மடகாஸ்கர் சண்டை
மடகாஸ்கர் சண்டை (Battle of Madagascar) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நேச நாட்டுப் படைகள் விஷி பிரான்சின் கட்டுப்பாட்டில் இருந்த மடகாஸ்கர் தீவைக் கைப்பற்ற மேற்கொண்ட போர் நிகழ்வுகளைக் குறிக்கிறது. ஐயர்ன்கிளாட் நடவடிக்கை (Operation Ironclad) எனக் குறிப்பெயரிடப்பட்டிருந்த இது மே 5 – நவம்பர் 6, 1942 காலகட்டத்தில் நடைபெற்றது. ஜூன் 1940 இல் பிரான்சு சண்டையில் தோல்வியடைந்த பிரான்சு நாசி ஜெர்மனியிடம் சரணடைந்தது. பிரெஞ்சு அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் நாசி ஜெர்மனியுடன் ஒத்துழைத்து அதன் ஆதரவுடன் விஷி அரசை உருவாக்கினர். இதனை ஏற்றுக் கொள்ளாத மற்றொரு பிரிவினர் சார்லஸ் டி கோல் தலைமையில் நாடுகடந்த விடுதலை பிரான்சு அரசை உருவாக்கினர். ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்த பிரெஞ்சு காலனிகள் அனைத்தும் இவ்விரு தரப்புகளுள் ஏதேனும் ஒன்றுக்கு ஆதரவு தெரிவித்தன. மடகாஸ்கர் தீவு விஷி அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1942 இல் தென் கிழக்காசியாவைக் கைப்பற்றி முன்னேறி வந்த ஜப்பானியப் படைகள் மடகாஸ்கரை கடற்படைத் தளமாக பயன்படுத்தக் கூடும் என நேச நாட்டு உத்தியாளர்கள் பயந்தனர். விஷி அரசு மடகாஸ்கர் தீவை ஜப்பானியர் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கும் சாத்தியக்கூறு பலமாக இருந்தது. அப்படி நிகழ்ந்து விட்டால். இந்தியப் பெருங்கடலில் ஜப்பானிய கடற்படையின் பலம் பெருகிவிடுமென்பதால், அதைத் தடுக்க நேச நாடுகள் முயன்றன. மடகாஸ்கர் ஜப்பானியர் வசமாவதற்கு முன்னால் ஒரு நீர்நிலத் தாக்குதல் நடத்தி விஷி படைகளிடமிருந்து அதனைக் கைப்பற்ற முடிவு செய்தனர். ஐயர்ன்கிளாட் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்த இத்தாக்குதல் மே 5, 1942 அன்று ஆரம்பமானது. பிரித்தானியத் தரைப்படைப் பிரிவுகள் மற்றும் மரைன் படைப்பிரிவுகள் பிரித்தானிய வான்படை மற்றும் கடற்படைத் துணையுடன் மடகாஸ்கரில் கடல்வழியாகத் தரையிறங்கின. மே 7ம் தேதி அத்தீவின் முக்கியத் துறைமுகமான டியேகோ சுவாரேசை விஷி படைகளிடமிருந்து கைப்பற்றின. அடுத்த சில மாதங்களுக்கு இரு தரப்புக்குமிடையே லேசான மோதல்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. மடகாஸ்கரை நோட்டமிட வந்த வேந்திய ஜப்பானியக் கடற்படையின் நீர்மூழ்கிக்கப்பல்களும் பிரித்தானியக் கடற்படையும் மோதிக் கொண்டதில், இரு பிரித்தானியக் கப்பல்களும் இரு ஜப்பானிய நீர்மூழ்கிகளும் நாசமாகின. மடகாஸ்கர் பிரித்தானியக் கட்டுப்பாட்டில் இருப்பதை உணர்ந்த ஜப்பானியப் போர்த் தலைமையகம், மடகாஸ்கரை ஆக்கிரமிக்கும் திட்டத்தைக் கைவிட்டது. விரைவாக மடகாஸ்கரின் பிற நகரங்கள் நேச நாட்டுப் படைகளால் கைப்பற்றப்பட்டன. நவம்பர் 8, 1942 இல் விஷிப் படைகளின் தளபதி ஆர்னெட் நேச நாட்டுப் படைகளிடம் சரணடைந்தார்; மடகாஸ்கர் சண்டை முடிவுக்கு வந்தது. போர் முடியும் வரை மடகாஸ்கர் தீவு விடுதலை பிரான்சுப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. குறிப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia