பத்தும் பதிகம்

பத்தும் பதிகம் [1] என்பது ஒரு திரட்டு நூல். சைன சமயத் தோத்திரப் பாடல்களைக் கொண்டது. 'பல ஜினதாசர்களாற் செய்தருளிய பத்தும் பதிகத் தோத்திரத் திரட்டு' என்னும் தலைப்பில் இது வெளிவந்துள்ளது. [2]

இதில் 26 பதிகங்களும், 280 பாடல்களும் உள்ளன. யாவும் நாலடி விருத்தங்களும் கொச்சகக் கலிப்பாவுமே. ஆசிரியப்பாவோ, பிற பாவோ, பாவினங்களோ இல்லை. யாவும் பதிக அமைப்பினைக் கொண்டவை. இவற்றில் 16 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டவை. நான்கு.

தசதர்மம்

தசதர்மம் என்பது சைன சமய அறநெறி நூல். இதில் 26 கலி விருத்தங்கள் உள்ளன. அந்த அறநெறிகளைக் கடைப்பிடிப்பதால் விளையும் நன்மைகளும், கடைப்பிடிக்காவிட்டால் விளையும் தீமைகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.

நூல் பற்றிய குறிப்புகள்

  • குணதரன் சேவடி வணங்கித் தசதர்மநெறி அறைகுவன் – என்ற அடியில் நூல் தொடங்குகிறது.
  • இல்லறத்தாருக்கு உரிய 10 தர்மங்கள் இதில் சொல்லப்பட்டுள்ளன.
  1. கொல்லாமை
  2. பொய்யாமை
  3. கள்ளாமை
  4. காமத்தை ஒல்லாமை
  5. ஒண்பொருளை வரைதல்
  6. புலால் உண்ணாமை
  7. தேன் உண்ணாமை
  8. கள் உண்ணாமை
  9. இருளில் உண்ணாமை
  10. நல்லாரைப் பணிதல்

இந்த நூலில் வரும் பாடல் ஒன்று: எடுத்துக்காட்டு [3]

மான் தோலில் இடப்பட்ட மானிடர் தம் மகவு ஆகிப்
பேன் தூங்கும் மயிரினராய்ப் பேய் போலச் சுழல்வதுவும்
ஈன்றவளே கான்று இகழ்ந்து உரைக்கும் நிலைமையும்
தேன் உவந்து முன் உண்ட தீவினையின் பயன் ஆகும்.

திருநறுங்கொண்டைமலைப் பதிகம்

திருநறுங்கொண்டைமாலைப் பதிகம் பாடியவர் பெயர் தெரியவில்லை.

பாடல் ஒன்று - எடுத்துக்காட்டு [4]

குடைகள் ஒன்று ஒன்றின்மிசை கலை வருண்டு எங்கும் மிகு குமுகு மென் பிண்டி நிழல்
படைகள் ஒன்றி இன்றி இரு வினை எனும் பண்டை முது பகை புறம் கணவனிடம்
இடர் அழுங்கும் பரிசு சுடர் விளங்கும் கனகம் என வருந்தும் திரு உளத்து
இட தவம் கொண்டு செறிபவர்கள் தம் சங்கம் வளர் திருநறுங்கொண்டை மலையே

திருமயிலாப்பூர் பத்தும் பதிகம்

இது மயிலாப்பூரில் எழுந்தருளியுள்ள அருகனைப் பத்துப் பாடல்களில் போற்றுகிறது. ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இணைக்கப்பட்டு எளிமையாகப் பொருள் உணரும் வண்ணம் இது அமைந்துள்ளது.

பாடல் - எடுத்துக்காட்டு [5]

அடல் வலையும் வெம் திறலால் அனங்கன் எனும் அவர் ஆசை அகத்திப் பூக
மடல் வலையப் பொழில் மயிலை மரகத மா மலை தன்னை அன்னாள் இன்னாள்
உடல் வலையம் உறப் பணிந்து அங்கு ஒண் பொருளை ஓராதே பிறவி என்னும்
கடல் வலையம் கைநீந்திக் கரை காணாக் கருதினேன் கபடனேனே.

வர்த்தமான சுவாமி தோத்திரப் பதிகம்

இது இந்தத் தொகுப்பு நூலில் எட்டாம் பதிகமாக உள்ளது. ஒவ்வொரு பாடலும் "சீவர்த்தமானன் எனும் தீர்த்தன் நீயே" என்னும் தொடரைக் கொண்டு முடிகிறது. இதன் பாடல்கள் நாககுமார காவியம் என்னும் நூலில் தோத்திரப் பாடல்களாக வைக்கப்பட்டுள்ளன.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 131. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  2. 1912 ஆண்டுப் பதிப்பு, காஞ்சியில் அச்சிடப்பட்டது
  3. பொருள்தெரியும் பாங்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது.
  4. பொருள்நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
  5. பொருள் நோக்கில் சொற்பிரிப்பு
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya