பத்தராய்ப் பணிவார்

"பத்தராய்ப் பணிபவர்க ளெல்லார்க்கும் மடியேன்" - திருத்தொண்டத்திருத்தொகை., ஈசனுக்கே அன்புடைய சிவனடியாரைக் கண்டால் அவருடைய சாதி முதலியன விசாரிக்காமல் அவர்களை இறைவனெனவே கொண்டாடி, தாய்ப்பசுவின் கன்று சென்றாற் போன்று பெருவிருப்புடன் அணைந்து பணிவுடையராய் இன்னுரை பகரும் இயல்புடையவர்கள். பேரன்பினால் சிவபெருமானை எவ்விடத்தும் யாவரும் வழிபடக் கண்டால் இனிது மகிழ்ந்து பாவனையால் நோக்கினால் பலர் காணப்பயன் பெறுபவர்.[1]

அன்பினால் யாவர்க்கும் மேம்பட்டவர்களாய்ச் சிவபெருமானையும் சிவனடியார்களையும் ஆராத காதலினால் உவகையுடன் விரும்பி வழிபடுபவர்கள். தம் உடம்பினாற் செய்வினைகள் யாதாயினும் அவ்வினையால் உளவாகும் நற்பயன்களைச் சிவபெருமான் திருவடிக்கே உரிமை செய்து கொடுப்பவர்கள். சிவபுராணங்களை அறிந்தவர் சொல்ல விரும்பிக் கேட்குந் தன்மையராய் இறைவன் திருவடித் தாமரையினைச் சேர்வதற்கு உரியவர்கள்.

ஈசனையே பணிந்து உருகி இன்பமிகக் களிப்பெய்தி, வாய்தழுதழுப்பக் கண்ணீர் அருவிபோற் சொரிய மெய்ம்மயிர் சிலிப்ப அனிபினால் விதிர் விதிக்கும் குணத்தால் மிக்கவர்கள்.நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் மன்றாடும் இறைவன் திருவடிகளை மறவாத உணர்வுடையவர்கள்.

சிவபெருமானுக்கு ஆட்பட்ட தம் அடிமைத் திறத்தைப் பிறர்க்குப் புலப்படுத்தி அதனாற் பயன்கொள்ளாத் தூய நெஞ்சமுடையவர்கள்.

மேற்குறித்த எண் பெருங் குணங்களாலும் இவ்வுலகினை விளக்கும் பெருமை வாய்ந்த அடியார்களே பத்தராய்ப் பணிவார் ஆகிய திருக்கூட்டத்தாராவர்.

நுண்பொருள்

கூடும் அன்பினில் கும்பிடுதல் வீடும் வேண்டா விறலாகும்.

ஈசனையே பணிந்துருகி இன்பம் மிகக் களிப்பெய்தி
பேசினவாய் தழுதழுப்பக் கண்ணீரின் பெருந்தாரை
மாசிலா நீறழித் தங்கு அருவிதர மயிர் சிலர்ப்பக்
கூசியே உடலங் கம்பித்திடுவார் மெய்க்குணம் மிக்கார் - பெரியபுராணம்

மேற்கோள்கள்

  1. பத்தராய்ப் பணிவார் சருக்கம்

உசாத்துணைகள்

  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya