பிளிக்கர் அல்லது பிலிக்கர் (Flickr), ஒளிப்படம் மற்றும் நிகழ்பட சேமிப்பு சேவையை வழங்கும் தளம் ஆகும். இது ஆரம்பத்தில், இணையப் பயனர்கள், இலகுவாக அவர்களுடைய ஒளிப்படங்களை சேமித்து பகிர ஏதுவான தளமாக பிரபலமானது. இந்த சேவை நிறுவனம் லுடைகோர்ப் என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டதோடு, பின்னாளில் இது யாகூ! நிறுவனத்தினால் வாங்கப்பட்டது.
மேலும், இந்த பிரபலமான தளமானது, வலைப்பதிவாளர்களுக்கு தங்கள் ஒளிப்படங்களை சேமித்து, அதனை தங்கள் வலைப்பதிவுகளில் காட்சிப்படுத்த ஏதுவான வகையில் சாத்தியங்களையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.[2] 2010 செப்டம்பர் மாதத்தில் மேற்கோள்ளப்பட்ட மதீப்பீட்டின் படி, இச்சேவையில் 5 பில்லியன் ஒளிப்படங்களை சேமிப்பகத்தில் சேரத்து வைத்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது.[3] இந்த சேவைக்கு, நவீன நகர்பேசிகளான ஐஃபோன்[4], பிளாக்பெர்ரி[5] மற்றும் விண்டோஸ் ஃபோன் 7 ஆகியவற்றிலிருந்து நேரடியாக ஒளிப்படங்களையும், நிகழ்படங்களையும் குறித்த தளத்தின் உத்தியோகபூர்வ செய்நிரல்களைப் பயன்படுத்தி நேரடியாக மேலேற்றவும் முடியும்.