மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)) அல்லது என்பது இந்திய அரசு கொண்டுவந்த வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆகும். இச் சட்டம் 25.05.2005 முதல் அமலாக்கப்பட்டது. முதலில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இது 2009 காந்தியடிகள் பிறந்த நாளன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது. தமிழக கிராமப்புற மக்கள் இதனை 100 நாள் வேலை என்று அழைக்கின்றனர்.

திட்டம்

இத்திட்டத்தின் கீழ், பொதுவேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய சிறப்புத்திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

18 வயது நிரம்பிய திறன் சாரா உடல் உழைப்பு செய்ய விரும்பும் கிராமப்புற நபர்கள், தங்கள் பெயர், வயது மற்றும் முகவரியை கிராம பஞ்சாயத்திடம், புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். கிராம பஞ்சாயத்தார், தகுந்த விசாரணைக்கு பின்னர், நபரை பதிவு செய்து, அவருக்கான, பணி அட்டையை வழங்குவார்.

பணி அட்டையில், நபரின் விவரங்கள், புகைப்படத்துடன் இடம் பெற்று இருக்கும். 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு, உட்பட்டு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.[1]

இத்திட்டம் ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு வேலை உறுதி அளிக்கிறது.

திட்டத்தின் பயன்கள்

  • ஊரக ஏழை மக்களின் வேலைக்கான உரிமை நிலை நாட்டப்படும்.
  • கிராமப்புற சமூகப் பொருளாதார உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். ஊரக பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்.
  • தனிநபர் இல்ல கழிப்பறைகள் உருவாக்கப்பட்டு கிராமப்புறங்கள் சுகாதார மேம்பாடு அடையும்.
  • ஊரக பகுதிகளில் உள்ள மக்கள் இடம் பெயர்வு குறைவதோடு அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும்.
  • நிழல் தரும் மரங்கள், பயன் தரும் மரங்கள் ஆகியவை நட்டு இயற்கை வளம் மேம்படுத்தப்படும்.

சம்பளம் அதிகரிப்பு

ஒரு நாளைக்கான சம்பளம் தற்போது ரூபாய் 133 லிருந்து ரூ.214.(மாநில அளவில் வேறுபாடு) ஆக உயர்த்தப்பட்டுள்ளது.[2][3][4]

பணிபுரிபவர்கள் வயது

இத் திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்கள் வயது தொடர்பாக வெளியாகியுள்ள தரவு ஆய்வு செய்யப்பட்டதில், 2017-18 நிதியாண்டில் 18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடையேயான இளம் வயதினர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனைக் காட்டுகிறது. இவ்வயதில் பணியாற்றியோர் எண்ணிக்கை 2013-14இல் 1 கோடிக்கும் அதிகமாக இருந்தது. பின்னர் அது 2017-18இல் 58.69 லட்சமாகக் குறைந்தது. எனினும் 2018-19இல் மீண்டும் அதிகரித்து 70.71 லட்சமாக மாறியிருக்கிறது. பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி ஆகிய அரசின் நடவடிக்கைகளுக்குப் பின்னர்தான் இளம் வயதினர் இவ்வேலைக்கு வருவது அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது .[5]

விமர்சனம்

இச் சட்ட நடைமுறை திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் செய்யப்படுவதால் ஏழை தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று செய்தித்தாள்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமைக்குழு மத்திய கிராமப்புற மேம்பாட்டு துறை செயலாளருக்கும், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், மேற்கு வங்கம், பீகார், கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு 2014இல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தேசிய மனித உரிமைக்குழு வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியது.[6]

சமூக தணிக்கை

தமிழ்நாட்டில் சமூக தணிக்கைத் திட்டத்தின் கீழ் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் குறைகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 18004252152 பயனர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.[7]

மேற்கோள்கள்

  1. http://www.indg.in/agriculture/rural-employment-schemes/nergs/ba4bc7b9abbfbaf-b8abb0b95-bb5bc7bb2bc8bb5bbebafbcdbaabcdbaabc1-b9ab9fbcdb9fbaebcd பரணிடப்பட்டது 2009-09-25 at the வந்தவழி இயந்திரம் இந்திய முன்னேற்ற நுழைவாயில்
  2. http://www.dinamalar.com/news_detail.asp?id=660738
  3. http://www.business-standard.com/article/economy-policy/wages-for-rural-job-scheme-to-be-raised-113030400293_1.html
  4. http://timesofindia.indiatimes.com/city/mumbai/Wage-rates-under-MGNREGA-revised/articleshow/18832429.cms
  5. https://indianexpress.com/article/business/economy/distress-signal-share-of-youngest-workers-in-nreg-begins-to-rise-6081133/
  6. "மத்திய அரசுக்கும் ஏழு மாநில அரசுகளுக்கும் தேசிய மனித உரிமைக்குழு நோட்டீஸ்". தீக்கதிர்: pp. 6. 06 சனவரி 2014 இம் மூலத்தில் இருந்து 2014-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140118125515/http://epaper.theekkathir.org/. பார்த்த நாள்: 13 சனவரி 2014. 
  7. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சமூகத் தணிக்கை தொடர்பான புகார்கள் அல்லது குறைகளை தெரிவித்திட கட்டணமில்லா தொலைபேசி எண் - தமிழக அரசு அறிவிப்பு

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya