பிவிசாகு போடோ புதுவருட கொண்டாட்டம் |
---|
 போரோ இனப்பெண்கள் பாரம்பரிய உடைகளில் பிவிசாகு கொண்டாட்டத்தின் போது |
கடைப்பிடிப்போர் | போடோக்கள் |
---|
வகை | சமூக, கலாச்சார, மத கொண்டாட்டம் |
---|
முக்கியத்துவம் | புது வருடம் |
---|
நாள் | பைசாக் மாத முதல் நாள் |
---|
நிகழ்வு | வருடாவருடம் |
---|
தொடர்புடையன | தெற்காசிய புதுவருட கொண்டாட்டங்கள் |
---|
பிவிசாகு [1] என்பது, அசாம் மாநிலத்தில் வாழும் பழங்குடியினரான போடோ மக்களிடையே மிகவும் பிரபலமான பருவகால திருவிழாக்களில் ஒன்றாகும்.[2] இது ஆண்டுதோறும் ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்கி ஒரு வாரம் வரை கொண்டாடப்படும். இதே திருவிழா பஞ்சாபில் பைசாக் என்றும், பிற அசாமிய பழங்குடி மக்களால் பிஹு என்றும் கொண்டாடப்படுகிறது , ஆனால் போடோக்கள் இந்த பிரபலமான திருவிழாவை பிவிசாகு (புத்தாண்டின் ஆரம்பம்) என்று அழைக்கிறார்கள். ஏனெனில் பிவிசாகு என்பது ஒரு போரோ வார்த்தையாகும், இது பிவிசா என்ற வார்த்தைக்கு ஆண்டு அல்லது வயது என்றும்,அகு என்ற வார்த்தைக்கு ஆரம்பம் அல்லது தொடக்கம் என்பது அர்த்தமாகும். பிற விழாக்களில் இருந்து போரோ சமூகத்தின் பிவிசாகுவை தனித்துவமாக்குவது அது கொண்டாடப்படும் விதம் தான்.[3]
பிவிசாகுவின் தனித்துவம்
பிவிசாகு பண்டிகைகளின் சிறப்பியல்புகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
- குவ்கா-குவ்வி ஜனாய் - பதின்மூன்று வகையான உள்நாட்டு மூலிகைகள் மற்றும் உண்ணக்கூடிய தாவரங்களின் கலவையில் இறைச்சி சேர்த்து புளிப்பு-கசப்பான உணவை சங்கராந்தி அல்லது புத்தாண்டு நாளுக்கு முந்தைய நாள் உண்ணும் சடங்கு. பழைய ஆண்டை வழியனுப்பும் முறை என கூறலாம்
- மவ்ஸௌ துக்வினாய் - தங்கள் விவாயத்திற்கு உதவி செய்யும் கால்நடைகளை சுத்தப்படுத்தி, குளிப்பாட்டி, அழகு படுத்துதல். கால்நடைகளுக்கு நன்றி கூறும் நாள்
- ஆண் மற்றும் பெண் கடவுளர்களுக்கு படையலிட்டு வழிபடுதல்
- முன்னோர்களையும் குடும்ப பெரியவர்களையும், குலதெய்வத்தையும் வழிபடுதல், ஜவ் பித்வி எனப்படும் நாட்டுப்புற அரிசி சாராயம் இவர்களுக்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டு படைக்கப்படுகிறது
- புதிய ஆண்டின் தொடக்கத்தில் அரிசி, பன்றி இறைச்சி, மீன் மற்றும் சிவப்பு எறும்பு முட்டைகள் கொண்ட ஆடம்பரமான விருந்துகள் சமைக்கப்பட்டு ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக புதிய ஆண்டை வரவேற்பது.[4]
பிவிசாகு, கச்சாரி பழங்குடிகளால் விவரிக்கப்பட்டபடி ஏழு நாட்களாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணங்களுக்காக கொண்டாடப்படுகிறது.
- முதல் நாள் - பதின்மூன்று வகையான உள்நாட்டு மூலிகைகள் மற்றும் உண்ணக்கூடிய தாவரங்களின் கலவையில் இறைச்சி சேர்த்து புளிப்பு-கசப்பான உணவை சங்கராந்தி அல்லது புத்தாண்டு நாளுக்கு முந்தைய நாள் உண்ணும் சடங்கு மற்றும் மாடுகளை சிறப்பாக கவனிக்கும் தினமாகும்.
- இரண்டாவது நாள், புத்தாண்டு தொடக்கம், மான்சி பிவிசாகு என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது முன்னோர்களுக்கும் கடவுள்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது மற்றும் உச்ச தெய்வமான பவ்ராய் பாத்தோவிற்கு கோழி மற்றும் ஜவ் எனப்படும் உள்நாட்டு மதுபானத்துடன் வழிபடப்படுகிறது. இந்த நாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று கொண்டாடுவார்கள்.
- மூன்றாம் நாள், 'சைமா' எனப்படும் நாய்களுக்கானவை.
- நான்காம் நாள் 'ஓமா' எனப்படும் பன்றிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
- ஐந்தாம் நாள் 'தாவ்' எனப்படும் கோழிகளுக்கும்
- ஆறாவது நாள் வாத்துகள் மற்றும் பிற பறவைகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
- ஏழாவது நாள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை வரவழைத்து நன்றி கூறுவதற்காக இப்படியாக கொண்டாடப்படுகிறது.
தாங்கள் வசிக்கும் வீடுகளை சுத்தம் செய்தல், கால்நடைகளுக்கு நன்றி கூறும் சடங்குகள்,கடவுளுக்கான பாத்தோ வழிபாடு மற்றும் அவர்களின் மூதாதையர்களுக்கு படையல் புதிய சுத்தமான மற்றும் வண்ணமயமான பாரம்பரிய ஆடைகள் அணிந்துகொள்ளுதல், உறவினர்கள், நண்பர்களை வீடுகளுக்கு அழைத்தல் அல்லது அவர்களின் வீடுகளுக்கு செல்லுதல், பரிசுகளை வழங்குதல் போன்றவை இந்த பழங்குடி திருவிழாவின் சடங்கு முறைகளாகும்.
இசை மற்றும் நடனம்
மகிழ்ச்சியாக கொண்டாடுதல் என்பதே இந்த போடோ திருவிழாவின் முக்கியமான அம்சமாகும். அதற்க்கு அவர்களின் நாட்டுப்புற இசை மற்றும் நடனம் வழிசெய்கிறது.சிபுங் எனப்படும் குழலிசை கருவிகளும், (புல்லாங்குழல்), காம் எனப்படும் மத்தள இசைக்கருவிகளை மட்டுமல்லாது, நான்கு சரங்கள் கொண்ட பிடில் அல்லது செர்ஜா கருவிகள் கொண்டு இசையமைத்து தர்கா எனப்படும் பிளவுபட்ட மூங்கில் துண்டால் கொட்டுகளை அடித்துக்கொண்டும் பாடல்களைப் பாடிக்கொண்டே இளைஞர்களும் இளைஞிகளும் நடனமாடுவார்கள். கோங்கோனா எனப்படும் வீணைகளையும், ஜோத்தா எனப்படும் சிலம்பல்களையும் இளம்பெண்கள் இசைப்பார்கள்.
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
[1] https://books.google.com/books?id=YuSSBQAAQBAJ&lpg=PT6&ots=XtnJns6DKc&dq=Bwisagu%20assam&pg=PP1#v=onepage&q=Bwisagu%20assam&f=false