பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்ட்டன் பள்ளி
வார்ட்டன் பள்ளி (Wharton School) ஐக்கிய அமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத்திலுள்ள தனியார் ஐவி லீக் பல்கலைக்கழகங்களில் ஒன்றான பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைப் பள்ளி ஆகும். அமெரிக்காவின் மிகத் தொன்மையானதாகவும், ஓர் உயர்நிலைக் கல்வி நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட உலகின் முதல் மேலாண்மைப் பள்ளியாகவும் சிறப்புப் பெற்றுள்ளது. இந்தப் பள்ளி யோசஃப் வார்ட்டன் என்பாரின் கொடையளிப்புக் கொண்டு 1881ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது.[2] இதன் தாய்க் கல்வி நிறுவனமான பென்சில்வேனியா பல்கலைக்கழகம், பெஞ்சமின் பிராங்கிளினால் நிறுவப்பட்ட அமெரிக்காவின் முதல் பல்கலைக்கழகம் ஆகும்.[3] வார்ட்டன் உலகின் மிகச் சிறந்த வணிக மேலாண்மைப் பள்ளியாக பரவலாக கருதப்படுகிறது. இதனை உலகின் மிக உயர்ந்த வர்த்தக கல்வி வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ந்து பிசினசு வீக்கும் பைனான்சியல் டைம்சும் தங்கள் தரவரிசையில் மதிப்பிட்டுள்ளன.[4] இங்கு வழங்கப்படும் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் உலகில் முதலானதாக 2000 முதல் 2009 வரை பைனான்சியல் டைம்சு மதிப்பிட்டுள்ளது; மீண்டும் 2011இல் இலண்டன் வணிகப் பள்ளியுடன் இணைந்து முதலாவதாக வந்தது.[5] தவிரவும் கல்வியாளர்களும் பணியமர்த்துபவர்களும் வார்ட்டனுக்கு உயரிய மதிப்பு அளித்து வருகின்றனர்.[6] தனியாகவும் பல்கலைக்கழகத்தின் பிற பள்ளி மற்றும் கல்லூரிகளுடன் இணைந்தும் வார்ட்டன் இளங்கலை, முதுகலை வணிக மேலாண்மை பட்டங்களையும் முனைவர் கல்வித் திட்டங்களையும்[7] வழங்குவதுடன் பல பட்டய கல்வித் திட்டங்களையும் புரவல் செய்கிறது. எந்தவொரு வணிகப் பள்ளிக்கும் மேலாக விருப்பத் தேர்வுகளை வழங்கும் இந்தப் பள்ளியில்[8] கணக்குப் பதிவு, வணிக மற்றும் பொதுக் கொள்கைகள், தொழில்முனைவு மேலாண்மை, சூழலியல் மேலாண்மை, நிதி, நலவாழ்வு அமைப்புகள், மனிவள மற்றும் நிறுவன மேலாண்மை, காப்பீடும் தீவாய்ப்பு மேலாண்மையும், சட்டம், வணிக நற்பண்புகள், மேலாண்மை, சந்தைப்படுத்தல், பன்னாட்டு மேலாண்மை, இயக்கம் மற்றும் தகவல் மேலாண்மை, நிலச்சொத்துக்கள், சில்லறை வணிகம், புள்ளியியல், வணிக யுக்தி மேலாண்மை என பலதரப்பட்ட துறைகளில் கல்வி வழங்குகிறது. மேற்கோள்கள்
உசாத்துணை
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia