நீளவால் தாழைக்கோழி

நீளவால் தாழைக்கோழி
இராஜத்தானின் பாரத்பூர் நகரில் நீளவால் தாழைக்கோழி.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ஜகானிடே
பேரினம்:
Hydrophasianus

வாக்லர், 1832
இனம்:
H. chirurgus
இருசொற் பெயரீடு
Hydrophasianus chirurgus
(ஸ்கோபொலி, 1786)

நீளவால் தாழைக்கோழி அல்லது நீளவால் இலைக்கோழி அல்லது தாமரைக் கோழி (Pheasant-tailed Jacana, Hydrophasianus chirurgus) என்பது நீர்நிலைகளிலும், நன்னீர் குளங்களிலும், தாமரைத்தடாகங்களிலும், அல்லிக்குளங்களிலும், நதித்துவாரங்களிலும் காணப்படும் ஓர் தாமரைக் கோழி இனமாகும். இது ஹைட்ரோபாசியானஸ் என்ற பேரினத்தில் உள்ள ஒரே இனமாகும். இப்பறவையினம் மிதக்கும் தாவரங்கள் அருகும் நீர்நிலைகளை விரும்பி வாழும். மிகவும் நீண்ட கால் விரல்களினால் மிதக்கும் இலைகளின் மேல் நடக்கும் தன்மை கொண்டுள்ளன. இதன் காரணமாக பெரும்பாலும் இவை ஓடும் நதிகளைத் தவிர்ப்பதையும் காண இயலும், ஏனெனில் ஓடும் நீரில் பயிர்கள் பல்கிப் பெருகுவதில்லை. தாவரங்களின் மீது நடக்கவும் ஓடவும் விருப்பப்பட்டாலும், கால்விரல்களின் நடுவினில் சவ்வு இல்லாவிடினும் இவற்றால் மிகவும் நன்றாக நீந்தவும் முடியும்.

பொது விவரம்

எடையும் உருவ அளவும் பெரிதாக விளங்கும் ஒரு பெண் பல ஆண்களோடு புணரும் பழக்கமுள்ள இப்பறவைகளின் தோற்ற விவரம் கீழ்க்கண்டவாறு:

  • உடலளவு: 500-580 மில்லிமீட்டர் நீளம் (புணரும் காலம்); 310-390 மில்லிமீட்டர் நீளம் (புணராக்காலம்)
  • வால் 194-376 மி.மீ. நீளம் (புணரும் காலம்); 110-117 மி.மீ. நீளம் (புணராக்காலம்).
  • இறகு விரிகையில் 190-244 மி.மீ. அகலம்.
  • அலகு 23-30 மி.மீ. நீளம்.
  • எடை ஆண்களுக்கு 113-135 கிராம்களும் எடை மிகுதியான பெண்கள் 205-260 கிராம்கள் வரையிலும் இருக்கக்கூடும்.

தோற்றம்

மிகவும் எளிதாக அடையாளம் கொள்ளக்கூடிய பறவை இனம் இது. எனினும், ஆண் பெண் என்று இரு பாலினங்களுமே வெறுபாடின்றி ஒத்த நிறத்துடன் காணப்படுகின்றன. எனினும் புணரும் காலங்களில் மிகவும் வண்ணமயமாக காணப்பெறுகின்றன. இரண்டு காலங்களிலும் கீழ்த்தாடை மற்றும் மார்பகப்பகுதிகள் வெண்மை நிறம் கொண்டிருக்கும்.

புணரும் காலத்தோற்றம்

நான்கு முதல் ஆறு மாத காலம் வரை புணரும் காலத்தோற்றத்தோடு காணப்பெறுகின்றன. வெண்மார்பின் குறுக்கே ஒரு கருப்பு வரி உருவாகும். வால் நீண்டு கருத்த வண்ணம் கொள்ளும். இந்த உடலின் குணத்தின் காரணமாகவே இவ்வகைப் பறவைக்கு அதன் பெயர் வந்தது. கழுத்தின் பின்புறம் தங்க நிறத்தில் பட்டை ஒன்று தோன்றும். முகம் முழுதும் வெள்ளை நிறம் தொன்றும். தங்கமும் வெண்மையும் சேருமிடம் குறுகிய கருப்பு வரி ஓடக்காணலாம். இறகுகளின் இறுதியில் வெள்ளை நிறம் தோன்றும். தலையின் உச்சியில் கருப்பு வண்ணம் தொன்றும். இறகுகளின் மீதிருந்த செம்மஞ்சள் நிறம் கருத்த சாம்பல் நிறம் கொள்ளும்.

மற்ற நேரத்தோற்றம்

சாதாரண நேரங்களில் சிறகுகளில் தங்கம் பொன்ற செம்மஞ்சள் நிறம் மெலோங்கி இருக்க கரும் புள்ளிகள் தென்படும். தெளிவான ஓரு கருங்கோடு அலகு பின்புற நுணியில் தொடங்கி தோள்பட்டை வரை செல்லும். தலையின் உச்சியில் கருப்பு வண்ணம் உண்டு. கழுத்தின் பின்புறம் தங்கப்பட்டை மறைந்து விட்டு இளஞ்சாம்பல் நிறங்கொள்ளும்.

பரம்பல்

நீளவால் தாழைக்கொழிகள் இந்தியா, தென்கிழக்கு ஆசியா, இந்தோனேசியா பகுதிகளில் பரவியுள்ளன. இமாலய மலைச்சாரல்களிலும் சீனாவிலும் செல்லும் இவை மத்திய மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வந்து புணர்கின்றன. தாய்வானில் மிகவும் அரிதாகவும், ஆத்திரேலியாவிலும் காணப்பெறுகின்றன.

உறைவிட எல்லைகள்

தன் எல்லைகளை மிகவும் கவனத்துடன் காக்கும் இப்பறவையினத்தில் ஆணுக்கு பெண்களைக்காட்டிலும் சிறிய எல்லைகளே. ஓரு பெண்ணின் எல்லையானது பல ஆண்களின் எல்லைகளை உள்ளடக்கி இருப்பது, பெண் பறவை தன் எல்லைக்குள் உள்ள அனைத்து ஆண்களோடு புணர ஏதுவாக உள்ளதை அறியலாம். இவை பதட்டப்படும் போதும் வேறொரு பறவை தன் எல்லைக்குள் வரினும் ஈஈஈஈஈஈ-ஆஆ, என்ற கிரீச்சிடும் ஒலியை எழுப்புகின்றன. இவை பூச்சிகளை அதிகமாக உட்கொண்டு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்கிறது. [2]

உணவுப்பழக்கம்

பூச்சுண்ணிகளான இப்பறவைகள் நடந்த படியோ நீந்திய படியோ வெட்டுக்கிளி பொன்ற பூச்சிகளோ மற்றும் முதுகெலும்பில்லா சிறு உயிரினங்களோ, நீரின் மேலோ நீரில் மிதக்கும் தாவரங்களின் மீது அமரும்போது, வேட்டையாடுகின்றன.

புணர்ச்சியும் முட்டையிடுதலும்

இவை வாழும் மிதக்கும் தாவரங்களின் மீது பெண் சமநிலையாய் நிற்க, மற்ற பல பறவைகள் போல் ஆண் பறவை பெண்ணின் மீது ஏறி அமர்ந்து புணரும். 20 முதல் 40 வினாடிகளில் புணர்ச்சி முடிந்து விடும். இதன் பிறகு ஆண் பறவை நீர்த்தாவரங்களின் மேல் உள்ள தாவரங்களைக் கொண்டு ஒரு பேழைபோல் மிதக்கும் கூடுகளைக் கட்டித் தர, பெண் அதில் சராசரியாக 4 முட்டைகள் இடும். இதன் பிறகு பெண் அடுத்த ஆணோடு புணரக்கிளம்பி விடும். கருஞ்சிவப்பு நிற முட்டைகள் சாதாரண கோழி முட்டைகள் பொன்றிருக்கும். காகங்கள், கழுகுகள், பருந்துகள் மற்றும் நீர் உடும்புகள் விரும்பி உண்ணும் இம்முட்டைகளை ஆண் கண்ணும் கருத்துமாய் பேணுகின்றன. எனினும் இடும் 4 முட்டைகளுள் இரண்டு அல்லது மூன்றே தப்பிப்பொரிக்கின்றன.

முட்டைகள் அடைகாக்கும் காலம்: 19-21 நாட்கள்.

குஞ்சுகளைப்பேணுதல்

குஞ்சுகள் பொரியும் வேளையில் கருத்த வண்ணம் கொண்டிருந்தாலும், ஈரம் காய்ந்தவுடன் பெரிய புண்ராக்கால பறவையின் வண்ணங்களை கொண்டிருக்கின்றன. இவை வெளிவந்த சில நிமிடங்களிலேயே தனியாக வேட்டையாடத்தொடங்கினாலும் தந்தையின் பார்வையைத்தாண்டி செல்லுவதில்லை. 45 முதல் 60 நாட்கள் வரை குஞ்சுகள் தந்தையின் பராமரிப்பில் இருந்த பிறகு பறக்க இயலும் காலத்தில் தனக்கென வேறு எல்லையைத்தேடிக்கொள்ளும்.

குஞ்சுகளைக்காத்தல்

காகம், கழுகு, பருந்து மற்றும் மனிதரைக்கண்டால் தந்தை குரலிட குஞ்சுகள் உடனே வந்து தந்தையின் இறகினுள் ஒளிந்து கொள்ளும் பழக்கம் உள்ளது.

இளைப்பாற இறகு படுக்கை

குஞ்சுகள் சிறிது நேரம் மேய்ந்து விட்டு களைப்பறும் வேளைகளில் தந்தை தன் இறகுகளுக்குள் குஞ்சுகளை அனுமதித்து இளைப்பாற விடுகின்றது. இவ்வேளைகளில் தந்தை நின்று கொண்டோ அமர்ந்தபடியொ இருக்கக்கூடும். நின்றபடி இருக்கும் தந்தையின் இறகுகளிலிருந்து பல கால்கள் வெளியே நீட்டியிருப்பதைக்காணலாம்.

படிமங்கள்

உசாத்துணை

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hydrophasianus chirurgus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. BirdLife International (2012). "Hydrophasianus chirurgus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Retrieved 16 சூலை 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. பூச்சி அழிப்பானாக செயல்படும் அரிய வகை ஜசானா பறவைகள்: நீரில் மிதக்கும் கூடுகளைப் பாதுகாக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியர் தி இந்து தமிழ் 15 செப்டம்பர் 2016
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya