பிரான்சிஸ்கோ மற்றும் ஜெசிந்தா மார்த்தோ
புனிதர்கள் பிரான்சிஸ்கோ தெ ஜீசஸ் மார்த்தோ (11 ஜூன், 1908 – 4 ஏப்ரல், 1919), அவரது சகோதரி ஜெசிந்தா தெ ஜீசஸ் மார்த்தோ (11 மார்ச், 1910 – 20 பெப்ரவரி, 1920) ஆகியோர் போர்த்துகல் நாட்டின் பாத்திமா நகருக்கு அருகிலுள்ள அல்ஜுஸ்ட்ரெல் குக்கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள். 1916ஆம் ஆண்டு, கோவா டா இரியா பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த வேளையில், அமைதியின் வானதூதரையும், 1917ஆம் ஆண்டு இயேசுவின் தாயான கன்னி மரியாவையும் காட்சிகளில் கண்டனர். இந்த குழந்தைகளுக்கு அன்னை மரியா வழங்கிய முன்னறிவிப்புகள் அனைத்தும் நிறைவேறியதால், பாத்திமா அன்னை பேராலயம் உலக மக்களை ஈர்க்கும் திருத்தலமாக விளங்குகிறது. இந்த இருவருக்கும், 2017 மே 13ந்தேதி, பாத்திமாவில் உள்ள செபமாலை அன்னை பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிசு புனிதர் பட்டம் வழங்கினார். வாழ்வு![]() போர்த்துகல் நாட்டின் பாத்திமா நகரின் அருகிலுள்ள அல்ஜுஸ்ட்ரெல் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த மனுவேல் பேத்ரோ மார்த்தோ - ஒலிம்ப்பியா தெ ஜேசுஸ் தம்பதியருக்கு பிறந்த கடைசி இரண்டு குழந்தைகளாக பிரான்சிஸ்கோ மார்த்தோ, ஜெசிந்தா மார்த்தோ ஆகியோர் பிறந்தனர். குடும்பத்தின் ஆறாவது குழந்தையாக 1908 ஜூன் 11ந்தேதி பிறந்த பிரான்சிஸ்கோ, ஜூன் 20ந்தேதியும் திருமுழுக்கு பெற்றார். ஏழாவது குழந்தையாக 1910 மார்ச் 5ந்தேதி பிறந்த ஜெசிந்தா, மார்ச் 19ந்தேதி பாத்திமா ஆலயத்தில் திருமுழுக்குப் பெற்றனர். பக்தியுள்ள கிறிஸ்தவப் பெற்றோருக்குப் பிறந்த இவர்கள், விசுவாசத்திலும், பிறரன்பிலும் வளர்க்கப்பட்டனர்.[1] தங்களின் குடும்ப ஆடுகளை பிரான்சிஸ்கோ எட்டு வயதில் மேய்க்கத் தொடங்கியபோது, ஆறு வயது சிறுமியான ஜெசிந்தாவும் உடன் சென்றார். தங்கள் உறவுக்கார சிறுமியான லூசியா சான்டோசுடன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த இவர்கள் 1916ஆம் ஆண்டில், வசந்த காலம், கோடை காலம் மற்றும் இலையுதிர் காலங்களில், அமைதியின் வானதூதரை காட்சியில் கண்டனர். இம்மூன்று சிறாரில் மிகவும் பக்தியுள்ளவரான பிரான்சிஸ்கோ, கடவுள் நம்மோடு இருக்கிறார் என்று கூறி, மற்ற இருவரையும் எப்போதும் செபம் சொல்ல அழைப்பார். காட்சிகள்1917 மே மற்றும் அக்டோபர் மாதங்களுக்கிடையில், ஆகஸ்ட் தவிர, ஒவ்வொரு மாதத்தின் 13ந்தேதியும் அன்னை மரியாவை இந்த சிறார்கள் காட்சியில் கண்டனர். 1917 மே 13ந்தேதி, சிறார்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த கோவா டா இரியாவின் ஒரு புதர் செடியின் மீது ஒளிமயமான ஒரு மேகம் வந்து இறங்கியது.[2] அந்த மேகத்தின் மேல் அன்னை மரியா தோன்றி காட்சி அளித்தார். லூசியா சான்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ ஆகிய மூன்று பேரும் அந்த காட்சியைக் கண்டனர்.[3] மரியன்னை அவர்களிடம், "நான் செபமாலை அன்னை" என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். மேலும், அந்த மூன்று சிறாரும், தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 13ந்தேதி அதே இடத்திற்கு வர வேண்டும் என்று மரியா கட்டளை இட்டார். ஜூலை 13ந்தேதி, அன்னை மரியா காட்சி அளித்தபோது சிறுவர்களுக்கு நரகத்தின் கொடிய வேதனைகளைக் காண்பித்தார். "பாவிகள் மனம் திரும்ப செப, தவ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என்றும் மரியன்னை அறிவுறுத்தினார்.[4] ஆகஸ்ட் மாதம் 13ந்தேதி, லூசியா, ஜெசிந்தா, பிரான்சிஸ்கோ மூவரும் அதிகாரிகளால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். எனவே அன்றைய தினத்துக்கு பதிலாக, மரியாவின் விண்ணேற்பு நாளான ஆகஸ்ட் 15ந்தேதி சிறார் மூவரும் அன்னையின் காட்சியைக் கண்டனர்.[2] மக்கள் பலரும் அன்னையின் அற்புதத்தைக் காண இச்சிறாரைப் பின்தொடர்ந்தனர். இரண்டாம் உலகப் போர், ரஷ்யா கம்யூனிச கொள்கைகளில் இருந்து மனந்திரும்பும், கிறிஸ்தவர்களுக்கு எதிராக துன்புறுத்தல்கள் அதிகரிக்கும் என்ற முன்னறிவிப்புகளையும் அன்னை வழங்கினார். 1917 அக்டோபர் 13ந்தேதி, அன்னை மரியாவின் கடைசி காட்சியைக் காண சுமார் 70 ஆயிரம் பேர் கூடி இருந்ததாக நம்பப்படுகிறது.[5] அப்போது வானில் வியத்தகு அதிசயங்கள் தோன்றின. வானில் இருந்து பல வண்ணங்கள் தோன்றி மக்கள் மேல் ஒளிர்ந்தன. பெரிய மழைப் பெய்த வேளையிலும் அன்னை மரியா காட்சி அளித்த புதரும் 3 சிறார்கள் இருந்த இடமும் மட்டும் உலர்ந்தே காணப்பட்டன. அப்போது, சூரியன் மக்களின் கண்களுக்கு குளிர்ந்த நிலவு போன்று தோன்றியது. அது பம்பரம் போல சுழன்றவாறு, சிறிது நேரம் குடிகாரனை போல அங்கும் இங்கும் தள்ளாடியது. இவற்றை அங்கிருந்த அனைவரும் பார்த்தனர். இந்த செய்தி போர்ச்சுக்கல் நாட்டு பத்திரிகைகள் அனைத்திலும் நிழற்படங்களுடன் வெளிவந்தது. நோயும் இறப்பும்அன்னையின் காட்சி குறித்து விசாரிப்பதற்காக, இந்த மூன்று சிறாருக்கும் அதிகாரிகள் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தனர். இதில் பிரான்சிஸ்கோவும், ஜெசிந்தாவும் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். 1918 அக்டோபரில் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிரான்சிஸ்கோ, 1919 ஏப்ரல் 3ந்தேதி உயிரிழந்தார். 1918ஆம் ஆண்டு இறுதியில், ஜெசிந்தாவும் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 1920 பிப்ரவரி 20ந்தேதி லிஸ்பன் மருத்துவமனையில் இறந்தார்.[3] புனிதர் பட்டம்
பிரான்சிஸ்கோ, ஜெசிந்தா ஆகியோரை புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான நடைமுறைகள் 1946ஆம் ஆண்டு தொடங்கின.[3] 1935 மற்றும் 1951ஆம் ஆண்டுகளில் அவர்களது கல்லறை தோண்டப்பட்ட வேளையில், ஜெசிந்தாவின் முகம் அழியாமல் காணப்பட்டது.[6][7] குழந்தைகளுக்கு புனிதர் பட்டம் வழங்குவதில் நிலவிய கருத்து வேறுபாடுகளால், இவர்களுக்கான நடைமுறைகளை மேற்கொள்வதில் சிக்கல் எழுந்தது. 1979ல் கத்தோலிக்க ஆயர்களிடையே ஒத்த கருத்து ஏற்பட்டதால், 1989ஆம் ஆண்டு புனித 2ம் ஜான் பால், இவ்விரு சிறார்களையும் வணக்கத்துக்குரியவர்கள் என்று அறிவித்தார்.[8] 2000ஆம் ஆண்டு மே 13ம் தேதி, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால், பாத்திமாவில் உள்ள செபமாலை அன்னை பேராலயத்தில், பிரான்சிஸ்கோ, ஜெசிந்தா ஆகியோரை அருளாளர்களாக அறிவித்தார். இதையடுத்து, மூளை காயத்தால் பாதிக்கப்பட்ட பிரேசில் நாட்டு சிறுவன் லூக்கா, இவர்களின் பரிந்துரையால் குணம் அடைந்த அற்புதத்தை அங்கீகரிக்கும் வகையில் இருவரையும் புனிதர் நிலைக்கு உயர்த்த திருத்தந்தை பிரான்சிசு முடிவு செய்தார். பாத்திமாவில் அன்னை மரியா முதல் காட்சி அளித்ததன் நூற்றாண்டு விழா கொண்டாடத்தையொட்டி பாத்திமா சென்ற திருத்தந்தை பிரான்சிசு, பிரான்சிஸ்கோ, ஜெசிந்தா ஆகியோரின் கல்லறைகளை சந்தித்து செபித்தார். 2017 மே 13ந்தேதி நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், இவ்விரு சிறாருக்கும் புனிதர் பட்டம் வழங்கினார். மறைசாட்சிகளாக இறக்காதவர்களில் மிக இளம் வயதில் புனிதர் நிலைக்கு உயர்ந்தவர்கள் என்ற பெருமையை பிரான்சிஸ்கோவும், ஜெசிந்தாவும் பெற்றுள்ளனர். ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia