பிரவீன் ஜயவிக்கிரம (Praveen Jayawickrama; பிறப்பு: 30 செப்டம்பர் 1998) இலங்கைத்துடுப்பாட்ட வீரர் ஆவார். 2021 ஏப்ரலில் இவர் தனது முதலாவது பன்னாட்டுப் போட்டியில் இலங்கை அணிக்காக விளையாடினார்.[1]
பிரவீன் தனது முதலாவது முதல்-தரத் துடுப்பாட்டப் போட்டியை கோல்ட்சு துடுப்பாட்ட அணிக்காக 2019 சனவரி 11 இல் 2018–19 பிரீமியர் லீக் போட்டித் தொடரில் விளையாடினார்.[2] முன்னதாக இவர் இலங்கையின் 19-வயதிற்குட்பட்டோருக்கான 2018 உலகக் கிண்ணப் போட்டியில் சேர்க்கப்பட்டார்.[3] இவர் தனது முதலாவது பட்டியல் அ போட்டியை 2019 திசம்பர் 15 இல் மூர்சு விளையாட்டுக் கழகத்திற்காக விளையாடினார்.[4] இவர் தனது முதலாவது இருபது20 போட்டியை 2020 சனவரி 4 இல் மூர்சு விளையாட்டுக் கழகத்திற்காக விளையாடினார்.[5]
2021 ஏப்ரலில், ஜெயவிக்கிரம இலங்கையின் தேர்வு அணியில் சேர்க்கப்பட்டார்.[6] தனது முதலாவது தேர்வுப் போட்டியை வங்காளதேசத்திற்கு எதிராக 2021 ஏப்ரல் 29 இல் விளையாடினார்.[7] அவர் விளையாடிய முதலாவது போட்டியிலேயே முதலாவது இன்னிங்சில் 6 இலக்குகளை 92 ஓட்டங்களுக்குக் கைப்பற்றி முதல் தேர்வுப் போட்டியில் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றிய ஐந்தாவது இலங்கை ஆட்டக்காரர் என்ற சாதனையைப் புரிந்தார்.[8] இதே போட்டியில் இவர் இரண்டாவது இன்னிங்சில் 86 ஓட்டங்களுக்கு 6 இலக்குகளைக் கைப்பற்றி, தான் விளையாடிய முதலாவது தேர்வுப் போட்டியில் 10 இலக்குகளைக் கைப்பற்றிய முதலாவது இலங்கை வீரர் (உலக அளவில் 16-வது) என்ற சாதனையை ஏற்படுத்தினார்.[9]