பிரதம மந்திரி மலிவு விலை மருந்துகள் திட்டம்

பிரதம மந்திரி இந்திய மக்கள் மருந்தகம் (பிரதான் மந்திரி பாரதிய ஜனவுஷதி பரியோஜனா)
துறை மேலோட்டம்
அமைப்பு2008; 17 ஆண்டுகளுக்கு முன்னர் (2008)
தலைமையகம்புது தில்லி, இந்தியா
மூல நிறுவனம்மருந்தியல் துறை
வலைத்தளம்www.janaushadhi.gov.in

பிரதம மந்திரி இந்திய மக்கள் மருந்தகம் (பிரதான் மந்திரி பாரதிய ஜனவுஷதி பரியோஜனா - PMBJP) என்பது இந்திய நாட்டின் மக்களுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகளை விற்பதற்காக இந்திய அரசின் மருந்தியல் அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இவை பிரதான் மந்திரி பாரதிய ஜனவுஷதி பரியோஜனா கேந்திரா (PMBJK) என்றழைக்கப்படும் மக்கள் மருந்தகத்தின் மூலம் விற்பனையில் ஈடுபடுகின்றன.[1]

பிரதம மந்திரியின் மலிவு விலை மருந்து திட்டம், மருந்தகக் கடைகளில் பொதுவான மருந்துகளை குறைந்த விலையில் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இவை தனியார் மருந்தகங்களில் விற்கப்படும் விலையுயர்ந்த தரமிக்க மருந்துகளுக்கு இணையானவையாகும். மத்திய அரசின் மருந்துத் துறையின் கீழ், அனைத்து பொதுத் துறை நிறுவனங்களின் ஆதரவுடன், இந்த மையங்கள் மூலம் பொதுப்படையான மருந்துகளின் கொள்முதல், விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை ஒருங்கிணைக்க இந்திய மருந்து பொதுத்துறை நிறுவனங்களின் பணியகம் (பிபிபிஐ) ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டில் அப்போதைய ஐ.மு.கூ அரசால் தொடங்கப்பட்டது. 2014 மார்ச் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் 80 கடைகள் மட்டுமே துவங்கப்பட்டு இயங்கி வந்தது. 2008 முதல் 2014 வரை ஐ.மு.கூ அரசாங்கத்தின் இரண்டாம் ஆட்சி காலத்தில் கிட்டத்தட்ட 100 பொதுவான மருந்துகளே இந்த திட்டத்தின் கீழ் இருந்தன.[2]

2015 செப்டம்பரில், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம், "பிரதான் மந்திரி ஜன் ஔசதி யோஜனா" என மறுபெயரிட்டு மீண்டும் இத்திட்டத்தை விரிவுபடுத்தியது. நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் "மக்கள் மருந்தகம்" என்ற தனிப்பட்ட விற்பனை நிலையங்கள் மூலம் இம்மருந்துகளை விற்பனை செய்வதாக பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

நவம்பர் 2016 ஆம் ஆண்டில், இந்தத் திட்டத்திற்கு மேலும் உத்வேகம் அளிக்க, மீண்டும் "பிரதான் மந்திரி பாரதிய ஜனௌசதி பரியோஜனா" (PMBJP) எனப் பெயர் மாற்றப்பட்டது.[3]அதன்படி 2016 நவம்பர் 2ஆம் தேதி, தமிழ்நாட்டின் முதன் மக்கள் மருந்தகம் கோயம்புத்தூரில் திறக்கப்பட்டது.[4]

2014 முதல் 2017 வரை, 636 மருந்துகள் மற்றும் 132 அறுவை சிகிச்சை/நுகர்வுப் பொருட்கள் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.[5] 2019ல் ஜன் ஔசதி சுவிதா ஆக்சோ-பயோடிகிரேடபிள் சானிடரி நாப்கின்கள் 1 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் தொடக்கத்தில் இருந்து, 2023ம் ஆண்டு பிப்ரவரி வரை 35.26 கோடிக்கும் அதிகமான ஜனஉசதி சுவிதா சானிட்டரி பேடுகள் கேந்திரங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.[6][7]

30 நவம்பர் 2023 இல் இத்திட்டத்தின் 10,000 ஆவது மருந்தகம், ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் எய்ம்ஸ் மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.[8]

காலவரிசை

வருடம் எண்ணிக்கை வருட விற்பனை
2008[9] 199 திட்டத் தொடக்கம்
2014 240 3 கோடி
2015–16 மறு தொடக்கம்
2015–16 540[10] 12 கோடி
2016–17 960 33 கோடி
2017–18 3193 140 கோடி
2018–19 5440[11] 315 கோடி
2019–20 6306 433 கோடி
2020–21 7557 665.83 கோடி
2021–22 8640[12] 893.56 கோடி[13]
2022–23 9182[14] 1094.84 கோடி[13]
2023–24 10006[15] 1470 கோடி (ஜீன் 2014ல்)
2024-25 14080[16]
  • உத்திரப்பிரதேசத்தில் 2210 கடைகளும், கேரளாவில் 1228 கடைகளும், கர்நாடகாவில் 1225 கடைகளும் மற்றும் தமிழ்நாட்டில் 1107 கடைகளும் நாடு முழுவதும் 12616 கடைகளும் ஜீன் மாதம் 2024 வரை திறக்கப்பட்டுள்ளது. 35%க்கும் அதிகமான கடைகள் பெண்களால் நடத்தப்படுகின்றன.[17]

தாக்கமும் & விளைவுகளும்

  • 2016ல், 199 மருந்துகள் இந்த திட்டத்தின் வழியே விற்கப்பட்டுவந்தன.[18]
  • 2017ல், 98 வகையான நோய்களுக்கு தேவைப்படும் பொது மருந்துகள் 700க்கும் மேற்பட்டவைகள், மேலும் 164 அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் பொருட்கள் விற்கப்பட்டுவந்தன.[19]
  • மார்ச் 2018ல், சுவேதா என்ற பெயரினில் மகளிருக்கான நாப்கின் விற்பனை தொடங்கப்பட்டன.[20]
  • 2019ல், 900 வகையான பொது மருந்துகள், 154 அறுவை சிகிச்சை பொருட்கள் விற்கப்பட்டு வந்தன.
  • 2024ல், 2047 வகையான பொது மருந்துகள், 300க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை பொருட்கள் விற்கப்பட்டு வந்தன. 5 ஆயுர்வேத பொருட்களும் விற்பனையில் சேர்க்கப்பட்டன.
  • இந்த திட்டத்தின் மூலம் கடந்த 10வருடங்களில் நடந்த 5600கோடிக்கும் அதிகமான விற்பனை மூலம் பொது மக்களின் பணம் 30000கோடிக்கும் அதிகமாக சேமிக்கப்பட்டிருக்கும்.[21]

திட்ட நோக்கம்

தரமான பொது மருந்துகள் இந்திய மக்கள் அனைவருக்கும் மலிவு விலையில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், துவங்கப்பட்ட இந்த மலிவு விலை மக்கள் மருந்தக திட்டத்தில் 30.11.2023 நிலவரப்படி, நாடு முழுவதும் 10,000 மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருந்தகங்களில் 1,965 மருந்துகள் மற்றும் 293 அறுவை சிகிச்சைப் பொருட்கள் விற்பனைக்கு உள்ளது. இதன் நோக்கமாக

  • அனைத்துத் தரப்பு மக்களுக்கும் குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வது
  • தரம் என்பது அதிக விலைக்கு விற்கப்படும் மருந்துகள் மட்டுமே என்ற கருத்தை எதிர்கொள்ள கல்வி மற்றும் விளம்பரத்தின் மூலம் தரமான அதே நேரம் மலிவான மருந்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  • மக்கள் மருந்தகங்கள் அமைப்பதன் வழி தனிப்பட்டதொழில்முனைவோரை ஈடுபடுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகியவையுள்ளன.[22]

சிறப்பம்சங்கள்

இத்திட்டம் அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் முனைவோரால் மக்கள் மருந்தகம் வழியே இயக்கப்பட்டு வருகிறது.

  • மருந்தக உரிமையாளர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.5.00 இலட்சம் மற்றும் மாதாந்திர கொள்முதல்களில் 15 விழுக்காடு, அல்லது மாதந்தோறும் ரூ.15,000/- என்ற உச்சச் வரம்பிற்குட்பட்டு வழங்கப்படுகிறது.
  • வடகிழக்கு மாநிலங்கள், இமயமலைப் பகுதிகள், தீவுப் பகுதிகள் மற்றும் நிதி ஆயோக்கால் பின்தங்கிய மாவட்டமாகக் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் உள்ள பெண் தொழில்முனைவோர், மாற்றுத் திறனாளிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் முன்னாள் படைவீரர்களால் திறக்கப்படும் பிரதம மந்திரி மக்கள் மையங்களுக்கு தளபாடங்கள் மற்றும் சாதனங்கள் மற்றும் கணினி மற்றும் அச்சுப்பொறிகளுக்கு ஒரு முறை ஊக்கத்தொகையாக ரூ.2.00 இலட்சம் வழங்கப்படுகிறது.
  • இம்மருந்தகங்களில், மருந்துகளின் விலை வெளிச் சந்தையில் விற்கப்படும் மருந்துகளின் விலையை விட 50% முதல் 90% வரை குறைவாக உள்ளது.
  • மருந்துகளின் தரத்தை உறுதி செய்வதற்காக உலக சுகாதார நிறுவனம் - நல்ல உற்பத்தி நடைமுறைகள் (WHO-GMP) என்று சான்றளிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து மட்டுமே மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
  • ஒவ்வொரு தொகுதி மருந்தும் சிறந்த தரத்தையுடையது என்பதை உறுதி செய்வதற்காக 'சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் (என்ஏபிஎல்)' அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட பின்பே விற்பனைக்கு வருகிறது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "இந்திய அரசின் பொதுவான மருந்துக்கள் பிரச்சாரத்தின் ஒரு முன்முயற்சி மருந்துகளுக்கான அணுகலை மேம்படுத்துகிறது". janaushadhi.gov.in. Retrieved 15 August 2017.
  2. "நலிவடைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி திட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி புதிய உயிர் கொடுத்தது எப்படி?". economictimes.
  3. "பாரதிய ஜனவுஷதி பரியோஜனா - ஜெனரிக் மருந்துகளுக்கான திட்டம்". business-standard.
  4. "தமிழகத்தின் முதல் ஜன் அவுஷதி ஜெனரிக் மெடிக்கல் ஸ்டோர் கோவையில் திறப்பு". timesofindia.
  5. "ஜன் அவுஷதியின் மெகா வெற்றி". theprint.
  6. "விற்பனைரூ.1,094 கோடியை தாண்டியது". livemint.
  7. "பிரதான் மந்திரி பாரதிய ஜனவுஷதி மையங்களில் ரூ.1/-க்கு சானிட்டரி நாப்கின்கள் கிடைக்கின்றன". pib.
  8. "2023-24 நிதியாண்டில் விற்பனையில் ரூ.1000 கோடி என்ற இலக்கை எட்டியுள்ளது". pib.
  9. "Jan Aushadhi's mega success gave Mandaviya's CV a boost before promotion to health minister". 8 July 2021.
  10. https://sansad.in/getFile/loksabhaquestions/annex/10/AU1149.pdf?source=pqals
  11. https://pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=192101
  12. "ஆண்டறிக்கை" (PDF).
  13. 13.0 13.1 Sharma, Priyanka (2023-03-01). "Janaushadhi sales crosses Rs1,094 crore". mint (in ஆங்கிலம்). Retrieved 2023-03-02.
  14. https://sansad.in/getFile/annex/259/AU2260.pdf?source=pqars
  15. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2066709
  16. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2067441
  17. https://www.pharmabiz.com/NewsDetails.aspx?aid=171671&sid=1
  18. https://sansad.in/getFile/loksabhaquestions/annex/10/AU1149.pdf?source=pqals
  19. https://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-nadu-to-get-250-medical-shops/article17370953.ece
  20. https://www.indiatoday.in/india/story/sanitary-napkins-to-be-sold-for-re-1-at-jan-aushadhi-stores-1591757-2019-08-26
  21. https://www.pharmabiz.com/NewsDetails.aspx?aid=171671&sid=1
  22. https://janaushadhi.gov.in/pmjy.aspx
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya