மங்கோலியர்களின் கீவ உரூசு மீதான படையெடுப்பு
உருசியா மீதான மங்கோலியப் படையெடுப்பானது மங்கோலியர்களின் ஐரோப்பியப் படையெடுப்பின் ஒரு பகுதியாகும். பதிமூன்றாம் நூற்றாண்டில் மங்கோலியப் பேரரசானது கீவ உரூசு' மீது படையெடுத்து வென்றது. ரியாசான், கோலோம்னா, மாஸ்கோ, விளாடிமிர் மற்றும் கீவ் ஆகிய ஏராளமான நகரங்களை அழித்தது.[4][5] இந்த படையெடுப்புகளானவை மே 1223 ஆம் ஆண்டு கல்கா ஆற்று யுத்தத்தின்போது ஆரம்பிக்கப்பட்டன. இந்த யுத்தத்தில் மங்கோலியர்கள் பல்வேறு உரூசு' வேள் பகுதிகளின் படைகளைத் தோற்கடித்தனர். எனினும் இறுதியில் பின்வாங்கினார். படு கான் தலைமையிலான முழுமையான உரூசு' படையெடுப்பானது 1237 முதல் 1242 வரை இதற்குப் பின்னர் நடைபெற்றது. ஒகோடி கான் இறந்த பிறகு அடுத்த கான் யார் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டிய நிகழ்வு காரணமாக இந்த படையெடுப்பு முடித்துக் கொள்ளப்பட்டது. அனைத்து வேள் பகுதிகளும் மங்கோலிய ஆட்சிக்கு அடிபணிய வைக்கப்பட்டன. தங்க நாடோடிக் கூட்ட பேரரசின் பகுதியாக மாறின. இவற்றில் சில வேள் பகுதிகள் 1480 ஆம் ஆண்டுவரை இவ்வாறு தொடர்ந்தன. பதின்மூன்றாம் நூற்றாண்டில் கீவ் அரசின் சிதறலின் ஆரம்பத்தால் இந்தப் படையெடுப்பு நடைபெறும் சூழ்நிலை மங்கோலியர்களுக்கு எளிதாக இருந்தது. கிழக்கு ஐரோப்பாவின் வரலாற்றிற்கு இந்த படையெடுப்புகள் எண்ணிலடங்காத கிளர்ச்சிகளை உண்டாக்கின. உதாரணமாக கிழக்கு ஸ்லாவிய மக்கள் மூன்று வெவ்வேறு நாடுகளாக பிரிந்தனர். அவை தற்கால உருசியா, உக்ரைன் மற்றும் பெலருஸ்.[6] மேலும் இந்த படையெடுப்புகளின் காரணமாக மாஸ்கோவின் கிராண்ட் டச்சி வளர்ச்சியடைந்தது. பின்புலம்அந்நேரத்தில் சிதைந்து கொண்டிருந்த கீவ உரூசானது, தொலைக் கிழக்கின் மர்மமான பகுதிகளிலிருந்து வந்த தடுக்க முடியாத அயல்நாட்டு எதிரிகளின் எதிர்பாராத வெடிப்பை சந்தித்தது. அந்நேரத்தில் உரூசு வரலாற்றாளர் ஒருவர் "நமது பாவங்களின் காரணமாக" என்று பின்வருமாறு எழுதினார், "தெரியாத நாடுகள் வந்தன. அவர்களது பிறப்பிடம் அல்லது எங்கிருந்து அவர்கள் வந்தனர் என்று யாருக்கும் தெரியாது, அல்லது எந்த மதத்தை அவர்கள் பின்பற்றினார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது. அது கடவுளுக்கு மட்டுமே தெரியும் மற்றும் புத்தகங்கள் மூலம் அறிவு கொண்ட மனிதர்களுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம்".[7] மங்கோலிய வீரர்கள் வருவதை நாடோடிக் குமன்கள் மூலம் உரூசு இளவரசர்கள் முதன்முதலில் கேட்டறிந்தனர். ஆரம்பத்தில் எல்லைப்பகுதிகளில் வாழ்ந்த குடிமக்களைச் சூறையாடுவதற்காகப் பெயர் பெற்ற குமன்கள் தற்போது அமைதியான உறவை ஏற்படுத்த விரும்பினர். தங்களது அண்டை நாட்டவரை பின்வருமாறு எச்சரித்தனர்: "இந்தப் பயங்கரமான அந்நியர்கள் எங்களது நாட்டை எடுத்துக் கொண்டனர். நீங்கள் வந்து எங்களுக்கு உதவாவிட்டால் அவர்கள் உங்களது நாட்டையும் எடுத்துக்கொள்வார்கள்". இந்த அழைப்பிற்கு பிறகு தைரிய மிசுதிலாவ் மற்றும் முதிர்ந்த மிசுதிலாவ் ரோமனோவிச் ஆகியோர் இணைந்து படைகளைத் திரட்டி கிழக்கு நோக்கி எதிரியைச் சந்திக்கப் புறப்பட்டனர். ஏப்ரல் 1, 1223 ஆம் ஆண்டு கல்கா ஆற்று யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டனர். இந்தத் தோல்வியின் காரணமாக படையெடுத்து வந்தவர்களின் கருணையை எதிர்பார்த்து இருக்கும் நிலைக்கு உரூசு வேள் பகுதிகள் தள்ளப்பட்ட போதும், மங்கோலியப் படைகள் பின்வாங்கின. 13 ஆண்டுகளுக்கு அவர்கள் திரும்பி வரவே இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் உரூசு இளவரசர்கள் முற்காலத்தில் இருந்தது போலவே தங்களுக்குள் சண்டையிட ஆரம்பித்தனர். பிறகு ஒரு புதிய மற்றும் அதிக பலம் வாய்ந்த படையால் திடுக்கிட வைக்கப்பட்டனர். இந்த ஆரம்பகால யுத்ததைப்பற்றி மங்கோலியர்களின் இரகசிய வரலாற்றில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அது பின்வருமாறு: "பிறகு அவர் (செங்கிஸ் கான்) கடுமையான தோர்பேயை மெர்வ் நகரத்திற்கு எதிராகச் சண்டையிட அனுப்பினார். ஈராக் மற்றும் சிந்து ஆற்றுக்கு இடைப்பட்ட மக்களை வெல்ல அனுப்பினார். அவர் துணிவுமிக்க சுபேதேயை வடக்கே போர் புரிய அனுப்பினார். அங்கு 11 ராச்சியங்கள் மற்றும் பழங்குடி இனத்தவரை அவர் (சுபேதே) தோற்கடித்தார். வோல்கா மற்றும் உரல் ஆறுகளைக் கடந்தார். கடைசியாகக் கீவுக்கு எதிராகப் போர் புரிந்தார்." படு கானின் படையெடுப்பு1236 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் படு கான் மற்றும் சுபுதை தலைமையிலான சுமார் 25,000[சான்று தேவை] ஏற்ற வில்வித்தையாளர்களைக் கொண்ட பெரிய மங்கோலிய இராணுவமானது வோல்கா ஆற்றைக் கடந்து வோல்கா பல்கேரியா மீது படையெடுத்தது. பலவீனமான வோல்கா பல்கேரியர்கள், குமன்கள்-கிப்சாக்குகள் மற்றும் ஆலனி ஆகியோரின் எதிர்ப்பை அணைக்க அவர்களுக்கு ஒரு மாதம் மட்டுமே தேவைப்பட்டது. ![]() நவம்பர் 1237 ஆம் ஆண்டு படு கான் தனது தூதர்களை விளாடிமிரின் இரண்டாம் யூரியின் அவைக்கு அனுப்பினார். அடிபணியுமாறு கூறினார். ஒரு மாதத்திற்குப் பிறகு, நாடோடிக் கூட்டங்கள் ரியாசானை முற்றுகையிட்டன. ஆறு நாட்கள் நடந்த ஒரு குருதி தேய்ந்த யுத்தத்திற்குப் பிறகு நகரமானது முற்றிலுமாக அழிக்கப்பட்டு அங்கு வாழ்ந்தவர்கள் கொல்லப்பட்டனர்.[5] இந்தச் செய்தியைக் கேட்டு எச்சரிக்கை அடைந்த இரண்டாம் யூரி படையெடுப்பாளர்களைப் பிடிப்பதற்காக தனது மகன்களை அனுப்பினார். ஆனால் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு, தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓட்டம் பிடித்தனர். கோலோம்னா மற்றும் மாஸ்கோ ஆகியவற்றை எரித்த பின்னர் பெப்ரவரி 4, 1238 ஆம் ஆண்டு நாடோடிக் கூட்டமானது விளாடிமிரை முற்றுகையிட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு விளாடிமிர்-சுஸ்டாலின் தலைநகரமானது வெல்லப்பட்டு எரித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அரச குடும்பமானது நெருப்பில் அழிந்து போனது. அதேநேரத்தில் பட்டத்து இளவரசர் வடக்குநோக்கி பின்வாங்கினார். வோல்கா ஆற்றை கடந்த அவர், ஒரு புதிய ராணுவத்தைத் திரட்டினார். ஆனால் மார்ச் 4ஆம் தேதி நடைபெற்ற சித் ஆற்று யுத்தத்தின்போது மங்கோலியர்கள் அந்த ராணுவத்தை சுற்றிவளைத்து முற்றிலுமாக அழித்தனர். இதன்பிறகு படு கான் தனது ராணுவத்தை சிறு பிரிவுகளாகப் பிரித்தார். அப்பிரிவுகள் நவீன உருசியாவின் 14 நகரங்களைக் கொள்ளையடித்தன. அவை: ரோஸ்டோவ், உக்லிச், எரோஸ்லாவ், கோஸ்ட்ரோமா, கஷின், இசுனயாடின், கோரோடெட்ஸ், கலிச், பெரெஸ்லாவ்-சலேஸ்கி, யூரியேவ்-போல்ஸ்கி, டிமிட்ரோவ், வோலோகோலாம்ஸ்க், திவேர் மற்றும் தோர்சோக். உருசிய நகரங்களின் மதில் சுவர்களை இடிப்பதற்காக டொலுய் தலைமையிலான மங்கோலியர்கள் சீன முற்றுகை இயந்திரங்களைப் பயன்படுத்தினர்.[8] மங்கோலியர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது கோசெல்ஸ்க் என்ற சிறு பட்டணத்தை வெல்வதாகும். சிறுவயது இளவரசனும் டைடசின் மகனுமாகிய வாசிலி மற்றும் அங்கு வாழ்ந்த மக்கள் மங்கோலியர்களை எதிர்த்து ஏழு வாரங்களுக்குத் தாக்குப் பிடித்தனர். 4,000 பேரைக் கொன்றனர். கதைப்படி, மங்கோலியர்களின் வருகைச் செய்தியை அறிந்த போது கிடேஸ் என்ற முழுப்பட்டணமும் அதன் அனைத்து மக்களுடனும் ஒரு ஏரியில் மூழ்கியது. புராணக்கதைப்படி அதை இன்றும் காணமுடியும். இந்த அழிவில் இருந்து தப்பித்த முக்கிய நகரங்கள் நோவ்கோரோத் மற்றும் பிஸ்கோ ஆகியவையாகும். மங்கோலியர்கள் நோவ்கோரோத் நோக்கி முன்னேறத் திட்டமிட்டனர். ஆனால் அந்நகரம் முன்னதாகவே புத்திசாலித்தனமாக சரணடையும் முடிவை எடுத்ததால் மற்ற நகரங்களுக்கு ஏற்பட்ட நிலைமை அதற்கு ஏற்படவில்லை.[9] 1238 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கிரிமியா மூவலந்தீவைப் படு கான் சூறையாடினார். மொர்தோவியா அமைதிப்படுத்தப்பட்டது. 1239 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் அவர் செர்னிகிவ் மற்றும் பெரேயியஸ்லாவ் ஆகிய நகரங்களை கொள்ளையடித்தார். பல நாட்கள் முற்றுகைக்குப் பிறகு 1240 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கீவ் நகரத்திற்குள் நாடோடிக் கூட்டமானது புயல் போலப் புகுந்தது. ஹலிசின் டேனிலோ மங்கோலியத் தாக்குதலைத் தாக்குப்பிடித்த போதும் அவரது இரண்டு முதன்மை நகரங்களான ஹலிச் மற்றும் விளாடிமிர்-வோலின்ஸ்கியை படு கான் வென்றார். பிறகு மங்கோலியர்கள் "இறுதிக் கடலை அடைவது" என தீர்மானித்தனர். அதைத் தாண்டி அவர்களால் செல்ல முடியாது. மேலும் படு கான் தலைமையில் அங்கேரி மீது படையெடுத்தனர். பைதர் மற்றும் கய்டு தலைமையில் போலந்து மீது படையெடுத்தனர்.[5] படு கான் அங்கேரியின் பெஸ்ட் நகரத்தைக் கைப்பற்றினார். பிறகு 1241 ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் நாளன்று எஸ்டெர்கோம் நகரத்தைக் கைப்பற்றினார்.[5] தாதர் ஆட்சிக்காலம்![]() இந்த முறை படையெடுப்பாளர்கள் அங்கேயே தங்குவதற்காக வந்திருந்தனர். வோல்கா ஆற்றின் கீழ்பகுதியில் சராய் என்று அழைக்கப்பட்ட ஒரு தலைநகரத்தைத் தங்களுக்காக நிறுவினர். இங்கு தங்க நாடோடிக் கூட்டத்தின் (மங்கோலியப் பேரரசின் மேற்குப் பகுதி இவ்வாறுதான் அழைக்கப்பட்டது) தலைவர் தனது தங்க தலைமையகத்தை அமைத்துக்கொண்டார். ஓர்கோன் பள்ளத்தாக்கில் இருந்த பெரிய நாடோடிக் கூட்டத்துடன் வாழ்ந்த தனது அரசர் பெரிய கானைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இங்கு அவர்கள் தங்களது தலைமையகத்தை கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்கு உரூசின் பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். நோவ்கோரோட், ஸ்மோலென்ஸ்க், கலிச் மற்றும் பிஸ்கோ உள்ளிட்ட அனைத்து உருசிய மாநிலங்களும் தாதர்-மங்கோலிய ஆட்சிக்கு அடிபணிந்தன.[10] இந்தக் காலமானது பொதுவாக மங்கோலிய அல்லது தாதர் "நுகத்தடி" என்ற சொற்களால் வழங்கப்படுகிறது. இச்சொற்கள் பயங்கரமான அடக்குமுறை ஏற்பட்டதாக வெளிக்காட்டுகின்றன. ஆனால் உண்மையில் மங்கோலியாவில் இருந்துவந்த இந்த நாடோடிப் படையெடுப்பாளர்கள் கொடூரமான அடக்குமுறைப் பணி ஆசிரியர்கள் கிடையாது.[11] முதலில் அவர்கள் உண்மையிலேயே அந்த நாட்டில் நிரந்தரமாக குடியேறவில்லை. அங்கு வாழ்ந்த மக்களுடன் சிறிதளவே நேரடித் தொடர்புடன் இருந்தனர். செங்கிஸ் கான் தனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு வழங்கிய அறிவுரைகளின் படி, அவர்கள் ஆயர் வாழ்க்கை முறையைத் தொடர்ந்தனர். எனவே ஆளப்படும் மக்கள், விவசாயிகள் மற்றும் பட்டணங்களில் வாழும் மக்கள் தங்களது சாதாரண தொழில்களைத் தொடர எந்தச் சிரமமும் அவர்களுக்கு ஏற்படவில்லை. தங்க நாடோடிக் கூட்டம் தாங்கள் வென்ற நிலங்களில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, வரிகள் மற்றும் காணிக்கை செலுத்தும் முறை ஆகியவற்றைத் தொடங்கி வைத்தது. இவை பெரும்பாலும் உள்ளூர் இளவரசர்களால் சேகரிக்கப்பட்டுச் சராய்க்குக் கொண்டுவரப்பட்டன. தாதர் கானரசுகளின் வளர்ச்சிக்குப் பிறகு 14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளில் தான் இசுலாவிய மக்கள் மீதான அடிமை முறைச் சோதனை ஓட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு நடத்தப்பட்டன. அதற்குக் காரணம் அவர்கள் உதுமானியப் பேரரசுடன் அடிமைகளை வைத்து வணிகம் செய்தனர். மாஸ்கோவி மற்றும் லித்துவேனியாவின் கிராண்ட் டச்சி ஆகிய இரண்டிலும் இந்தச் சோதனை ஓட்டங்கள் மனித மற்றும் பொருளாதார ஆதாரக் குறைவிற்கு முக்கியக் காரணமாயின. மேற்குறிப்பிட்ட இரண்டு அரசுகளும் "வன நிலங்கள்" என்று அழைக்கப்பட்ட பகுதியில் மக்கள் குடியேறுவதைத் தடுத்தன. மாஸ்கோவின் தெற்குப் பகுதியில் 160 கிலோமீட்டர் தொலைவிலிருந்து கருங்கடல் வரையுள்ள புல்வெளி மற்றும் காடு-புல்வெளி நிலம் இவ்வாறாக அழைக்கப்பட்டது. இறுதியாக இந்த நிகழ்வுகள் கொசக்குகளின் வளர்ச்சிக்கு இட்டுச் சென்றது. மத விஷயங்களில் மங்கோலியர்கள் மிகவும் சகிப்புத்தன்மையுடன் விளங்கினர். அவர்கள் முதன் முதலில் ஐரோப்பாவில் தோன்றிய போது ஷாமன் மதத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்தனர். இவ்வாறாக அவர்களுக்கு மதவெறி இல்லாமலிருந்தது. இசுலாம் மதத்தை ஏற்றுக் கொண்ட பிறகும் அவர்கள் முன்னரைப் போலவே சமய சகிப்புத் தன்மையுடன் விளங்கினார்.[12] தங்க நாடோடிக் கூட்டத்தின் கான் முதன்முதலில் முஸ்லிம் ஆனார். அவர் தனது தலைநகரத்தில் உரூசு மக்களை ஒரு கிறித்தவ திருச்சபைச் சொத்துக்களை வைத்துக்கொள்ள அனுமதித்தார். அரை நூற்றாண்டுக்குப் பிறகு பைசாந்தியப் பேரரசரின் மகளை நோகை கான் திருமணம் செய்து கொண்டார். கருப்பு தியோடர் என்று அழைக்கப்பட்ட ஒரு உரூசு இளவரசருக்கு தனது சொந்த மகளை நோகை கான் திருமணம் செய்து வைத்தார். சில நவீன திருத்தல்வாத உருசிய வரலாற்றாளர்கள் (குறிப்பாக சோவியத் கால வரலாற்றாளர் மற்றும் ஐரோவாசியச் சித்தாந்தவாதியான லெவ் குமிலேவ்) படையெடுப்பு என்று ஒன்று நடைபெறவே இல்லை என ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களது கூற்றுப்படி, உரூசு மதம் மற்றும் கலாச்சாரத்திற்குப் பெரும் ஆபத்தாக விளங்கிய வெறிபிடித்த டியுடோனிக் நைட் வீரர்களின் தாக்குதல்களைச் சமாளிக்க உரூசு இளவரசர்கள் நாடோடிக் கூட்டத்துடன் ஒரு தற்காப்புக் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டனர். இந்தக் குறிப்புகள் தாதர் ஆட்சியின் ஒளிமயமான பக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. ஆனால் இவற்றிற்கு ஒரு கருப்பான பக்கமும் இருந்தது. நாடோடிகளின் பெரிய நாடோடிக் கூட்டமானது எல்லைப்பகுதியில் முகாம் அமைத்து இருந்தது வரை நாடானது எப்போது வேண்டுமானாலும் பெரும் படையால் தாக்கப்படலாம் என்ற நிலை இருந்தது. இந்தத் தாக்குதல்கள் அடிக்கடி நடைபெறவில்லை. ஆனால் அவை எப்போது நடைபெற்றாலும் எண்ணிலடங்காத அழிவு மற்றும் துன்பங்களை விளைவித்தன. இந்தத் தாக்குதல்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மக்கள் ஒரு வரையறுக்கப்பட்ட காணிக்கையைச் செலுத்த வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் இந்த காணிக்கைகள் தாதர் வரி வாங்குபவர்களால் சேகரிக்கப்பட்டது. 1259 ஆம் ஆண்டு வாக்கில் இந்த சேகரிப்பானது மக்கள் தொகைக் கணக்கெடுப்பால் ஒழுங்குபடுத்தப்பட்டது. இறுதியாகச் சேகரிப்பது உள்ளூர் இளவரசர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே மக்கள் தாதர் அதிகாரிகளுடன் நேரடித் தொடர்பில் இருக்க வேண்டியதில்லை என்ற நிலை உருவானது. வளர்ச்சி மீதான தாக்கம்திருத்தந்தையின் மங்கோலிய பெரிய கானுக்கான தூதரான சியோவனி டி பிலானோ கர்பினி கீவ் வழியாக பெப்ரவரி 1246ல் பயணித்தார். அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்:
கீவ உரூசின் பகுதிகள் மீதான மங்கோலியப் படையெடுப்பின் தாக்கமானது அனைத்துப் பகுதிகளுக்கும் ஒரே மாதிரியாக இல்லை. காலின் மெக்கெவேடியின் மதிப்பீட்டின்படி கீவ உரூசின் மக்கள் தொகையானது 75 இலட்சத்தில் இருந்து 70 இலட்சமாகப் படையெடுப்பிற்குப் பிறகு குறைந்தது.[3] கீவ் போன்ற மையங்கள் ஆரம்பத் தாக்குதலில் அழிவிலிருந்து மீண்டுருவாக பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டது. நோவ்கோரோட் குடியரசு போன்ற அரசுகள் தொடர்ந்து செழித்து வளர்ந்தன. புதிய அரசுகள், மாஸ்கோ மற்றும் திவேர் ஆகியவற்றின் எதிரி நகரங்கள் ஆகியவை மங்கோலியர்களின் கீழ் வளர்ச்சி அடைந்தன. வடக்கு மற்றும் கிழக்கு உரூசில் மாஸ்கோ ஆதிக்கம் செலுத்த பெரும் காரணம் மங்கோலியர்கள் தான். 1327 ஆம் ஆண்டு திவேர் இளவரசர் மங்கோலியர்களுக்கு எதிரான கிளர்ச்சியில் இணைந்த பொழுது, அவர்களது எதிரி இளவரசரான மாஸ்கோவின் முதலாம் இவான் மங்கோலியர்களுடன் இணைந்தார். திவேர் தோற்கடிக்கப்பட்டது. அதன் நிலங்கள் அழிவுக்குட்படுத்தப்பட்டன. இவ்வாறு செய்வதன் மூலம் மாஸ்கோ அதன் எதிரியை ஒழித்துக் கட்டியது. உருசிய மரபுவழித் திருச்சபையின் மையமானது மாஸ்கோவிற்கு இடம்பெயர்ந்தது. மங்கோலியர்கள் மாஸ்கோவிற்கு பெரிய இளவரசர் என்ற பட்டத்தை அளித்தனர். இவ்வாறாக தனது மங்கோலிய மேலதிகாரிகள் மற்றும் உரூசு நிலங்களுக்கு இடைப்பட்ட முதன்மை பொது நபராக மாஸ்கோ இளவரசர் உருவானார். இதன்மூலம் மாஸ்கோவின் ஆட்சியாளர்களுக்கு மேலும் செல்வம் சேர்ந்தது. மங்கோலியர்கள் உரூசு அரசின் பிற பகுதிகள் மீது சோதனை ஓட்டங்களை நடத்தியபோதும் தங்களது முதன்மை பொது நபரின் கட்டுப்பாட்டிலிருந்த நிலங்களுக்கு மதிப்பு அளித்தனர். இதனால் ஒப்பீட்டளவில் பாதுகாப்பு மற்றும் அமைதியைக் கொண்டிருந்த மாஸ்கோ நிலங்கள், மாஸ்கோ அரசில் குடியேற விரும்பிய உயர்குடியினர் மற்றும் அவர்களது வேலையாட்களை ஈர்த்தன.[14] உரூசு படைகள் தங்க நாடோடிக் கூட்டத்தை குலிகோவா யுத்தத்தில் 1380 ஆம் ஆண்டு தோற்கடித்த போதிலும், உரூசு நிலப்பகுதிகளில் மங்கோலிய மங்கோலியா ஆதிக்கமானது கப்பம் கேட்கும் முறையில், 1480 ஆம் ஆண்டு நடைபெற்ற உக்ரா ஆற்று யுத்தம் வரை தொடர்ந்தது. கீவ உரூசை மங்கோலியர்கள் அழித்து இருக்காவிட்டால் உரூசானது ஒன்றுபட்டு உருசியாவின் சாராட்சி உருவாகியிருக்க முடியாது மற்றும் இறுதியில் உருசியப் பேரரசு உருவாகி இருக்காது என்று வரலாற்றாளர்கள்[யாரால்?] வாதிடுகின்றனர். கீழை நாடுகளுக்கான வழித்தடங்கள் உரூசு நிலங்களின் வழியே சென்றன. இவ்வாறாக மேலை நாடுகள் மற்றும் கீழை நாடுகளுக்கு இடைப்பட்ட வணிக மையமாக உரூசு உருவாகியது. மங்கோலியத் தாக்கமானது, நவீன உருசியா, உக்ரைன் மற்றும் பெலாருஸ் ஆகிய நாடுகளின் எதிரிகளுக்கு அழிவை ஏற்படுத்திய போதும், அந்நாடுகள் உருவானதில் முக்கியத்துவம் வாய்ந்த நெடுங்கால தாக்கத்தை ஏற்படுத்தின.[15] வரலாற்று எழுத்தாண்மைஉரூசு அரசை மங்கோலியர்கள் வென்றது உருசியா வரலாற்றில் ஒரு ஆழமான தாக்கத்தை விட்டுச் சென்றுள்ளது. சார்லஸ் ஜே. ஹால்பெரின் கூற்றுப்படி, உள் ஆசியாவிலிருந்து வந்த சிறு மத நாடோடிகளின் உருசியாவை அடிபணிய வைத்த திறமையானது "படித்த உருசிய சமூகத்தின்" மத்தியில் ஒரு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாகும்.[16] மங்கோலியர்களின் வெற்றி போலியானது எனக் கோரும் புதிய காலவரிசை போன்ற போலி வரலாற்று நூலகளின் உருவாக்கத்தின் முக்கியக் காரணமாகக் கருதப்படுவது இந்தச் சங்கடமே ஆகும்.[16] உரூசு சமூகத்தின் மீதான தாக்கம்![]() உரூசு சமூகத்தின் மீதான மங்கோலிய ஆட்சியின் நீண்டகாலத் தாக்கத்தைப் பற்றி வரலாற்றாளர்கள் விவாதித்துள்ளனர். கீவ உரூசின் அழிவுக்கு மங்கோலியர்கள் காரணமாகக் கூறப்படுகின்றனர். பண்டைய உரூசு தேசமானது மூன்று பகுதிகளாகப் பிரிந்ததற்கு அவர்கள் காரணமாகக் கூறப்படுகின்றனர். உருசியாவில் "கீழைச் சர்வாதிகாரம்" என்ற கருத்தின் அறிமுகத்திற்கும் அவர்களே காரணமாகக் கூறப்படுகின்றனர்.[சான்று தேவை] வரலாற்றாளர்கள் மஸ்கோவி ஒரு மாநிலமாக வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய பங்காற்றியது மங்கோலிய ஆட்சிதான் என்றும் குறிப்பிடுகின்றனர். உதாரணமாக மங்கோலிய ஆக்கிரமிப்பின் கீழ், மஸ்கோவி அதன் நிலமானிய முறை, அஞ்சல் சாலை இணையம் (மங்கோலிய ஒர்டூவை அடிப்படையாகக்கொண்ட இந்த அமைப்பு உருசிய மொழியில் யாம் என்று அழைக்கப்படுகிறது), மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, நிதி அமைப்பு மற்றும் ராணுவ அமைப்பு ஆகியவற்றை வளர்த்துக் கொண்டது.[17] உருசியா மீதான மங்கோலிய ஆட்சிக் காலமானது உருசிய மற்றும் மங்கோலிய ஆளும் வர்க்கத்தினரிடையே குறிப்பிடத்தக்க அளவுக்குக் கலாச்சாரம் மற்றும் தனிநபர் தொடர்புகளை உள்ளடக்கியதாக இருந்தது. 1450 ஆம் ஆண்டுவாக்கில் தாதர் மொழியானது மாஸ்கோவின் பெரிய இளவரசர் இரண்டாம் வாசிலியின் அவையில் நாகரீகத்தின் அடையாளமாக கருதப்பட்டது. தாதர்கள் மற்றும் தாதர்களின் பேச்சு மீது எல்லையற்ற காதல் கொண்டிருப்பதாக இரண்டாம் வாசிலி மீது குற்றம் சுமத்தப்பட்டது. பல உருசிய உயர்குடியினர் தாதர் துணைப் பெயர்களைப் (உதாரணமாக, வெலியமனோவ் குடும்ப உறுப்பினர் ஒருவர் துருக்கியப் பெயரான அக்சக்கைப் பயன்படுத்தினார். அவரது வழித்தோன்றல்கள் அக்சக்குகள்[18] என்று அழைக்கப்பட்டனர்) பயன்படுத்த ஆரம்பித்தனர். பல உருசிய போயர் (உயர்குடி) குடும்பங்களின் முன்னோர்கள் மங்கோலியர்கள் அல்லது தாதர்களாக உள்ளனர். அக்குடும்பங்களில் சில வெலியமினோவ்-செர்னோவ், கோடுனோவ், அர்செனியேவ், பக்மேடேவ், புல்ககோவ் (புல்கக்கின் வழித்தோன்றல்கள்) மற்றும் சாதயேவ் (செங்கிஸ் கானின் மகன் சகதை கானின் வழித்தோன்றல்கள்). 17 ஆம் நூற்றாண்டு உருசிய உயர்குடி குடும்பங்களில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் 15%க்கும் மேற்பட்ட உருசிய உயர்குடிக் குடும்பங்கள் தாதர் அல்லது கிழக்கத்திய பூர்வீகங்களைக் கொண்டவையாக உள்ளன என்பது கண்டுபிடிக்கப்பட்டது.[19] மாநிலங்களின் பொருளாதார சக்தி மற்றும் மொத்த வணிகம் ஆகியவற்றில் மங்கோலியர்கள் மாற்றங்களைக் கொண்டு வந்தனர். மதரீதியான அமைப்பில், போரோவ்ஸ்கின் புனிதர் பாப்னுடியஸ், ஒரு மங்கோலிய தருகச்சியின் அல்லது வரிவசூலிப்பாளரின் பேரன் ஆவார். அதே நேரத்தில் தங்க நாடோடிக் கூட்டத்தின் கான் பெர்கையின் உறவினர் கிறித்தவ மதத்திற்கு மாறி நாடோடி கூட்டத்தின் துறவி புனிதர் பீட்டர் சாரேவிச் என்று அழைக்கப்பட்டார்.[20] நீதித்துறையில், மங்கோலிய தாக்கத்தின் கீழ், உரூசு காலங்களில் அடிமைகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட மரண தண்டனையானது பரவலாக பலருக்கும் கொடுக்கப்பட்டது. குற்றவாளிகளை விசாரிக்கும் முறையில் துன்புறுத்துவது ஒரு வாடிக்கையான பகுதியானது. துரோகிகள் என்று கூறப்பட்டவர்களுக்கு சிரச்சேதம் மற்றும் திருடர்களுக்கு அடையாளச் சூடு (மூன்றாவது முறை பிடிக்கப்பட்டால் சிரச்சேதம்) உள்ளிட்ட குறிப்பிட்ட தண்டனைகள் மாஸ்கோவில் அறிமுகப்படுத்தப்பட்டன.[21] உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia