நைட்ராட்டின்
நைட்ராட்டின் (Nitratine) என்பது NaNO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். நைட்ராடைட்டு, கனசதுர நைட்டர், சிலி சால்ட்பீட்டர் போன்ற பல பெயர்களாலும் இக்கனிமம் அழைக்கப்படுகிறது. சோடியம் நைட்ரேட்டின் இயற்கையாகத் தோன்றும் வடிவமே நைட்ராட்டின் ஆகும். சால்ட்பீட்டரின் சோடியம் வரிசைச் சேர்மம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. முக்கோணப் படிகத் திட்டத்தில் இது படிகமாகிறது. ஆனால் அரிதாக நல்ல படிகவடிவத்தில் நைட்ராட்டின் தோன்றுகிறது. இதன் படிக வடிவம் கால்சைட்டின் படிகவடிவத்தை ஒத்திருக்கிறது. மென்மையும் இலேசானதாகவும் உள்ள நைட்ராட்டினின் மோவின் கடினத்தன்மை அளவுகோல் மதிப்பு 1.5 முதல் 2 என மதிப்பிடப்படுகிறது. 2.24 முதல் 2.29 என்ற ஒப்படர்த்தியும், nω=1.587 மற்றும் nε=1.336 முதலான ஒளிவிலகல் எண் மதிப்பும் பிற சில அளவீடுகளாகும். [3] பன்னாட்டு கனிமவியல் சங்கம் நைட்ராட்டின் கனிமத்தை Ntt[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. வழக்கமான நைட்ராட்டின் படிகங்கள் வெள்ளை பூசப்பட்டது போலவும் சாம்பல் முதல் மஞ்சள் நிற பழுப்பு நிற பொருண்மைகளாகவும் இருக்கின்றன. அரிதான படிகங்கள் பொதுவாக கால்சைட்டு கட்டமைப்பின் அசமபக்கமான ஒழுங்கற்ற வடிவத்தைக் கொண்டுள்ளன. வறண்ட சூழலில் படிகத்தூளாக மட்டுமே இது காணப்படுகிறது. நீரில் மிகவும் கரையக்கூடியதாகவும் காற்றில் இருந்து தண்ணீரை உறிஞ்சக் கூடியதாகவும் ஈரப்பதமான காற்றில் வெளிப்படும் போது சோடியம் நைட்ரேட் கரைசல் தேங்கிய ஒரு குட்டையாகவும் மாறும். நைட்ராட்டின் ஒரு காலத்தில் உரம் மற்றும் பட்டாசு உள்ளிட்ட பிற இரசாயன பயன்பாடுகளுக்கு உதவும் நைட்ரேட்டுகளின் முக்கிய ஆதாரமாக இருந்தது. கலிபோர்னியாவிலுள்ள மலைத் தொடர்களிலும் சிலியின் அட்டகாமா பாலைவனத்திலும் இது 1845 ஆம் ஆண்டு முதல் அறியப்பட்டு வருகிறது. அமோனியா தயாரிக்கும் ஏபர்-போசு செயல்முறை தடைசெய்யப்பட்ட அமெரிக்காவில் இன்னமும் கூட இயற்கை வேளாண்மையில் இது பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பன்னாட்டு இயற்கை வேளாண் முறையில் இது தடை செய்யப்பட்டுள்ளது. [5] மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia