பனாமா நகரம்
பனாமா நகரம் (Panama City, எசுப்பானியம்: ciudad de Panamá) பனாமா குடியரசின் தலைநகரமும் மிகப்பெரும் நகரமும் ஆகும்.[2][3] இதன் மக்கள்தொகை 880,691 ஆகும்; பெருநகரப்பகுதியின் மக்கள்தொகை 1,440,381.[4] பனாமா கால்வாயின் அமைதிப் பெருங்கடலோரத்தில் பனாமா மாநிலத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. அரசியல், நிர்வாக மையமாக விளங்கும் இந்த நகரம் பன்னாட்டு வங்கி மற்றும் வணிகத்திற்கும் மையமாக விளங்குகின்றது. [5] உலக நகரம் என வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த நகரம் இவ்வாறான மூன்று மத்திய அமெரிக்க நகரங்களில் ஒன்றாகும்.[6] பனாமா நகரத்தின் சராசரி தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி $15,300 ஆகும்.[7] அதியுயர் கட்டிடங்கள் மிகுந்த பனாமா நகரைச் சுற்றிலும் வெப்பமண்டல மழைக்காடுகள் உள்ளன. மத்திய அமெரிக்காவிலேயே மிகவும் போக்குவரத்து மிக்க பனாமாவின் டோக்குமென் பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து உலகின் பல முதன்மை இடங்களுக்கும் நாள்தோறும் வானூர்தி சேவைகள் இயக்கப்படுகின்றன. பிரேசிலின் குரிடிபேயுடன் பனாமா நகரமும் 2003ஆம் ஆண்டிற்கான அமெரிக்க பண்பாட்டுத் தலைநகரமாக தெரிவு செய்யப்பட்டது. பன்னாட்டு வாழ்க்கை இதழின் ஆய்வுப்படி பணி ஓய்விற்குப் பிறகு வாழ்வதற்கான இடங்களில் உலகின் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக பனாமா நகரம் விளங்குகின்றது. பனாமா நகரம் ஆகத்து 15, 1519இல் எசுப்பானிய தேடலாய்வாளர் பெத்ரோ அரியசு தெ அவிலாவால் நிறுவப்பட்டது. இங்கிருந்துதான் பெருவின் இன்கா பேரரசை தேடும் பயணங்கள் துவங்கின. அமெரிக்க கண்டங்களின் வரலாற்றின் பல வணிகத்தடங்களுக்கு நிறுத்தல் இடமாகவும் இருந்துள்ளது. இதன் மூலமாகவே தங்கமும் வெள்ளியும் எசுப்பானியாவிற்கு ஏற்றுமதியானது. சனவரி 28, 1671 அன்று என்றி மோர்கன் என்பவரால் பனாமா நகரம் தீயிடப்பட்டு அழிந்தது. இரண்டாண்டுகள் கழித்து சனவரி 21, 1673இல் முதல் குடியிருப்பிலிருந்து 8 km (5 மைல்கள்) தொலைவிலிருந்து மூவலந்தீவில் மீளமைக்கப்பட்டது. முன்பு தீயிடப்பட்டு அழிப்பட்ட நகரத்தின் இடுபாடுகள் இன்னமும் உள்ளன; இவை பனாமா வீகோ எனப்படுகின்றன; சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் இடமாக உள்ளது. மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia