பீட்டர் அம்புருசிடர்
பீட்டர் அம்புருசிடர் (Peter Armbruster, பீட்டர் ஆம்புரூஸ்டர், பிறப்பு: 25 சூலை 1931) என்பவர் செருமானிய இயற்பியலாளர் ஆவார். இவர் செருமனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள டேச்சு நகரில் பிறந்தார். ஜி.எஸ்.ஐ எல்மோட்சு கனவயனிகள் ஆய்வு மையத்தில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றினார். காட்பிரைடு மூசன்பெர்க்குடன் இணைந்து இவர் போரியம் , கோப்பர்நீசியம் ஆசியம், டார்ம்சிட்டாட்டியம் இரோயன்ட்கெனியம் மெய்ட்னீரியம் போன்ற தனிமங்களைக் கண்டறிவதில் பெரும் பங்கு வகித்துள்ளார். இவர் இசுடுட்கார்ட், மியூனிக் நகர தொழினுட்ப பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படித்தார். மியூனிக் நகரிலுள்ள எயின்சு மேயர்-லெயிப்நிட்சு தொழினுட்ப பல்கலைக்கழகத்தில் தன்னுடைய ஆய்வுப் படிப்பை முடித்து முனைவர் பட்டம் பெற்றார். சூலிச் நகரில் இருந்த ஆய்வு மையத்தில் 1965 முதல் 1970 வரையிலான காலத்தில், அணுக்கரு பிளப்பு, கனவயனிகள் சடப்பொருளுடன் கொள்ளும் இடைவினைகள், அணுக்கரு பிளவில் வெளிப்படும் கற்றைகள் தொடர்பான அணு இயற்பியல் முதலான துறைகளில் இவருடைய பெரும்பாலான ஆய்வுகள் நடந்தன. ஜி.எஸ்.ஐ எல்மோட்சு கனவயனிகள் ஆய்வு மையத்தில் இவர் முதுநிலை அறிவியலாளராக 1971 ஆம் ஆண்டுமுதல் பொறுப்பு வகித்தார். 1989 ல் இருந்து 1992 வரையிலான காலத்தில் அவர், கிரெநோபில் நகரிலிருந்த லாவொ-லெங்கெவின் என்ற ஐரோப்பிய நிறுவனத்தில் ஆராய்ச்சி இயக்குநர் பதவி வகித்தார். 1996 ஆம் ஆண்டு முதல் அவர் அணுக்கரு தெளிப்பு மற்றும் அணுக்கரு பிளப்பு வினைகளால் விளையும் அணு கழிவு எரிக்கப்படுதல் தொடர்பான திட்டத்தில் ஈடுபட்டு வந்தார். கோலோன் பல்கலைக்கழகம் மற்றும் டார்ம்சிடாட் தொழினுட்ப பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் இணைந்து பணிபுரிந்தார். இவருடைய அரும்பணிக்காக இவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டன. இலண்டன் இயற்பியல் நிறுவனம் வழங்கிய மேக்சு-போர்ன் விருது மற்றும் அமெரிக்க வேதியியல் குமுகம் வழங்கிய உட்கரு வேதியியல் விருது ஆகியவை முக்கியமான சில விருதுகளாகும். மேற்கோள்கள்
மூலம் |
Portal di Ensiklopedia Dunia