பாஞ்சாலி சபதம்
மகாபாரதக்கதையைப் பெண்ணுரிமைக் காப்பியமாகத் தமிழில் சுப்பிரமணிய பாரதி வடித்துத் தந்ததே பாஞ்சாலி சபதம். இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பாரதப் போராகவும், பாஞ்சாலியைப் பாரதத் தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்பு இது. இலக்கிய நயமும், கவிநயமும் கொண்டுள்ளது. பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் கொண்டது. இந்நூலில் அழைப்புச் சருக்கம் அல்லது சூழ்ச்சிசருக்கம், சூதாட்டச்சருக்கம், அடிமைச்சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச்சருக்கம் என ஐந்து சருக்கங்களில் நானூற்றுப் பன்னிரண்டு (412) பாடல்கள் உள்ளன. முதல் பாகத்தில் முதல் இரண்டு சருக்கங்களும் எஞ்சிய மூன்று சருக்கங்களும் இரண்டாம் பாகத்திலும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாகமும் கடவுள் வாழ்த்துடன் தொடங்குகிறது. அவ்வாழ்த்தில் பராசக்தி மற்றும் கலைமகள் பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதன் முதல் பாகம் 1912-ஆம் ஆண்டு பாரதியாரால் வெளியிடப்பட்டது அதன் பின்னர் 1921 ஆம் ஆண்டு பாரதி மறைந்தார்; அவர் மறைவுக்குப் பின்னர் 1924-ஆம் ஆண்டு இரண்டாம் பாகத்தோடு முழுமையான பாஞ்சாலி சபதம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. சிந்து என்னும் பா வகையில் ஆக்கப்பட்ட இந்நூல் எளிய தமிழ்நடையினைக் கொண்டது. இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia