மேலே அடையாளம் தராத பயனர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இருப்பினும் அறிவியல் தமிழ் என்றும் பரவலாக வழக்கத்தில் இருக்கின்றது. எது கூடிய பொருத்தம். பிற பயனர்களும் கருத்து தெரிவித்தால் நன்று.
அறிவியல் தமிழ் என்றால் முதற் பக்கம் முதல் பக்கம் என்றிருக்க வேண்டும். பரவலான வழக்கம் என்பதற்காக பிழையான வழக்கத்தை முன்னிலைப்படுத்துவது பொருத்தமல்ல. கோபி08:16, 7 செப்டெம்பர் 2007 (UTC)Reply
அறிவியல் தமிழ் என்று நிறையப் பேசுகிறோம். அரசு ஏன் எதுவுமே இப்போதெல்லாம் இதற்காக செய்வதில்லை. ஒரு கலைகளஞ்சியத்தை இற்றைப்படுத்த முயற்சியாவது இருக்கிறதா? இணையம் இதில் பங்களிப்பது என்பது எந்த அளவு நடைமுறையில் சாத்தியம்?
அறிவியல் தமிழ் என்பது இன்றைக்கு வெறுமே ஏட்டளவில் தான் இருக்கிறது. இப்பொழுது, நாம் சறுக்கிய நிலையில் உள்ளோம். முன்னே சொன்னது போல் மடிக்குழைப் பள்ளிகள் (matriculation schools) பெருகிக் போய், பள்ளியில் தமிழில் படிப்பதே அருகிய நிலையில், தமிழில் அறிவியல் பெருகும் என்றா நினைக்கிறீர்கள்? நம்மூரில் ஆங்கிலத்தில் பேச்சுத் திறமை வளர்த்துக் கொள்வதற்கும், ஆங்கிலத்தின் மூலமாய் எல்லாவற்றையும் பள்ளியில் படிப்பதற்கும் உள்ள வேறுபாட்டைக் கூடப் பலரும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்; சண்டித் தனம் செய்கிறார்கள். நாங்கள் (1964க்கு முன்னால்) பள்ளியில் படிக்கும் போது, மாநிலம் எங்கும், ஒரு பத்துப் பள்ளிகள் மடிக்குழைப் பள்ளிகளாய் இருந்தாலே வியப்பு. இன்றைக்கோ, இரண்டாயிரத்து ஐந்நூற்றிற்கும் மேல் இருக்கின்றன. மாநிலத்தில் தமிழில் படிப்பவன் இன்று முட்டாளாய்த் தெரிகிறான். அவனுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாய் இருக்கிறது. "Tamil medium, get out; no job." முதலில் நம் பள்ளிகளில் தமிழ் நிலைத்தால் ஒழிய, அறிவியல் தமிழ் என்பது வளரவே வளராது. முதலில் பள்ளிகளில் நிலைத்து, பின் கல்லூரிக்குப் பரவிப் முடிவில் ஆய்வுக்குப் பழக வேண்டும். இதுவெல்லாம் நடக்கும் என்று 1971 வரை நாங்கள் நினைத்த முயற்சி, கழகத்தாரின் திருகுவேலையால் பின்னடைந்து, உருப்படாது போயிற்று. இப்பொழுது ஆங்கிலவழிப் படிப்பையே இரு கட்சியினரும் போட்டி போட்டு வளர்க்கிறார்கள். தமிழுக்கு அதிகாரம் கொண்டுதர, இன்னொரு இயக்கம் தான் இனிமேல் வரவேண்டும்.
கலைக் களஞ்சியங்களைப் புதுப்பிக்கும் வேலை அங்கொன்றும், இங்கொன்றுமாய் நடைபெறுகிறது. அகரமுதலிகளிலும், தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் பெருஞ் சொல்லகராதி (4 தொகுதிகளோடு நின்று போயிற்று, மேற்கொண்டு காணோம்.), ப,அருளியின் முயற்சியால் வெளிவந்த அருங்கலைச்சொல் அகரமுதலி போன்றவை நல்ல முயற்சிகள். மணவை முஸ்தாபா தனித்து அறிவியல் அகரமுதலிகள் வெளியிட்டு வருகிறார். சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலி இன்னும் திருத்தி வெளியிடப் படாமல் இருக்கிறது. தமிழ்வளர்ச்சித் துறை வெளியிடும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலில் நான்காம் மடலம் - மூன்றாம் பாகத்துடன் (தௌ வரை) 2004- ஆம் ஆண்டோடு நின்று போனது. அதற்கு அப்புறம் ஒன்றும் காணோம். அந்த அகரமுதலியின் விரிவும் ஆழமும் கூடச் சிறுகச் சிறுகக் குறைந்துவருகிறது. பாவாணருக்குப் பின் கொஞ்சகாலம் இரா.மதிவாணன் பார்த்தார்; இப்பொழுது இருப்பவர்களால், கவனிப்பு குறைந்து போனது என்றே எனக்குத் தோற்றுகிறது.
இணையத்தால் முடியுமா, என்று கேட்டால் முடியும்; ஆனால் நாட்களாகும். இணையத்தில் செய்வதற்குக் கூட, அரசின் உதவியில்லாமல், பெருத்த முதலீடு இல்லாமல், ஒரு நிறுவன முயற்சியில்லாமல், வழியில்லை. என்னைக் கேட்டால், இதைச் செய்வதற்குச் சரியான மானகை நெறியாளர் (managing director) வேண்டும். வல்லுநர்கள் பலரும் நம் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் நெறியாள்கை தான் சரியில்லை. நம்மூர்த் திட்டங்களின் பெருங்குறையே மானகைக் குறை தான்.
"Dr. Raghavan said the main objective of organising such a big conference was to dispel the belief that standard works in Tamil in science relating to higher learning were lacking. It would complement the efforts of the Government at introducing Tamil as medium of instruction at the primary level."
அறிவியல் அணுகுமுறை என்பது 16ம் நூற்றாண்டில் மேற்கே உருவாக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட வழியையே குறிக்கின்றது. அதுவே அறிவியல் என்று பொதுவாக மருபி நிற்கின்றது. எப்படி கணிதம் பொதுவாக மருபியதோ, அதுபோன்றே அறிவியலும் மருபி வருகின்றது எனலாம். இருப்பினும் அதற்கு முன்னரே அறிவு அறியப்பட்டு திருத்தப்பட்டு பகுக்கப்பட்டு பகிரப்பட்டு வந்தது. இது புது செய்தி அல்ல. அந்த அறிவு மொழி, இன, இட சூழமைவில் பொருந்தி வெளிப்பட்டு நின்றது. இப்படியே தமிழர்களின் தாவரவியல், மண்ணியல், வானியல், வேதியியல் போன்ற இயல்களின் அறிவு வெளிப்பட்டது. இன்று இவற்றை ஆவணப்படுத்துவது அறிவியலை விரிவுபடுத்துமே தவிர முரண்படமாட்டாது.
பழந்தமிழர் என்ன எப்படி சிந்திதார்கள் என்று அறிவது மட்டும் தமிழர் அறிவியல் ஆகாது, நாம் தற்போது என்ன, எப்படி சிந்திக்கின்றோம், ஏன் என்ற கேள்விகளும் ஆயப்படவேண்டும்.
இன்றைய நிலையில் எமது மொழி, பண்பாடு மாத்திரமல்ல எமது அறிவியலும், தொழில்நுட்பமும் மீட்டெடுக்கப்படுவதும், மீளுருவாக்கம் செய்யப்படுவதும் அவசியம். எப்படி முந்தைய இரு நூற்றாண்டிலும் தமிழ் இலக்கியம் மீட்டெக்கப்பட்டததோ, அதே போலா தமிழர் அறிவியல் மீட்டெக்கப்பட வேண்டும். எங்கே என்னத்தை மீட்டெட்ப்பது என்ற கேள்வி எழுகின்றது? அகழ்வாராய்ச்சியா, இலக்கிய ஆய்வா என்ற அங்கலாய்ப்பும் இருக்கின்றது. அதைவிட நாம் நேரடியாக எமது முதியவர்களிடமும், அருகிவரும் இயற்கை அறிவையும், தொழிற்கலைகளிலும் இந்த அறிவை அறிந்து மீட்டெக்க வேண்டும்.
இது தமிழர்கள் மட்டுமல்ல உலகெங்கும் தொன்மக் குடிகள் மேற்கொண்டுவரும் செயற்பாடே.
தமிழர்கள் எதையாவது கண்டுபிடித்தார்களா? யார் கண்டுபிடித்தார்? இந்தக் கேள்விகள் எமக்கு சிக்கல் தரக்கூடியவை. வரலாற்றில், நல்ல சில இலக்கியங்களைப் படைந்த வள்ளுவன், இளங்கோ, கம்பர் போக, புகழ்பெற்ற அரசர்கள் போக எமக்கு மீதமாய் வேறு யாரும் இல்லை. ஏன் என்றால் தமிழர்களின் அறிவியலலில் தனிநபர்களை அடையாளப் படுத்த முடியாது இருப்பதுதான். தமிழிசை, இசைக்கருவிகள், ஆடற்கலை, சிலம்பம், மெய்யியல், சித்த மருத்துவம் போன்று பிற இயல்களையும் இவர் இவர் இந்த திகதியில் கண்டுபிடித்தார் என்று கூற முடியாது. இது ஒரு சமூகத்தின் விளைவு என்றே சொல்ல முடியும். தமிழ் சமூகம் என்றும் எல்லையிட்டும் சொல்ல முடியாது, பரந்த இந்திய சமூகத்தினதும், மனித சமூகத்தினதும் விளைவு என்றே சொல்ல முடியும். அதற்காக தனிநபர்களின் சிறப்பை முக்கியத்துவத்தை இங்கு மறுப்பதற்கு இல்லை. ஆனால் சமூகச் செயற்பாட்டையும் அதனால் விளைந்த நல்ல/தீங்கு தரும் விளைவுகளையும் குறித்தல் நலமே. --Natkeeran02:35, 16 பெப்ரவரி 2007 (UTC)Reply
தமிழர்கள் உலகின் இயல்பை நோக்கி எப்படிப்பட்ட ஒரு வகைப்படுத்தலையும் கண்ணோட்டத்தையும் கொண்டிருந்தார்கள், கொண்டிருக்கின்றார்கள். தமிழர்களின் உலகப் பார்வை எவ்வாறு எவ்வளவு அமைகின்றது, வேறுபடுகின்றது போன்ற தகவல்கள் தந்தால் நன்று. இலக்கியம், சமயம் ஆகிய களங்களில் மட்டுப்படுத்தாமல், வேறு களங்களில் வெளிப்படும் தகவல்களை சுட்டினாலும் நன்று. குறிப்பாக வாய்வழி, வாழ்வியல், தொழிற்கலை, செயல்பாட்டு களங்களில் இருந்து. மேலும், இன்று இத்தகவல்கள் பயன்படக்கூடியவையா? பேணத்தக்க வேண்டியவையா? மீட்டெக்கப்படவேண்டியவையா? மீளுருவாக்கம் செய்யப்படவேண்டியவையா? எவ்வாறு பொது அறிவியலுடன் ஒத்துப் போகும்? எப்படி தமிழர் அறிவியல் அணுகுமுறை இன்று இருக்க வேண்டும்.
ஆரம்பத்தில், இவற்றைப் பற்றி எழுதுவதே ஒருவிதத்தில் வேண்டா வேலை போன்றே தோன்றியது. ஏன் என்றால் அறிவியல் என்பது ஒன்றுதானே, அதிலென்ன தமிழர் அறிவியல் - ethnic science என்று தோன்றியது. அதிக பட்சம் local knowlege என்று சிறுமைப்படுத்தி விடுவர். ஏற்கனவே எல்ல அறிவியலும் வேததில் இருந்துதான் வந்தது போன்ற ஒரு போலி தோற்றத்தைபோல தமிழர் அறிவியல் என்ற கருத்துரு தோன்றிவிடுமா என்ற அச்சமும் இருந்தது.
தமிழர் அறிவியலில் இருந்து புது தொழில்நுட்பங்கள் சாத்தியம் என்பதற்கு சில நல்ல உதாரணங்கள் உண்டு. எ.கா biological pestacides, medicinal plants போன்றவை. இங்கு நான் இயற்கை அறிவியல் - natural sciences கவனம் தருகின்றேன்.
இவற்றை பற்றி ஏன் கவனம் தேவையென்று எண்ணினால், ஒரு பாடத்தை படிக்கும் பொழுத் எல்லாமே ஐரோப்பிய மையப் பார்வையில் இருந்தே வருகின்றது. அறிவியல் அணுகுமுறையும், அறிவியலை முறையாக தொழில்நுட்ப ஆக்கத்துக்கு பயன்படுத்தியதும் ஐரோப்பியரின் அரிய பங்களிப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், தமிழில் அறிவியல் எழுதும் பொழுது எமக்கான சூழமைவு (context), பின்புலம் (background), சிந்தனையூற்று (roots), சிந்தனைவளம் ஒன்று அவசியமாகின்றது. நாம் வெறும் empty minds, always borrowing போன்ற தோற்றப்பாடு தவிர்த்தல் நலம்.
இவை பற்றி பயனர்களின் கருத்துக்கள் பரிந்துரைகள் அறிய ஆவல். நன்றி.
நற்கீரன், உங்கள் கேள்விகளும் தேடல்களும் எனக்கு நன்றாகப் புரிகின்றது. உங்கள் கேள்விகளுக்கும், வேண்டுகோள்களுக்கும் நல்ல மறுமொழி தர விரும்புகிறேன். நான் கூறப்புகும் ஒவ்வொன்றுக்கும் நல்ல மேற்கோள்களுடன் கொடுத்தால்தான் நல்லது. இவை பற்றி பல கருத்துக்கள் எனக்குண்டு எனினும், விரிவாக எழுதும் நிலையில் இல்லை. ஒன்றைத் தெளிவாக உணர்ந்து கொள்ளுதல் முதல் படி. சுமார் 1600-1700 வரையிலும் ஆங்கிலேயர்களும் செருமானியர்களும் கல்வி கேள்விகளில், குறிப்பாக கணிதவியல் அறிவியல் துறைகளில் தேர்ந்தவர்களாக இல்லை. கிரேக்கர்களும், இலத்தீன் மொழிக்காரர்களும் (இன்றைய இத்தாலியர்) கல்வி கேள்விகளில் உயர்ந்த நிலையில் இருந்தனர். ஆனால் அவர்களும் எகிப்தியர்களின் வழியும் பிற இனத்தவர்களின் வழியும் அறிந்தது மிகப்பல. இதே போல இந்தியர்களும் அரேபியர்களும், சீனர்களும் பல வகையிலும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினர். சுமார் கி.மு. 200 முதல் கி.பி. 1600 வரை இருந்த கால கட்டங்களில் இந்தியர்களும் தமிழர்களும் உலகில் இருந்த எவருக்கும் இளைத்தவர்கள் இல்லை. ஆனால் இன்று கணிதவியல், அறிவியல், பொறியியல், உடலியங்கியல், மருத்துவம் என்பன கடந்த 200-300 ஆண்டுகளில்தான் மிகப்பெரும் வளர்ச்சி அடைந்தது. அதுவும் கடந்த 100 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியானது பெரு வியப்பானது. இதில் அமெரிக்க, ஐரோப்பிய மக்கள் மறுக்கொணா வகையில் முன்னணியில் ஆக்கங்கள் செய்துள்ளனர். அவ் ஆக்கங்களை போற்றி ஏற்பதில் ஒரு தவறும் இல்லை. இது குறித்து நாம் ஏதும் தாழ்வு மனப்பானமை கொள்ளலாகாது. ஆங்கிலேயர்களும் செருமானியர்களும் ஒரு காலத்தில் கல்வி கேள்விகளில் அறிவு நேர்த்தி ஏதும் இல்லாதவர்களாகவும் "கீழ் மக்களாகவும்" கருதப்பட்டனர். பிரெஞ்ச் மொழியினர், இத்தாலிய மொழியினர், துருக்கி, கிரேக்க மொழியினர், அரேபியர் உயர்வானவர்களாக இருந்தனர். மிக அண்மைக் காலம் வரையிலும் பிரெஞ்ச் மொழி கற்றிருந்தால் ஆங்கிலேயன் ஒருவன் உயர்ந்தவன், இல்லாவிட்டால் அவன் அடிமட்ட மகன்களில் ஒருவன் என இருந்தது. ஆனால் சிறுகச் சிறுக ஆங்கிலேயரும் செருமானியரும் முன்னணிக்கு வந்தனர் (அறிவியலிலும் பிறவற்றிலும்). பிற நாட்டவர்களின் படைப்புகளை தம் மொழிகளில் பேருழைப்புடன் பெயர்த்துக் கொண்டனர். ஏன் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கூட பல ஐரோப்பிய மொழிகளில் முன்னணி அறிவியல் இதழ்கள் இருந்தன - இன்று அவை அருகிவிட்டன (அற்றுவிடவில்லை), ஆனால் ஆங்கிலவழிக் கல்வியும், ஆங்கில இதழ்களுமே அனைத்து மொழிகளுக்கும் முன்னே உள்ளது. இந்த 200-300 அண்டுகளிலும் பிற நாட்டவர்கள் பல காரணங்களினால் அமெரிக்க ஐரோபியர்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது பின்னடைந்திருந்தனர். வரும் 100 ஆண்டுகளில் சீனரும் பிறரும் முன்னணிக்கு வரலாம். தமிழர் கண்டுபிடிப்புகள், அறிவுத்திறம் என்பன இன்னும் போதிய அளவு அறியப்படவில்லை. சுமார் 150-200 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்கர்களின் அறிவுப் படைப்புகளும், எகிப்தியர்களின் அறிவுப் படைப்புகளும் சீனர்களின் அறிவுப் படைப்புகளும் உலகில் அறியப்படாமல்தான் இருந்தன. இன்று நாம் அறிவதெல்லாம் மிக அண்மைக் காலங்களில் மிகச் சிலருடைய பேருழைப்பால் பெற்றதே. இன்று இந்திய சமஸ்கிருத மொழிப் படைப்புகளும் மேற்கு ஐரோப்பியர்கள், அமெரிக்கர்களின் பேருழைப்பால் நாம் அறிவதே. உழைப்பவர்களுக்கே உலகம்! தமிழர் ஆக்கங்கள் பற்றி நிறைய ஆய்வுகள் நடத்த வேண்டியுள்ளது. பலவற்றுக்குக் காலம் கடந்துவிட்டது, எனினும் இன்னும் இயலும். நோபல் பரிசு பெற்ற சதிர சேகர் ஓர் நேர்காணலில் ( American Insitute of Physic Interview) தமிழர்களில் தனி வானவியல் பற்றி சுருக்கமாக கூறியுள்ளதாக அறிகிறேன் (ஒரு நண்பர் சொல்லக் கேட்டது - மூலத்தைப் பார்க்கவில்லை). தமிழர்கள் வானியல் பற்றி நிறைய ஆய்வுகள் செய்ய வேண்டியுள்ளன. அதுபோலவே மூலிகைகள், செடிகொடிகள் பற்றி, மீன்கள் பற்றி, உடலியங்கியல் பற்றி, பொறியியல் பற்றி, கணிதவியல் பற்றி பல செய வேண்டியுள்ளன. ஆணித்தரமாக இவை ஆய்ந்து அலசப்பட வேண்டும். கிரேக்க, ரோமானிய, சீன ஆய்வுகள் போலவே செய்ய வேண்டியுள்ளன. --செல்வா18:55, 18 பெப்ரவரி 2007 (UTC)Reply
தமிழின் ஆய்வுத் திறனும் அறிவியல் தமிழும்
தற்கால அறிவியல் சூழலில் அறிவைப் பெற, வளர்க்க ஆய்வு முக்கியம். அறிவியல் அணுகுமுறையில் ஆய்வு செய்வது ஒரு சிறந்த வழிமுறை. அதைத் தமிழில் செய்ய, தமிழுக்கு ஆயுவுத் திறன் தேவை.
எல்லா மொழிகளும் இயல்பாகவே ஆய்வுத் திறன் பெறுவதில்லை. அதற்குரிய மொழித் திறனும், அந்த மொழியில் கட்டமைக்கப்பட்ட சிந்தனைப் புலமும் தேவை. ஆய்வு திறன் இல்லாத மொழியில் ஆய்வு ரீதியில் சிந்தனை செய்யவோ சிந்தனைகளை வெளிப்படுத்தவோ முடியாது. அறிவியல் தமிழ் ஊடாகவே தமிழின் ஆய்வுத் திறனை வளர்த்துப் பயன்படுத்த முடியும்.
இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள மேற்கோள்கள் தேவையில்லாத சாய்வுகளைத் தருகின்றன. அம் மேற்கோள்கள் தந்தவர்கள் தக்கவாறு சீராக பல மொழிகளில் அறிவியல் பற்றிய ஆய்வு அலசல்களின் அடிப்படையில் கூறவில்லை என்பது என் கணிப்பு. ஒருவர் தமிழ் ஆய்வாளர் (அறிவியல் ஆய்வாளர் அலல்ர்), மற்ற இருவர் அறிவியல் முன்னோடி என்றோ, பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர் என்றோ கூறுதல் இயலாது. அறிவியல் கடந்த 150 ஆண்டுகளாகத்தான் பெரு வளர்ச்சி பெற்றுள்ளது. மிகப்பெரும்பாலான ஆய்வு ஏடுகளும் இக்காலப்பகுதியில் உருவாகி வளர்ந்ததே. எனவே வெளிச்சம் போட்டுக் காட்டிய மேற்கோள்கள் மிகச் சாய்வான கருத்தைத் தருகின்றது. அவற்றை நீக்க வேண்டுகிறேன். அக்கருத்துகளைக் கூற வேண்டும் எனில் கூறு அதற்கு எதிரான கருத்துகளையும் கூறுங்கள் ஆனால் அம் மேற்கோள்கள் தேவையற்றன, அவை சரியானவை அல்ல. --செல்வா21:26, 26 பெப்ரவரி 2012 (UTC)Reply
கருத்து வேறுபடுகிறேன். அறிவியல் தமிழின் உண்மை நிலையை அந்த மேற்கோள்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன. மாற்றுக் கருத்துக் கொண்ட "திட்டங்களும் வளர்ச்சியும்" என்ற பகுதி மேலும் விரிவு பெறத் தக்கது என்பது சரியே. சமசுகிருதத்தில்/சீனத்தில்/கிரேக்கத்தில் இருப்பவை போல் தமிழில் அறிவியல் தகவல்கள் நிறைந்த ஆக்கங்கள் அரிது என்பது வரலாற்று உண்மை. தொல்காப்பியம் போன்ற சில இலக்கண நூல்கள் தவிர்த்து போற்றி இலக்கியமும், சமய இலக்கியமுமே தமிழின் பெரும் பகுதி. தற்காலத்திலும் தமிழில் ஒரு துறையிலும் தானும் ஒர் ஆய்வேடுதானும் வெளிவரவில்லை. மேலும் அறிவியல் தமிழின் வரலாறு என்ற பக்கமும் விருவுபடுத்தப்பட்ட் இணைக்க முடியும். நன்றி. --Natkeeran21:40, 26 பெப்ரவரி 2012 (UTC)Reply
நற்கீரன், வால்ட் விட்மன் (Walt Whittman, டென்னிசன், எடுகர் ஆலன் போ, அலெக்சாண்டர் போப்பு ஆகியோருடைய செய்யுள்/கவிதைகளை ஒருவர் படித்துவிட்டு, அங்கே தேடிப்பார்த்துவிட்டு, விரிவாக நியூட்டன், இராபர்ட்டு ஊக்கு (Robert Hooke), இராபர்ட்டு பாயில் படைப்புகளைப்புகளைப் பற்றியோ, தாக்கங்களைப் பற்றியோ ஒன்றும் இல்லை ஆகவே ஆங்கிலேயர் ஒன்று செய்யவில்லை என்று முடிவுக்கு வருவது போன்றது அறிவியல் நம்பி அவர்களின் கூற்று. இன்று நமக்குக் கிடைத்திருக்கும் கவிதை-யாப்பு இலக்கிய இலக்கணங்களில் இவைபற்றிய குறிப்புகள் இல்லை என்பதைக் கொண்டு இப்படியான முடிவுகளுக்கு வருவது, எங்கு தேட வேண்டும் எப்படி ஒன்றை நிறுவ வேண்டும் என்று அறியாமையைக் காட்டுகின்றது. கம்ப இராமாயணம் 12 ஆம் நூற்றாண்டு என்கிறார்கள் அவர் தஞ்சைப் பெரிய கோவிலைப் பற்றியோ அதன் பொறியியலைப் பற்றியோ சொன்னாரா என்று தெரியாது. ஆனால் வியப்பூட்டும் கற்பனைகளை வைக்கின்றார். அறிவியலும் பொறியியலும் இல்லாமல், அப்படி ஒரு கட்டடத்தை எழுப்ப இயலாது. எழுப்பினாலும் எப்பொழுதோ விழுந்து இருக்கும். எல்லாம் சமசுக்கிருதத்தில் இருந்து வந்தது என்று சொல்ல முற்பட்டாலும், சமசுக்கிருதத்திலும் இப்படியான கட்டடங்களுக்கு விரிவான நூல்கள் இன்று கிடைக்கவில்லை. அதனால் நூல்கள் தமிழிலோ, சமசுக்கிருதத்திலோ இருந்திருக்கவில்லை என்று சொல்லப்புகுதல் இயலாது. சரி, மிகப்பெரிய கிரேக்க அறிவாளிகள் பலர் இருந்தார்கள் கி.மு. 400-கி.பி 100 வரை, ஏறத்தாழ கடந்த 1800-2000 ஆண்டுகளில் கிரேக்க அறிவியலாளர்கள், கணிதவியலாளர்களைக் காட்டுங்கள் (அதாவது 19 ஆம் நூற்றாண்டுவரை). கிரேக்கர்களைப் பற்றிய அறிவும் மெள்ள மெள்ளத்தான் அரபு, இலத்தீன் வழியாக ஐரோப்பியர்களின் கடின உழைப்பால், அதுவும் கூட கடந்த 100-150 ஆண்டுகளில் மீட்டெடுக்கப்பட்டு உணரப் பட்டுள்ளது. இப்பொழுதுதான் சீனத்தைப் பற்றித் துருவி ஆய்கிறார்கள். மருத்துவத்தில், மூலிகையில், உடலியக்கக் கூறுகளில் அண்மைக்காலம் வரை தமிழர்களின் அறிவு முன்னணியிலேயே இருந்தன. மூலிகைகள் பற்றி பன்னூறாயிரக்கணக்கான சுவடிகள் அழிந்து போயின. இன்று இருக்கும் அறிவும் மிகக் குறிப்பிடத்தக்கது (ஆனால் கடந்த 100-120 ஆண்டுகளில் வளர்த்தெடுத்த அறிவியல் முறைகளின் படி நிறுவப்படாமல் இருக்கலாம், ஆனால் அவை அக்கால முறைப்படி வளர்த்து எடுக்கப் பட்டவை). பல இடங்களில் துறைசார் நூல்கள் பற்றிக் குறித்துள்ளார்கள், ஆனால் பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை (தமிழில் மட்டும் இல்லை, சமசுக்கிருதத்திலும் இல்லை), ஆனால் ஆயிரக்கணக்கான கோயில்களும், கல்லணை போன்ற அமைப்புகளும் சாட்சி பகர்கின்றன. இசைக் கருவிகளும், இன்றும் இருக்கும் நுண்ணிய மருத்துவ, தாவர, பயிர்த்தொழில், வேதியியல், உண்மைகளும் சாட்சி பகர்கின்றன (எ.கா தமாசுக்கசு வாள் (Damascus Sword), சிலை வடிப்புகள்..). கல்லில் இசைத்தூண்கள் செய்யவும், பலவகையான இசைக்கருவிகள் செய்யவும் துல்லிய கணக்கு அறிவு வேண்டும். இன்னும் போதுமான அளவு ஆய்வு செய்யாமல் முன் முடிவுக்கு வருவது சரியன்று. தமிழில் அழிந்தவை, அழிக்கப்பட்டவை மிக ஏராளம். நீங்கள் தந்திருக்கும் மேற்கோள்கள் அறிவியல் துறையில் தக்க ஆய்வின் வெளிப்பாடால் நிறுவப்பட்டதன் விளைவாய் தனி ஆய்வு செய்தவர்களின் கூற்றுகள் அல்ல. எனவே நீக்கப் பரிந்துரைக்கின்றேன். அக்கருத்துகள் கூறவேண்டும் எனினும், தக்கவர்களின் மேற்கோள்களை இட்டு எழுதுங்கள் (நான் தக்கவர்கள் என்பது அறிவியல் வரலாற்றை, தமிழ் சார்ந்து தனி ஆய்வு செய்தவர்கள்). மேற்கோள்களை நீக்குமாறு வேண்டுகிறேன். நீங்கள் //அந்த மேற்கோள்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.// நான் மேலே காட்டியுள்ளவாறு அவை தவறான முறையில் அணுகி தவறான முடிவுகளுக்கு வந்தவை மட்டும் அல்லாமல், அவர்கள் அத்துறையில் தனி ஆய்வு செய்யாதவர்களும் அல்லர். அவர்கள் கூறுவது போலவே நானும் ஒரு வலைப்பதில் நேர் எதிர்மறையாக எழுதியிருந்தால் மேற்கோள் காட்டுவீர்களா? நடுநிலை காக்க வேண்டும். தக்க ஆய்வின் அடிப்படையில், மதிக்கத்தக்க இடத்தில் (ஆய்விதழ் போன்றவை) வெளியாகி இருந்தால் மேற்கோள் எடுத்துக்கூறலாம் (அதுவும் உசாத்துணைப் பகுதியில் இருந்தால் போதுமானது). அருள்கூர்ந்து நீக்க வேண்டுகிறேன். --செல்வா01:26, 27 பெப்ரவரி 2012 (UTC)Reply
தமிழர்களுக்கு அறிவியல்/பொறியியல் அறிவு இருக்கவில்லை என்று இங்கு கூறவில்லை. தமிழில் அந்த அறிவை அவர்கள் விரிவாகப் பதிவு செய்யவில்லை என்பதே இங்கு முன்வைக்கப்படும் கருத்து. சாதிய சமூக கட்டமைப்பில் தொழிற்கலைகளுக்கு அவர்கள் மதிப்புத் தராது சமய இலக்கியங்களுக்கு மட்டும் மதிப்புத் தந்தது ஒரு காரணமாக இருக்கலாம். தமிழிசை, சித்த மருத்துவம், தமிழர் தற்காப்புக் கலைகள், தமிழ்க் கணிதம் பற்றிய சுவடிகளும், ஆய்வுகளும் ஓரளவு உள்ளன என்பது மிகச் சரியே. ஆனால் பண்டைய கிரேக்கத்திலும், சமகிருதத்திலும், சீனத்திலும் ஏரணம், போரியல், கணிதம், வானியல், பொறியியல், கட்டிக்கலை, பாலியல் நூல்கள் பலவற்றின் எடுத்துக்காட்டுக்களை தரமுடியும். ஆனால் தமிழில் முடியாது. சமகிருதத்தில் இருந்து வந்தது என்று இங்கு எங்கும் வாதிடவில்லை. அவை அழிந்து போய் இருக்கலாம். ஆனால் கடந்த 250 ஆண்டுகளாக நடந்த மீட்டெடுப்புப் பணிகளில் இவற்றில் சிலவற்றைத் தானும் மீட்க முடியவில்லை என்பது கேள்விக்குறியாக அமைகிறது. தொல்காப்பியம் போன்று ஒரு மூல நூலை வேறு ஒரு துறையிலும் தானும் காண இன்னும் கிடைக்காதது தமிழின் பெரும் இழப்பே. இன்று உலகின் பல மொழிகளில் உயர் கல்வியை கற்கலாம், தமிழில் முடியாது. பல ஆய்வேடுகள் வெளிவருகின்றன. தமிழில் ஒன்றுதானும் இல்லை. இத் தரவுகள் அறிவியல் தமிழ் தேக்க நிலையில் உள்ளதையே எடுத்துக் காட்டுகின்றன. தரவுகள் வேறு மாறிக் காட்டின் அவற்றை வரவேற்க விழைகிறேன். இவ்வாறு தனி ஆய்வு செய்தவர்களின் ஆய்வுகளை/நூல்களை/கட்டுரைகளைச் சுட்டினால் நிச்சியம் அவற்றை இங்கு இணைத்து இவற்றை மாற்றி விடலாம். --Natkeeran02:52, 27 பெப்ரவரி 2012 (UTC)Reply
//நீங்கள் தந்திருக்கும் மேற்கோள்கள் அறிவியல் துறையில் தக்க ஆய்வின் வெளிப்பாடால் நிறுவப்பட்டதன் விளைவாய் தனி ஆய்வு செய்தவர்களின் கூற்றுகள் அல்ல. எனவே நீக்கப் பரிந்துரைக்கின்றேன். //
செல்வாவின் கருத்துகளுடன் உடன்படுகிறேன். கட்டுரை முழுக்கவே ஒரு வலைப்பதிவு இடுகை போன்றே உள்ளது. தற்காலத் தமிழ்நாட்டுச் சூழலில் அறிவியல் கல்வியில் தமிழின் பங்கு என்ன என்பது வேறு, வரலாற்றுக் காலம் தொட்ட தமிழ்ப் படைப்புகளில் அறிவியல் அணுகுமுறை என்ன என்பது வேறு.
//அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளில் உயர் கல்வி தமிழில் இல்லை. //
தமிழ்நாட்டில் முதுகலை பட்டம் வரை அறிவிலய் படிப்புகளைத் தமிழில் கற்பிக்கும் கல்லூரிகள் உள்ளன. தமிழில் பொறியியல் கல்வி அறிமுகமாகியுள்ளது. சித்த மருத்துவம் சார்ந்த துறைகளில் தமிழ் பயன்பாடுள்ளது என்று கருதுகிறேன். உறுதி செய்ய வேண்டும்.--இரவி06:05, 27 பெப்ரவரி 2012 (UTC)Reply
எல்லா விக்கி கட்டுரைகளையும் போல அனைவரும் இதனை மேம்படுத்தலாம். ஆனால் வேறு தகுந்த மேற்கோள்களை, ஆய்வுகளை சுட்டவும். மாற்றுக் கருத்துக்களின் உள்ளடக்கம் மாறாமல் கூடிய பொருத்தமான மேற்கோள்களை இணைத்து மாற்றவும். --Natkeeran14:18, 27 பெப்ரவரி 2012 (UTC)Reply
நன்றி இரவி, சுந்தர். நற்கீரன், இக்கட்டுரை இரவி குறிப்பிட்டவாறு ஒரு வலைப்பதிவு போல் இருக்கின்றதாகவே நானும் கருதுகின்றேன். நீங்கள் அறிவியல் பற்றிய பதிப்புகள் அதிகம் இல்லை என்று கூறவருவதை மறுப்பதல்ல நான் முன்வைப்பது. அந்த மேற்கோள்களைத் தந்தவர்கள் ஏதும் இது (அறிவியல் பதிப்புகள்) பற்றி குறிப்பிடத்தக்க நடுநிலை ஆய்வுகள் செய்ததன் பயனாக வெளியிட்ட கருத்துகள் அல்ல. நான் வேண்டுவது மேற்கோள்களை நீக்குவது பற்றித்தான். ஒரு குமுகாயத்தின் படைப்புகளை, அறிவார்ந்த உயர்ச்சிகளை (அல்லது தாழ்ச்சிகளை)ப் போதிய ஆய்வு இல்லாமல் மேற்கோள்களில் உள்ளவாறு கூறுதல் இயலாது. சமய-வாழ்வியல்-இலக்கண-இலக்கிய படைப்புகளில் அறிவியல் சார்ந்த கருத்துகளை (அதன் விரிவுகளை) எதிர்பார்ப்பது பொருத்தம் இல்லாதது. மேலே நான் சுட்டியவாறு வால்ட் விட்மன் முதலான கவிஞர்களில் படைப்புகளில் ஒரு சர்ச்சு கட்டடம் கட்டப்பட்டதின் தொழில்நுட்பத்தைப் பற்றியோ, நியூட்டன், மாக்சுவெல் போன்றோர் கருத்துகளையோ தேடுவதும், அதைக்கொண்டு முடிவுக்கு வருவதும் சரியான வழிமுறைகள் அல்ல. அறிவியல் (இயற்பியல், வேதியியல், உயிரியல்), கணிதவியல், பொறியியல், மருத்துவம் போன்றவை தற்கால விழிப்புணர்வுடன் வளர்ந்த்து கடந்த ஏறத்தாழ 150 ஆண்டுகளில் தான். இக்காலப்பகுதியில் தமிழில் வெளிவந்த பல்கலைக்கழகத் தரத்தில் இருக்கும் நூல்கள் சில நூறுகள்தாம் இருக்கும். பொது அறிவு அறிவியல் நூல்களும் சில நூறுகள்தாம் இருக்கும். காலம் (நூல்) போன்ற நூல்களும் கலைக்களஞ்சியங்களும் தமிழில் குறைவுதான். ஆனால் கடந்த காலத்தில் அறிவுப் பரவல் அதிகம் நூல்வழி இல்லாமல் பெரும்பாலும் வாய்வழியாகவும் இருந்திருக்கலாம். என்றாலும் இவற்றை தீர ஆராயாமல் கருத்துகள் கூறுவது சரியன்று. சில கருத்துகளை முன்வைக்கின்றேன்:
ஆ. குணசேகரன் எழுதியுள்ள "தஞ்சை சரசுவதி மகால் நூலகம்" என்னும் நூலில் சோழர்கள் காலம் முதல், 8-10 ஆம் நூற்றாண்டு முதல், தமிழ் நாட்டில் இருந்து வந்த நூலகங்களைப் பற்றி எழுதியுள்ளார். சரசுவதி பண்டாரகம், புத்தகப் பண்டாரகம் பற்றி கூறுகின்றார். கல்வெட்டு சான்றுளும் உள்ளன.
எந்த ஆங்கிலேயரும் பிரான்சியரும் வந்து தஞ்சைப் பெரிய கோயிலையும் மிகப்பல (~ஆயிரம்) கோயில்களையும், கல்லணையையும் கட்டித்தரவில்லை. அவற்றுக்கு பின்னே அறிவியல், பொறியியல் சார்ந்த கருத்துகளும் நூல்களும் இருந்திருக்க வேண்டும். தொல்காப்பியம் கூறுவது வியப்பூட்டுவது
நூல் எனப்படுவது நுவலும் காலை,
முதலும் முடிவும் மாறுகோள் இன்றித்,
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி,
உள் நின்று அகன்ற உரையொடு புணர்ந்து,
நுண்ணிதின் விளக்கல் அது வதன் பண்பே
இதில் வரும் ஒவ்வொரு சொல்லும் முக்கியமானவை. "மாறுகோள் இன்றி", தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி", "உள்நின்று அகன்ற உரையொடு புணர்ந்து, நுன்ணிதின் விளக்கல்" என்று எவ்வளவு தெளிவாகக் கூறியுள்ளார். அப்படியான நூல்கள் இல்லாமலா அப்படி ஆழம் பதியக் கூறுகின்றார்? துறைவாரியான அறிவுநூல்கள் இருந்திருக்க வேண்டும், ஆனால் பற்பல குமுகாய நிகழ்வுகளால், பழக்கங்களால் மிகப்பலவும் அழிந்து போயின.
அதுமட்டும் அல்ல திருவள்ளுவர்,
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
இவர்கள் கூறுவன எல்லாம் பொய், வெறும் கற்பனை என்று கொள்ள பொருந்தாது.
அண்மைக்காலத்தில் கிடைத்த கப்பல் சாத்திரம் பற்றிய இரண்டு நூல்கள் (கப்பல் சாத்திரம் 1698, நாவாய் சாத்திரம் 1741) ஆகியவை பற்றியும் அதிக ஆய்வு இல்லை. இவை குறிப்பிடத் தகுந்ததா எனவும் அறியேன்.
அறிவியல் போல் நுணுகி அறியும் தன்மைபற்றி பலர் பல இடங்களில் குறித்துள்ளனர் (இவை பொது இலக்கியத்தில் கிடைப்பவையே, துறை நூல்கள் அல்ல). கீழ்க்காண்பவை சில எடுத்துக்காட்டுகள்:
கு.வி. கிருஷ்ணமூர்தி, தமிழரும் தாவரமும், பக் 68-69: "..(மகரந்தச் சேர்க்கைக்குப் பின்பு கூட) தேனை இரண்டாவது முறையாக மீண்டும் சுரக்க ஆரம்பிக்கலாம். ஏற்கனவே பெற்றிருந்த மணத்தைத் தொடர்ந்து பெற்றிருக்கலாம்; அல்லது புதிய மணங்களைப் பெறலாம். பூவிதழ்களின் நிறத்தைத் திடீரென மாற்றிக்கொள்ளலாம். இத்தகைய நிகழ்வுகள் அனைத்தும் பல பூக்களில் மகரந்தச் சேர்கைக்குப் பின்பு நடைபெறுகின்றன என்பதைத் தற்போதைய ஆய்வுகள் எடுத்துக் கூறினாலும் (Krishnamurthy et al 1996) பண்டைய தமிழர் இவற்றை உற்றுநோக்கல் மூலம் அறிந்திருந்தனர் என்பது வியப்பளிக்கின்றது." - என்கிறார். சங்க இலக்கிய வரிகளையும் தந்துள்ளார்
தாமரைப் பூவின் வியப்பூட்டும் வெப்பச்சீர்நிறுத்தும் பண்பை (thermoregulation) பற்றி அண்மைய கண்டுபிடிப்பை குறுந்தொகை 376 கூறுகின்றது.
(Philos Trans R Soc Lond B Biol Sci. 1998 June 29; 353(1371): 935–943.doi: 10.1098/rstb.1998.0258PMCID: PMC1692294 "Physiological temperature regulation by flowers of the sacred lotus
R. S. Seymour)
Flowers of the sacred lotus, Nelumbo nucifera Gaertn. (Nelumbonaceae) are thermogenic and physiologically thermoregulatory. The 42 g flowers remain between 30-36°C during a 2 to 4-day period despite fluctuations in environmental temperatures between about 10-45°C.
“மன்உயிர் அறியாத் துன்அரும் பொதியில்
சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப
வேனிலானே தண்ணியள் பனியே
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி ஐயென
அலங்கு வெயில் பொதிந்த தாமரை
உள்ளகத் தன்ன சிறு வெம்மையளே”
(குறுந்தொகை 376)
இன்னொரு இடத்தில் அண்மைய கண்டுபிடிப்பான superhydrophobic nature பற்றியும் அது எவ்வாறு நுண்பரப்பு அமைப்புகளால் ஆனது என்பதைத் தாமரை இலையின் பண்பைத் தமிழ்ப்பாடல் கூறுகின்றது
குவளை நாறும் குவை இருங்கூந்தல்
ஆம்பல் நாறும் தேம்பொதி துவர்வாய்
குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன
நுண்பல் தித்தி, மாஅயோயே”
என்று குறுந்தொகை பாடல் 300 கூறுவதை வியப்புடன் நினைவு கூரவேண்டியுள்ளது.
கலிலையோ ("கலீலியோ") தான் முதன் முதல் ஞாயிறு ஒரு வளிமத்தால் ஆன பந்து என்ரு குறிப்பிட்டாராம் (பார்க்க: http://www.thesurfaceofthesun.com/) ஆனால் தீவளி ஞாயிறு என்று சுந்தரர் 8 ஆம் நூற்றாண்டில் கூறியுள்ளார் ("இயங்கு தீவளி ஞாயிறு").
நுண்ணறிவு சுட்டும் கூற்றுகள் பல உள்ளன இங்கு விரிக்க இயலாது. ஆனால் இவை எல்லாம் தனிச் சொற்கள், சொற்சரங்கள், கருத்துகள். தொல்காப்பியர் சொன்ன நூல்கள் ஆகாது. அப்படியான நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்று சுட்டவே இவை.
தமிழர் பற்றியும் அவர்கள் கலைகள் அறிவுநுணுக்கங்கள் பற்றி இன்னும் போதிய ஆய்வுகள் வெளியாகவில்லை. அதனால் தமிழர்கள் நன்னிலை எய்தவில்லை என்றும் தாழ்வுமனப்பான்மை ஊட்டும் விதமாகவும் அழித்துக் கூறுவதும் பொருத்தம் இல்லை நடுநிலைப்பாடும் அன்று.
அந்தத் தகாத மேற்கோள்களை நீக்குவதும் நீக்காததும் உங்கள் உகப்பு நற்கீறன். இது பற்றி சொல்ல மிகவுள்ளதால், இங்கு மேலும் நான் தொடர்வது கடினம். குறுந்தொகைப் பாடல்களை நான் முனைவர் இரா. வாசுதேவனிடம் இருந்து அறிந்தேன்.
--செல்வா 05:45, 28 பெப்ரவரி 2012 (UTC) --செல்வா06:01, 28 பெப்ரவரி 2012 (UTC)Reply
வணக்கம் செல்வா. அறிவியல் தமிழ் என்னும் போது அது தமிழில் வெளிவந்த அறிவியல் படைப்புகளையும், அறிவியல் செயற்பாடுகளின் போது தமிழ் மொழியின் பயன்பாட்டையும் சுட்டி நிற்கிறது எனலாம். அறிவியல் தமிழ் என்று நாம் இங்கு குறிப்பிடுவது விரிவான பல்துறை சார்ந்த படைப்புகளையே. தனியே கடந்த 500 ஆண்டுகளில் மேற்கே செம்மை பெற்ற அறிவியல் முறை ஊடாக உருவான அறிவியலை மட்டும் அல்ல. குறிப்பாக சமய/போற்றி இலக்கியம் மற்றும் இலக்கணம் தவிர்ந்த துறைகள். போரியல், கணிதம், ஏரணம், தொழில்நுட்பம்/தொழிற்கலைகள், சட்டம், மெய்யியல், பாலியல் உட்பட்ட பரந்த அறிவுத் துறை ஆக்கங்களையுமே இங்கு அறிவியல் தமிழ் என்று குறிப்பிடுகிறோம். அந்த வகையில் தமிழில் வெளிவந்த ஒரு போரியல் நூலை, கட்டிடக்கலை நூலை, ஏரண நூலை, கணித நூலை எம்மால் சுட்ட முடியாமல் இருக்கிறது. சீனத்தில், கிரேக்கத்தில், அரபு மொழியில், ஏன் சமசுகிருதத்திலும் கூட இவ்வாறு நூற்றுக்கணக்கான நூற்களை சுட்ட முடியும். இலக்கணத்துக்கு தொல்காப்பியம், இலக்கியத்துக்கு கம்பராமாயணம், சமய இலக்கியத்துக்கு சிவஞானபோதம் போன்று போரியலுக்கான ஒரு நூலை, கப்பற்கலைக்கான ஒரு நூலை, கட்டிடக்கலைக்கான ஒரு நூலை, கணிதத்துக்கான ஒரு நூலை எம்மால் சுட்ட முடியவில்லை. தமிழ் மன்னர்கள் பெரும் கோயில்களைக் கட்டினார்கள் என்றாலும், அதற்குப் பயன்பட்ட நூல்கள் தமிழில் இருந்தனவா என்பது இன்னும் கேள்விக் குறியே. இன்று ஆங்கிலத்தில் அமைந்த அனைத்து தமிழ்நாட்டு வலைத்தளங்கள் போல அப்போது வேறு மொழியில் அறிவு பகிரப்பட்டு இருக்கலாம். நீங்கள் சுட்டிய மேற்கோள்கள் எல்லாம் இலக்கிய மேற்கோள்களே. சமய நூல்களுக்குள்ளும் இன்ப இலக்கியத்துக்குள்ளும் ஆங்காங்கே அறிவியல் செய்திகளை தேடுவது எந்தளவு பலன் தரும். '"அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி" என்ற மேற்கோளை வைத்து அணுவை அப்போதே துளைத்தாகிவிட்டது என்று ஆனந்தங்காணுகிறவர்களே! துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி… என்ற குறளை வைத்து, ஏகே 47 அப்போதே இருந்தது என்று இருமாந்து போகிறவர்களே! "வலவன் ஏவா வான ஊர்தி" என்பதை வைத்து ஏவுகளையுகத்தைத் தமிழன் எப்போதோ துவங்கிவிட்டான் என்று இன்பக்களி கொள்கிறவர்களே!.' என்று வைரமுத்துக் கூறியது இங்கு பொருந்துகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. நூல்கள் அழிக்கப்பட்டன, அழிந்து போயின என்பதை ஏற்றுக் கொள்ளலாம். அவற்றை நாம் மீட்டுடெக்கவில்லை, ஆய்வு செய்யவில்லை என்பதையும் ஏற்றுக் கொள்ளலாம். எப்படியோ நிலைமை இன்று கவலைக்கிடமே. இந்தப் போதாமைகளை அந்த மேற்கோள்கள் சுட்டுகின்றன என்றே நினைக்கிறேன்.
அறிவியல் தமிழ் ஏன் இந்த நிலைமை என்பதை பற்றி சில ஊகங்களை முன்வைக் முடியும். முன்னர் சுட்டியபடி சாதிய சமய கடமைப்பில் தொழிற்கலைகள் மதிக்கப்படாதல். சமய தத்துவங்களில் மட்டும் அக்கறை காட்டி மோட்சத்தைப் பற்றியும் மறுவுலகத்தைப் பற்றியும் அதிகம் அலட்டி விட்டு இவ்வுலக நுணுக்கங்களை பதிவுசெய்யாமல் விட்டுவிட்டதல். எழுத்து மொழி புலமை புலவர்களிடம் மட்டுமே இருந்தால் தொழிற் கலைஞர்கள் தமது நுட்பத்தை பதிவு செய்ய முடியவில்லை. சமகிருதம் ஆங்கிலம் அரபு போன்ற பிற மொழிகள் பல காலங்கள், ஏன் இன்னும் காலனித்துவ ஆட்சி மொழிகளாக, அறிவு மொழிகளாக இருந்தால் தமிழ் பின் தள்ளப்பட்டது. தமிழரின் அக்கறை இன்னை, தன்மதிப்பு இன்மை என்று பல காரணங்களால் அறிவியல் தமிழ் நலிவு நிலையில் உள்ளது. இவற்றை எல்லாம் எதிர்த்து பல எடுத்துக்காட்டுக்கள் விதிவிலகுகள் இருக்கின்றது என்பது உண்மை. அந்த எடுத்துக்காட்டுக்கள் மேலும் விரிவாக வேண்டும் என்பதே எம் எல்லோரின் அவா. --Natkeeran00:30, 29 பெப்ரவரி 2012 (UTC)Reply
செல்வா, அருமையான பல தகவல்களைத் தந்துள்ளீர்கள். இவற்றைத் தக்க சான்றுகளின் துணையுடன் சுட்டி கட்டுரையின் நடுநிலையை மேம்படுத்தலாம். தமிழ் இலக்கிய வரலாற்றில் அறிவியல் பற்றிய பல குறிப்புகள் இங்கு தென்படுகின்றன. அவற்றுள் சில நூல்களையாவது நூலகங்களில் பார்த்துச் சான்றாகத் தரலாம். காட்டாக, காமில் சுவெலிபில் தனது "Tamil literature" எனும் நூலில்[1] வெல்லக்கு-வாரன் ஆகியோரின் Theory of Literature (1963)[2] நூலை மேற்கோள் காட்டுகிறார். அதில் தமிழ் இலக்கிய வரலாற்றை இயற்கைநெறிக்காலம், அறநெறிக்காலம், சமயநெறிக்காலம், தத்துவநெறிக்காலம், அறிவியல் நெறிக்காலம் என்று பிரிக்கும் குறிப்பைத் தருகிறார். இலக்கிய வரலாற்றில் நூலின் கருப்பொருள் பொதுவாகக் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்பதால் இத்தகைய வகைப்பாடு கருத்தில் கொள்ளப்படவில்லை போல் தெரிகிறது. -- சுந்தர்\பேச்சு09:26, 1 மார்ச் 2012 (UTC)Reply
நற்கீரன், செய்யுளில் அறிவியற் கருத்துகள் இருந்தால் அவற்றை ஏற்க முடியாது என நாம் கூற முடியாது. மேலை நாடுகளில் எழுதும் முறையை மட்டும் தான் அறிவியல் முறை என்று எப்படிச் சொல்லலாம்? கருத்து சரியா, தகவல் சரியா என்று மட்டுமே பார்க்க வேண்டும். புறநானூற்றில் அறிவியல் கூற்றுகள் இருந்தாலும் சரி, வேறு நூலில் இருந்தாலும் சரி. அண்மைக் காலத்தில் இத்தகைய நூல்களை மறுஆய்வு செய்து அவற்றில் பொதிந்துள்ள தகவல்களை வெளிக் கொண்டு வந்துள்ளனர். எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் உள்ளன. திருக்குறளில் உள்ள மேலாண்மைக் கருத்துக்களை திரு.இறையன்பு (என நினைக்கிறேன்) நூலாக வெளியிட்டுள்ளார். திருமூலர் திருமந்திரம் உட்பட பல பழந்தமிழ் நூல்கள் சித்த மருத்துவர்களின் உயர்கல்வி பாடத்திட்டத்தில் உள்ளன. (மேலும் பல நூல்கள்: http://www.thamizhkkuil.net/tmi/sub_index.pdf#page=36) ஏன் உலக அளவில் சீன நூலான "The Art of War" என்பதைத் தொழிலுக்கும் வணிகத்துக்கும் அடிப்படையான உத்திகளைத் தருவதாக மேலாண்மைக் கல்வியில் பயிற்றுவிக்கப்படவில்லையா? ஏன் அது மேலாண்மை நூல் வடிவில் இல்லாமல் பழமொழிகளின் தொகுப்பு போல உள்ளது என யாரும் கேள்வி எழுப்பவில்லையே? -- சுந்தர்\பேச்சு11:27, 1 மார்ச் 2012 (UTC)Reply