மக்கள் நீதிமன்றம்

லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் சமாதானநிலை மற்றும் சமரசம் மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும். இந்திய நீதிமன்றங்கள், தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை, மனுதாரர்களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ சமரச முறையில் தீர்வு காண மக்கள் நீதி மன்றங்களுக்கு அனுப்பலாம்.[1] இது உரிமையியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு 89-ன் கீழ் வருகின்றது.[2]

செயல்படும் முறை

சட்டப்பணிகள் ஆணைக் குழு பிரிவு 19-தின் படி, மக்கள் நீதிமன்றம், 3 பேர் கொண்ட அமர்வாக இருக்கும். அதில் ஒருவர் பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி, மற்றொருவர் சமூக நலப் பணியாளர் அல்லது பொது நல ஊழியர், மூன்றாம் நபர் வழக்கறிஞர்.[1]

  1. நீதி மன்றத்திலிருக்கும் நிலுவையிலுள்ள வழக்குகளில் சம்மந்தப்பட்ட இருதரப்புக்கும் இடையே சமரசத் தீர்வு ஏற்படுத்துதல்.
  2. நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட சில பிரச்சனைகளுக்கும் பேசித் தீர்வு காண முயலுதல்.
  3. வழக்குத் தரப்பாளர்களுக்குக் குறைந்த செலவில் விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்தல்.

வரலாறு

இது ஒரு மாற்றுமுறையில் சச்சரவுகளுக்கு தீர்வு காணும் ஒரு வழிமுறையாகும். "லோக்" என்பது மக்களையும் "அதாலத்" என்பது நீதிமன்றத்தையும் குறிக்கும். மக்கள் நீதிமன்றம் என்ற எண்ணத்தினை முன்மொழிந்ததில் இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான பி.என்.பகவதி அவர்களுக்கு முதன்மையான பங்குண்டு. மக்கள் நீதிமன்றம் முதன் முதலில் குஜராத் மாநிலத்தில் ஜூனகார் என்ற இடத்தில் மார்ச் 14, 1982 அன்று லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதி மன்றம் நடந்தது.[2]

சிறப்புகள்

இந்த மக்கள் நீதிமன்றம் மூலம் கோர்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் மட்டுமல்லாமல் கோர்ட்டுக்கு வர இருக்கும் தாவாக்களுக்கும் தீர்வு கண்டுவிடலாம். இங்கு தீர்வுகாணப்பட்டால் அதற்குமேல் மேல்முறையீட்டிற்குப் போக முடியாது.

தீர்க்கப்படும் வழக்கு வகைகள்

காசோலை தொடர்பான வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், குடும்பப் பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், தொழில் தகராறுகள், தொழிலாளர் பிரச்னை தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகளில் சமாதானம் ஏற்படுத்திக் கொள்ளத் தன்மையுள்ள வழக்குகள், நில ஆர்ஜிதம் மற்றும் இழப்பீடு தொடர்பான வழக்குகள், வங்கிக் கடன் பிரச்னைகள், வாடகை விவகாரங்கள், விற்பனை வரி, வருமான வரி மற்றும் மறைமுக வரி தொடர்பான பிரச்சனைகள்.

2013 இல்

இந்தியாவில் நவம்பர் 23, 2013 அன்று வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண உதவும் மெகா லோக் அதாலத் நாடு முழுவதும் நடைபெற்றது[3]. வட்டார அளவிலான கீழமை நீதிமன்றம் தொடங்கி, உச்ச நீதிமன்றம் வரை நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் இந்த அதாலத் நடத்தப்பட்டது. ஒரே நாளில் இந்தியா முழுவதிலும் 35 லட்சம் வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டன.[4]

2014 இல்

டிசம்பர் 6, 2014-ல் சேலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய நிகழ்வில், சுமார் ஐம்பதாயிரம் வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 42,695 வழக்குகளுக்கு மக்கள் நீதி மன்றம் மூலம் சமரச தீர்வு காணப்பட்டன. இந்த வழக்குகளில் ஏற்பட்ட தீர்வுகள் மூலம் இழப்பீட்டுத் தொகையாக ரூ.31 கோடியே 10 லட்சம் வழங்கப்பட்டது.[5]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 மக்கள் நீதி மன்றம், தி ஹிந்து, தமிழ் பதிப்பு, 11 ஆகஸ்ட் 2015
  2. 2.0 2.1 http://www.academia.edu/3296008/Lok_Adalat_System_in_India
  3. http://tamil.thehindu.com/india/வழக்குகளுக்கு-தீர்வு-காண-மெகா-லோக்-அதாலத்/article5381228.ece
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-27. Retrieved 2013-11-26.
  5. மக்கள் நீதி மன்றம்: 42 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்வு, தினமணி, 7 திசம்பர் 2014
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya