லது "பொதுநலவாய நீதிமன்றங்கள்" என்றும் அழைக்கப்படுகின்றன.[10] நீதித்துறை முறைமையில், மாநிலமாக இருந்தாலுதம் கூட்டாட்சியாக இருந்தாலும், முதலில் முதல்நிலை நீதிமன்றத்தில் துவங்கி மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சென்று இறுதியில் கடைநிலை நீதிமன்றத்திற்கு வருகின்றன.[11]
பிரான்சில், சட்டம் குறித்த புரிதலை வழங்க இறுதிநிலை அதிகாரம் நிர்வாக வழக்குகளில் மாநிலங்களவையிடமும் குடிசார் மற்றும் குற்றவியல் வழக்குகளில் உச்சநீதிமன்றத்திடமும் (Court of Cassation) உள்ளது.
அர்கெந்தீனா போன்ற பிற நாடுகளில் கலவையான அமைப்புகள் நிலவுகின்றன. பெரும்பான்மையான அமைப்புகளில் உச்சநீதிமன்றம் இறுதிநிலை அதிகாரமாக உள்ளது. குற்றவியல் வழக்குகள் நான்கு படிநிலைகளைக் கொண்டுள்ளன; குடிசார் வழக்குகளுக்கு மூன்று படிநிலைகளே உள்ளன.
மேற்சான்றுகள்
↑Hamilton, Marci. God vs. the Gavel, page 296 (Cambridge University Press 2005): “The symbol of the judicial system, seen in courtrooms throughout the United States, is blindfolded Lady Justice.”
↑Fabri, Marco. The challenge of chanf for judicial systems, page 137 (IOS Press 2000): “the judicial system is intended to be apolitical, its symbol being that of a blindfolded Lady Justice holding balanced scales.”
↑Posner R. The Constitution as an Economic Document. The George Washington Law Review, November 1982, Vol. 56. No. 1
↑Jeremy Cooper, Poverty and Constitutional Justice, in Philosophy of Law: Classic and Contemporary Readings, edited by Larry May and Jeff Brown, Wiley-Blackwell, UK, 2010.
↑Barenboim, Peter (October 2009). Defining the rules. Vol. Issue 90. The European Lawyer. {{cite book}}: |volume= has extra text (help)