பத்மநாதன் இராமநாதன்
தேசமானிய பத்மநாதன் இராமநாதன் (Pathmanathan Ramanathan, 1 செப்டம்பர் 1932 - 7 டிசம்பர் 2006) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், நீதிபதியும் ஆவார். இவர் உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், மீயுயர் நீதிமன்றம் ஆகியவற்றில் நீதிபதியாகவும், மேல் மாகாண ஆளுநராகவும் பதவியில் இருந்தவர்.[1][2] வாழ்க்கைச் சுருக்கம்சங்கரப்பிள்ளை பத்மநாதன், மற்றும் சேர் பொன்னம்பலம் இராமநாதனின் பெயர்த்தியான சிறீமணி என்பவருக்கும் பிறந்தவர் இராமநாதன்.[1][3] இராமநாதன் கொழும்பு புனித யோசேப்பு கல்லூரியிலும், தென்னிந்தியாவில் மொன்ட்ஃபோர்டு உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார்.[1][3][4][5] பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்ட பின்னர் ஐக்கிய இராச்சியம் சென்று வேல்சு பல்கலைக்கழகத்தின் புனித தாவீது கல்லூரியில் உயர்கல்வி கற்றார்.[1][3][4][5] இராமநாதன் கொழும்பைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பையா சரவணமுத்து என்பவரின் மகள் மனோ என்பவரை திருமணம் புரிந்தார்.[6] பணிஇலங்கை திரும்பிய பின்னர் இராமநாதன் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் சில காலம் பணியாற்றினார்.[3] பின்னர் மீயுயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[1][5] 1970களின் இறுதியில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் முடிக்குரிய வழக்குரைஞராக இணைந்தார்.[1][3][4][5] 1978 இல் உயர்நீதிமன்ற நீதிபதியாக மாத்தறை, அனுராதபுரம், குருணாகல், கொழும்பு ஆகிய இடங்களில் பணியாற்றினார்.[1][3][4][5] 1985 இல் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[1][3][5] பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரானார்.[3][5] அதன் பின்னர் மீயுயர் நீதிமன்ற நீதிபதியானார்.[1][3][4][5] இராமநாதன் டென் ஹாக் நிரந்தர நடுவர் நீதிமன்ற உறுப்பினராகவும், இந்தோ-பசிபிக் சட்ட சபை உறுப்பினராகவும், பிரித்தானிய அறிஞர்கள் சபையின் தலைவராகவும் இருந்துள்ளார்.[3][4] இலங்கையின் இரண்டாவது உயர் விருதான தேசமானிய விருதை அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் இருந்து பெற்றார்.[3][4] இறுதிப் பகுதிமீயுயர் நீதிமன்றத்தில் இருந்து இளைப்பாறிய பின்னர், இராமநாதன் 2000 ஆம் ஆண்டில் மேல் மாகாணத்தின் 4வது ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[1][3][5] 2002 பெப்ரவரி வரை அவர் அப்பதவியில் இருந்தார். பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் வேந்தராக 2005 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.[7] இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராகவும், பொன்னம்பலவாணேசுவரர் கோயில் உட்படப் பல இந்து சமய நிறுவனங்களின் அறங்காவலராகவும் இருந்து சேவையாற்றினார்.[1][3] சுழல் கழக உறுப்பினராகவும், மற்றும் விடுதலைக் கட்டுநராகவும் இருந்து சேவையாற்றினார்.[1] இராமநாதன் 2006 டிசம்பர் 7 ஆம் நாள் கொழும்பில் காலமானார்.[1][8][9] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia