மகிந்த ராசபக்ச
பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa, சிங்களம்: පර්සි මහේන්ද්ර රාජපක්ෂ; பிறப்பு: 18 நவம்பர் 1945[1]), பொதுவாக மகிந்த ராசபக்ச (Mahinda Rajapaksa) என்பவர் இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் அரசுத்தலைவரும், முன்னாள் பிரதமரும் ஆவார்.[2] முன்னர் இவர் 2005 முதல் 2015 வரை 6 ஆவது இலங்கை அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார். மகிந்தவின் அரசுக்கும், அரசுத்தலைவர் கோட்டாபய இராசபட்சவிற்கும் எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெற்றுவந்த நிலையில், 2022 மே 9 இல் மகிந்த ராசபக்ச தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.[3]. வழக்கறிஞரரான மகிந்தா 1970 இல் முதன்முதலாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி 2005 அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெறும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அரசுத்தலைவராகத் தனது முதலாவது ஆறாண்டு காலப் பதவியை 2005 நவம்பர் 19 இல் தொடங்கினார். 2010 அரசுத்தலைவர் தேர்தலில் இரண்டாம் தடவையாக 2010 சனவரி 27 இல் தெரிவானார். மூன்றாவது தடவையாக 2015 தேர்தலில் போட்டியிட்டு மைத்திரிபால சிறிசேனவிடம் தோற்று 2015 சனவரி 9 இல் பதவியில் இருந்து விலகினார்.[4] 2015 நாடாளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். ஆனாலும் இவரது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால் இவர் பிரதமராக முடியவில்லை.[5] 2018 அக்டோபர் 28 இல், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி விலகியதை அடுத்து மகிந்த ராசபக்ச இலங்கைப் பிரதமராக அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார். இந்நடவடிக்கை அரசியலமைப்புக்கு முரனாணது எனக் கூறி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக மறுத்தார். இதன் மூலம் நாட்டில் அரசியலமைப்பு நெருக்கடி உருவானது. இலங்கை நாடாளுமன்றம் ராசபக்சவுக்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை 2018 நவம்பர் 14, 16 தேதிகளில் கொண்டு வந்தது. இரண்டு தீர்மானங்களையும் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை எனக் காரணம் கூறி சிறிசேன ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியில், 2018 திசம்பர் 3 இல் ராசபக்சவின் நியமனத்தை நீதிமன்றம் ஒன்று செல்லுபடியற்றதாக்கியது. ராசபக்ச 2018 திசம்பர் 15 இல் பிரதமர் பதவியில் இருந்து விலகி, எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார். இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற இலங்கை பொதுசன முன்னணியின் தலைவராக மகிந்த 2019 இல் பொறுப்பேற்றார். 2019 அரசுத்தலைவர் தேர்தலில் மகிந்தவின் தம்பி கோட்டாபய இராசபட்ச வெற்றி பெற்றதை அடுத்து மகிந்த நவம்பர் 18 இல் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார். 2020 நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ராசபக்ச நான்காவது தடவையாக பிரதமரானார். 2022 மே 3 இல் மகிந்தவின் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று எதிர்க்கட்சிகளினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.[6] இராசபட்ச குடும்பத்தின் ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பொருளாதார நெருக்கடி இலங்கையின் விடுதலைக்குப் பிறகு அதன் வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமையினால் நாட்டை திவால் நிலைக்கு கொண்டு வந்தது. போராட்டக்காரர்கள் அவரை "மைனா" என அழைத்து பதவி விலகக் கோரினர். 2022 மே 9 இல், மகிந்த தனது ஆதரவாளர்களை பேருந்துகள் மூலம் அழைத்து வந்து தனது அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார். ஆதரவாளர்கள் இலங்கை பொதுசன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் வழிநடத்தப்பட்டு, அலரி மாளிகைக்கு வெளியே கூடியிருந்த அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து காலிமுகத் திடல் சென்று தாக்குதல்களை நடத்தினர். இதனை அடுத்து தென்னிலங்கையில் பல இடங்களிலும் வன்முறைகள் வெடித்தன. மகிந்த ராசபக்ச 2022 மே 9 இல் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.[7][8][9] வாழ்க்கைச் சுருக்கம்பின்னணிமகிந்த இராசபக்ச அம்பாந்தோட்டையில் வீரக்கெட்டிய என்ற ஊரில்[10] புகழ்பெற்ற அரசியல் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை டி. ஏ. ராசபக்ச தகநாயக்காவின் அமைச்சரவையில் வேளாண்மைத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். இவரது மாமன் டி. எம். ராசபக்ச அம்பாந்தோட்டை தொகுதியின் அரசாங்க சபை உறுப்பினராக 1930களில் பதவி வகித்து வந்தவர்.[10] ஆரம்ப வாழ்வும் கல்வியும்ராசபக்ச காலி, ரிச்மண்ட் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு, நாளந்தா கல்லூரியிலும், தேர்ஸ்டன் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[10][11] ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உதவி நூலகராகப் பணியாற்றினார்.[12][13] பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று 1977 நவம்பரில் சட்டவறிஞர் ஆனார்.[14] தங்காலையில் இவர் சட்டத்தரணியாகப் பணியாற்றினார்.[10] குடும்பம்1983 இல் ராசபக்ச சிராந்தி விக்கிரமசிங்கவைத் திருமணம் புரிந்தார். சிராந்தி சிறுவர்-உளவியலாளரும், கல்வியாளரும் ஆவார். சிராந்தியின் தந்தை இலங்கைக் கடற்படையின் இளைப்பாறிய அதிகாரி ஆவார்.[15] இவர்களுக்கு நாமல், யோசித்த, ரோகித்த என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். நாமல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். யோசித்த இலங்கைக் கடற்படையில் பணியாற்றியவர்.[16] மகிந்தவின் சகோதரர் கோத்தாபய ராசபக்ச இலங்கைத் தரைப்படையில் 20 ஆண்டுகள் பணியாற்றியவர். பின்னர் மகிந்தவின் ஆட்சியில் பாதுகாப்புச் செயலாலராகப் பணியாற்றினார்.[17] இன்னும் ஒரு சகோதரர் பசில் ராசபக்ச கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஆவார். மகிந்தவின் அண்ணன் சாமல் ராசபக்ச நாடாளுமன்ற சபாநாயகராகப் பணியாற்றினார். கௌரவ விருதுகள்
விமர்சனங்கள்மனித உரிமை மீறல்கள்இலங்கையின் அதிபரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமாகிய மகிந்த ராசபக்சா தமிழர்களுக்கு எதிரான பல மனித உரிமை மீறல்களைப் புரிந்துள்ளார் என பல சர்வதேச அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
பிரதமர் பதவியிலிருந்து விலகல்இலங்கை பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு 9 மே 2022 அன்று மகிந்த ராஜபக்ச, இலங்கைப் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பினார்.[30][31][32] குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia