மதியிறுக்கம்
![]() மதியிறுக்கம் (Autism) அல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடு அல்லது தன்னுழப்பல் என்பது ஒருவருடைய மக்கள் தொடர்பு திறன், சமுதாய அரங்கில் செயல்பாடுகள், ஆர்வம் கொள்ளும் துறைகள், நடத்தைப் பாங்கு போன்றவை இயல்பிற்கு மாறாக அமைவதற்குக் காரணமான மூளை வளர்ச்சி வேறுபாட்டைக் குறிக்கும்.[1]. மதியிறுக்கத்தின் குறிப்பிட்ட மருத்துவக் காரணங்கள் முழுமையாக அறியப்படாவிட்டாலும், ஆய்வாளர்கள் சுற்றுச்சூழல் காரணிகளின் பாதிப்புக்கு ஒருவர் உள்ளாகும் வண்ணம் அமையும் மரபுக் கூறுகளினாலேயே இவ்வேறுபாடு ஏற்படுகிறது எனக் கருதுகின்றனர். சுற்றுச்சூழல் காரணிகளின் தன்மை, பருமை (magnitude), இயக்கமுறை ஆகியவற்றைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள் நிலவி வந்தாலும் ஏழு முதன்மையான மரபணுக்கள் காரணிகளாக அறியப்பட்டுள்ளன.[2][3] இவ்வேறுபாட்டின் பரம்பல் அமெரிக்காவில் 166 பேரில் ஒருவர் என்றும் ஆயிரத்தில் ஒருவர் என்றும் வெவ்வேறு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.[2][4][5] இதன் அறுதியிடல் (diagnosis) பொதுவாக உளவியல் அடிப்படையில் செய்யப்படுகிறது. இதற்கென மருத்துவப் பரிசோதனைகளும் உள்ளன. உடல்நிலைப் பரிசோதனையில் இது பொதுவாகத் தெரிய வருவதில்லை. இது ஒரு நோயல்ல மாறாக ஒரே அறிகுறிகளைக் கொண்ட பல நோய்களால் ஏற்படக்கூடியது என்றும் சிலர் கருதுகின்றனர். இக்குறைபாடு பொதுவாகக் குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன் ஏற்படும்.[6][7] வரலாறு1943 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர். லியோ கேனர் என்பவர் குழந்தைப் பருவ மதியிறுக்கக் குறைபாடுடைய 11 குழந்தைகளை ஆய்வுசெய்து இவர்களிடம் சில வழமையில்லா நடத்தைகள் இருப்பதைக் கண்டார். இவரே இதனை துவக்ககால மழலையர் ஆட்டிசம் என அழைத்தார்.[8] இதே காலகட்டத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த மற்றொரு மருத்துவரான ஹான்ஸ் அசுபெர்ஜர், இதேபோன்ற மற்றொரு ஆய்வை மேற்கொண்டிருந்தார். இவரது கண்டுபிடிப்பு இன்று அசுபெர்கர் கூட்டறிகுறி எனவும் லியோ கேன்னரின் கண்டுபிடிப்பு மதியிறுக்க குறைபாடு, மழலைக்கால மதியிறுக்கம், அல்லது எளிமையாக மதியிறுக்கம் எனப்படுகிறது. ஹான்ஸ் அஸ்பர்ஜர் என்பவர் இக்குறைபாட்டின் கடுமை குறைந்த நிலையைக் கண்டறிந்தார்.[9] இந்த இருவகைகளோடு தற்போது 5 வகையான வளர்ச்சிக் குறைபாடுகளை வகைப்படுத்தி உள்ளார்கள். இந்த வகைப்பாடு பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறருடனும் சமுதாயத்துடனும் தொடர்பு கொள்ளும் தன்மையின் நிலைகளையும் பண்புகளையும் வைத்து ஏற்படுத்தப்பட்டது. இந்தக் குறைபாட்டை முதன்முதலாகப் பெயரிட்டது 1943இல் ஆகும். விலங்கின நடத்தையியலில் நோபல் பரிசு பெற்ற நிக்கோ டின்பெர்ஜென் தமது நோபல் பரிசேற்பு உரையில் மதியிறுக்கம் குறித்து பேசியுள்ளார்.[10] மதியிறுக்கமுள்ள குழந்தைகளை அடையாளம் காணுதல்மதியிறுக்கமுள்ள குழந்தைகளுக்கு உடலில் வெளிப்படையாக எந்தப் பாதிப்பும் இருக்காது. இவர்களின் நடத்தையை உற்று நோக்குதலின் மூலம் குறைபாடுகளைப் புரிந்து கொள்ள முடியும். எடுத்துக்காட்டாகப் பிறரோடு கண்ணோக்கிப் பேசுவதில் சிக்கல் இருக்கும். கால் கட்டை விரல் நுனியில் நடப்பவர்களாக இக்குழந்தைகளில் சிலர் இருப்பர். இவர்களது நடத்தைகளில் அதிகமான வேறுபாடு இருப்பினும் ஒரு சில நடத்தைகள் மூலம் மட்டுமே குறைபாடுடைய குழந்தை என வகைப்படுத்த இயலாது. எனினும் சில குறிப்பிட்ட நடத்தைகள் மதியிறுக்கமுடைய குழந்தைகளைக் குறித்துக் காட்டும்.
வரையறைபல்வேறு வகைப்பட்ட நரம்பியல் சார்ந்த நடத்தை இயல்புகள், சமூக நல்லுறவு மற்றும் பிறருடன் தொடர்பு கொள்ளும் திறனில் சிக்கல்கள், வரையறுக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட கற்பனைத் திறனுடையவர்களாகவும், ஒரே மாதிரியான செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்பவர்களாகவும் (எ.கா. விரல்களை இடம், வலமாக ஆட்டுதல், விரல்களை ஆட்டிக்கொண்டே இருத்தல்), சில குறிப்பிட்ட நடத்தைகளை உடையவர்களாகவும், மிகச் சில விடயங்களில் ஆர்வம் உடையவர்களாகவும் இருப்பவர்களை மதியிறுக்கம் உடையவர்கள் அல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடுடையவர்கள் எனலாம். நிலைகள்இக்குறைபாட்டின் நிலையைக் கண்டறிய ஸ்பெக்ட்ரம் (spectrum)என்ற சொல் பயன்படுகிறது. எடுத்துக் காட்டாகக் கடுமை குறைந்த நிலைமுதல் தீவிரமான நிலை வரை.
இக்குறைபாடு எந்த நிலையில் இருப்பினும் அடிப்படையாக மூன்று துறைகளில் பாதிப்பு காணப்படும். இவையன்றி ஐம்புலன்களின் ஒருங்கிணைப்பில் பிரச்சினைகளும் காணப்படுகின்றன. சமுதாயத்துடன் தொடர்புமற்ற வளர்ச்சிக் குறைபாட்டு அறிகுறிகளுக்கும் மதியிறுக்க குறைபாட்டுத் தொகுதி அறிகுறிகளுக்கும் உள்ள முதன்மையான வேறுபாடு சமூகத்துடன் தொடர்பற்று இருப்பது ஆகும்.[13] இந்தச் சமூகத்துடனான வளர்ச்சிக் குறைபாட்டைச் சிறு வயதிலிருந்தே கவனிக்கலாம். இந்தக் குறைபாடில்லாத ஓர் வழமையான குழந்தை, தன்னுடன் பேசுகின்றவர்களைப் பார்த்தும், அவர்களது முகத்தைக் கவனித்தும், திரும்ப அவர்களை நோக்கிச் சிரித்தும் சமூகத்துடன் தொடர்பு கொள்ளும். ஆனால் மதியிறுக்கம் உள்ள குழந்தைகள் முகங்களையும்,ப் மனிதர்களையும் விடப் பொருட்களாலேயே ஈர்க்கப்படுவர்.[14] ஒரு வினாடிக்கு மனிதர் முகத்தைப் பார்த்தாலும் உடனேயே வேறுபக்கம் தன் முகத்தைத் திருப்பிக் கொள்வர். புன்னகை புரியாமலோ அல்லது தாம் விரும்பும் பொருட்களைக் கண்டு புன்னகைக்கவோ செய்யலாம். மூன்றிலிருந்து ஐந்து வரையிலான சிறுவர்கள் மற்றவர்களைத் தன்னிச்சையாக அணுகவோ அவர்கள் செய்வதைத் திரும்பச் செய்யவோ செய்கைகள் மூலம் தொடர்பாடவோ இயலாமல் இருப்பார்கள்; ஆனால் தங்களைக் கவனிக்கும் நபர்களிடம் (பெற்றோர்கள்) மிகுந்த பாசத்துடன் இருப்பார்கள்.[15] நண்பர்களை உருவாக்கிக் கொள்வதில் ஆர்வமிருக்காது. வளர்ந்த சிறுவர்கள் முகம் மற்றும் உணர்ச்சிகளை அடையாளம் காண முடியாதவர்களாக உள்ளனர்; எடுத்துக்காட்டாகத் தங்கள் பெற்றோர்கள் மகிழ்ச்சியாகவோ சோகமாகவோ இருப்பதை அவர்களால் அறிந்து கொள்ள இயலாது.[16] தவறான நேரங்களில் சிரிக்கவோ, அழவோ செய்வர். இவர்களின் அறிவு வளர்ச்சியில் முடிவு எடுத்தல், நம்பிக்கை, உணர்ந்துகொள்ளுதல், புலன் ஒருங்கிணைப்பு, மற்றவர்களின் ஆசைகள், தேவைகளைப்புரிந்து கொள்ளுதல் ஆகியன விடுபட்டுப் போகின்றன. இவர்களுக்குப் பிறரின் மனநிலை மற்றும் செயல்பாடுகளுக்கிடையேயான தொடர்பைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்கும். இக்குறைபாடுள்ளவர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் வன்முறை குறித்து சில நிகழ்வுகள் பதியப்பட்டிருந்தாலும் இவற்றைக் குறித்த ஆய்வுகள் எதுவுமில்லை. கிடைத்துள்ள குறைந்த தகவல்களின்படி மனவளர்ச்சிக் குன்றிய மதியிறுக்கக் குறைபாடுள்ள சிறுவர்களிடையே ஆக்கிரமிப்பு, பொருட்களைச் சிதைத்தல், கோப வெளியீடு ஆகியவை காணப்படுவதாகத் தெரிகிறது. 2007இல் 67 சிறுவர்களின் பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட நேர்முகங்களின் அடிப்படையில் அமைந்த ஓர் ஆய்வு, மற்றச் சிறுவர்களை விட மதியிறுக்கம் உள்ளவர்களில் மூன்றில் இருபங்கினர் தீவிரமான கோப வெளியீடுகளைக் கொண்டவர்களாகவும் மூன்றில் ஒருபங்கினர் ஆக்கிரமிப்பு வரலாறு உடையவர்களாகவும் இருந்தனர் என கண்டறிந்துள்ளது.[17] 2008இல் நடத்தப்பட்ட ஓர் சுவீடிய ஆய்வு மருத்துவமனைகளிலிருந்து சிகிச்சைக்குப் பின்னர் திரும்பிய மதியிறுக்கச் சிறுவர்களில், வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு மற்ற உளவியல் குறைபாடுகள்/நோய்கள் இருக்கக்கூடிய வாய்ப்பிருந்ததாகக் கூறுகிறது.[18] சமூகத் தொடர்பு கொள்ளுதலின் தரம் மற்றும் அளவுமதியிறுக்கக் குறைபாடுடைய குழந்தைகள் சமூகத் தொடர்பு கொள்ளுதலின் தரம் மற்றும் அளவை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளனர். தனிமையாய் இருத்தல்மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் எவ்வித ஆர்வமோ அக்கறையோ காட்டாமல் தனிப்பட்டு இருப்பார்கள். ஒரு சில அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே தொடர்பு கொள்வார்கள். புதியவர்கள் யாரேனும் அருகில் வந்தாலோ, திடீரென்று பேச முற்பட்டாலோ ஆர்ப்பாட்டம் செய்து உடல் ரீதியான அணுகுமுறை மற்றும் சமூகத் தொடர்பைப் புறக்கணிப்பார்கள். எதிர்க்காத தன்மையாரேனும் சமூக உறவுகள் மூலம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வந்தால், எதிர்ப்பு கூறாமல் ஏற்றுக்கொள்வார்கள். தாங்களாகவே முன்வந்து தொடர்பு கொள்ள மாட்டார்கள் சுறுசுறுப்பான ஆனால் வழக்கமில்லாத சமூகத் திறன்கள்இவ்வகையினர் சுறுசுறுப்பாகவும், சமூகத் தொடர்பு கொள்பவர்களாகவும் காணப்படுவார்கள். ஆனால் அசாதாரண மற்றும் பொருத்தமற்ற வழிகளில் தொடர்பு கொள்வர். இவற்றில் அனைவரும் ஒரே மாதிரி இருப்பர் எனக் கூற முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியில் மிதமாகவோ, தீவிரமாகவோ பாதிக்கப்பட்டிருக்கலாம். உரையாடல் திறன்மதியிறுக்கம் உள்ளவர்களுக்கு மொழிப்பயிற்சி மற்றும் தொடர்பு கொள்வதில் சிரமங்கள் இருக்கும். சிலர் பேசாமலேயே இருப்பர். சிலர் நன்றாகப் பேசும் திறன் பெற்றிருந்தாலும் சமூகச் சூழலில் பேசும் திறன் தெரியாமல் தேவையில்லாமலோ சம்பந்தமில்லாமலோ பேசுவார்கள். அவர்களால் மற்றவர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்யமுடியாத நிலை அவர்களின் குறைபாட்டால் ஏற்பட்டதே தவிர வேண்டுமென்றே செய்யப்படும் செயல் அல்ல. மதியிறுக்கம் உள்ளோரில் மூன்றில் ஒரு பகுதியினரிலிருந்து பாதிப்பேருக்கு இயற்கையாகப் பேசுவதில் குறைபாடு காணப்படுகிறது. சிலருக்கு மொழி கற்பதில் சிரமம் இருக்கலாம்.[19] குழந்தையின் முதலாண்டிலிருந்தே பேச்சுத் திறனில் குறையிருக்கலாம். இரண்டாம் மூன்றாம் ஆண்டுகளில் சொற்களுடன் செய்கைகளைத் தொடர்புபடுத்துவதில் சிரமப்படலாம். மதியிறுக்கக் குழந்தைகள் தேவைகளைத் தெரிவிக்கவோ, பட்டறிவைப் பகிரவோ இயலாதவர்களாக இருப்பர். மற்றவர்கள் கூறியதையே எதிரொலியாகத் திரும்பக் கூறக் கூடிய வாய்ப்பு கூடுதலாகும்.[20][21] அல்லது இட மயக்கம் ஏற்படலாம் (காட்டாக, கே:"நீ என்ன செய்கிறாய்? ப: நீ விளையாடுகிறாய்")[8] கூட்டுப் பயிற்சியினால் தேவையான அளவில் உரையாடப் பழக்கலாம்.[14][21][22][22] மதியிறுக்கக் குழந்தைகளுக்குக் கற்பனையுடன் விளையாடுவதும், செய்கைகளை மொழியாக மாற்றுவதும் கடினமாக இருக்கலாம்.[20][21] புலனுணர்வு வெளிப்பாடுகள் மற்றும் நடைமுறைகள்![]() ![]() புலன் சார்ந்த உணர்வுகளை அனுபவிப்பதில் மற்றவர்களிடமிருந்து இக்குழந்தைகள் வேறுபட்டு இருப்பர். புலன் சார்ந்த தூண்டல்களுக்கு இவர்கள் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உணர்ச்சிகளை வெளிக்காட்டுவார்கள். ஒரு சிலருக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட புலன்கள் குறைவாகவோ (ஹைபோ) அதிகமாகவோ(ஹைபர்) தூண்டப்படும். சுற்றுப்புறச் சூழலில் உள்ள புலன் சார்ந்த விடயங்கள் ஒரு சிலரைக் கடுமையாகப் பாதிக்கும். சிலருக்கு அது மிகவும் வேதனை அளிப்பதாகவும் இருக்கும். இது எல்லா புலன் சார்ந்த தூண்டலுக்கும் பொருந்தும். ஆனால் அவர்களுக்கு ஒலி, ஒளி, சுவை, மணம் மற்றும் தொடு உணர்வுகள் சராசரியை விட அதிகமாகவோ குறைவாகவோ செயல்படும். ஆகையால்தான் அவர்களில் பலர் மாற்றமில்லா ஒரேவகையான நடைமுறையை விரும்புகின்றனர். தொடு உணர்வு மண்டலம்தொடு உணர்வு மண்டலத்தில் பாதிப்பு இருப்பின், மதியிறுக்கமுடைய குழந்தைகள், பிறர் தொட்டால், விலகி விடுவார்கள். பொருட்கள், உடை அல்லது உணவு ஆகியவற்றின் தொடு உணர்வை அதிகப்படியாகவே உணர்வார்கள். இதனால் இவர்களின் நடத்தைப் பிரச்சனைகள், கோபம், எரிச்சல் போன்ற செயல்களில் ஈடுபடுவர் அல்லது தனிமையை நாடுவர். சில தூண்டல்கள் அவர்களைத் தவிர்க்கச் செய்தாலும் பல தொடு உணர்வுத் தூண்டுதல்கள் அவர்களுக்கு அமைதி ஏற்படுத்தும். செவி உணர் மண்டலம்மதியிறுக்கமுடைய குழந்தைகளுக்குச் செவி உணர் மண்டலத்தில் ஏற்படும் குறைபாட்டினால், காது மூலம் நரம்பு மண்டலத்துக்கும், மூளைக்கும் செல்லும் ஒலிகளை மூளையானது சொற்கள், இசை, பொருளுடன் கூடிய ஒலி எனச் சூழலுக்கு ஏற்ப பிரித்து அறியாது. எனவே இக்குழந்தைகள் சராசரியாகக் கேடு விளைவிக்காத ஒலிகளுக்குக் கூட அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். எடுத்துக்காட்டாக நாற்காலி இழுத்தல், மணியோசை, ஒலிப்பெருக்கி அறிவிப்புகள், மின்சாதனங்களின் இரைச்சல், அன்றாடம் கேட்கும் சில ஒலிகள் ஆகியவற்றால் மிகுந்த மன வேதனை அடைவர். விழிசார் உணர்வு மண்டலம்கண்கள் மூலம் காணப்படும் வண்ணம், உருவம் அளவு ஆகியவற்றை நரம்பு மண்டலமும் மூளையும் ஒருங்கிணைந்து சூழலுக்கு ஏற்றவாறு பொருத்தி அக்காட்சிக்கு ஏற்ப செயல்பட ஆணையிடுகிறது. மதியிறுக்கக் குறைபாடுடையோருக்கு விழிசார் தகவல்களுக்கு வெவ்வேறு விதத்தில் செயல்படுவர். வெளிச்சம், பிரகாசமான விளக்குகள், ஒளி எதிரொளிப்புகள், பளபளப்பான பொருட்களைத் தவிர்க்கக் கண்களை மூடுவர் அல்லது சுருக்குவார்கள். சிலர் அவற்றை விரும்பி நாடுவர். சுவை உணர் மண்டலம்மதியிறுக்கக் குறைபாடுடைய குழந்தைகள் நாவினால் உணரப்படும் சூடு அல்லது குளிர்ச்சி, காரம் அல்லது மிதம் இனிப்பு போன்றவற்றை அறிவதில் ஏற்படும் சிக்கல் காரணமாகச் சில உணவுகளைத் தவிர்ப்பார்கள் அல்லது அதனையே அதிகமாக விரும்புவார்கள். நுகர்தல் உணர்வு மண்டலம்மூக்கின் வழியாக உணரப்படும் வியர்வை, வாசனைத் திரவியங்கள் ஆகியவை மதியிறுக்கமுடைய சிலருக்கு மிகுந்த தூண்டுதலை அளிக்கிறது. சிலர் எதிர்பாராத வகையில் சுற்றுப்புறத்தைப் பற்றி அறிய எல்லாவற்றையும் நுகர்வார்கள். சமநிலை உணர் மண்டலம்சமநிலை உணர் மண்டலமானது உடலின் சீரான சமநிலைக்கும், தளம்சார் அங்க அசைவுகளுக்கும், சுழலும், திரும்பும், குனியும், செயல்களில் தடுமாறாமல் ஈடுபடுவதற்கும் மிக முக்கியமான புலன்சார் மண்டலமாகும். நமது காதின் உட்பகுதியில் உள்ள சவ்வு நரம்பு மண்டலத்துடன் இணைந்து நாம் நேராக நிற்கவும், அசைவுகள் அல்லது செயல்பாடுகளைச் செய்யவும் உதவுகிறது. மதியிறுக்கமுடைய சிலருக்கு தங்கள் உடலைத் தடுமாறாமல் செயல்படுத்துவதில் சிரமம் இருக்கும். அதனால் அவர்கள் படிகள், சரிவுப்பாதை (ramp) ஆகியவற்றில் நிலையாக இருக்கச் சிரமப்படுவர். சிலர் எவ்வித உடல் அசைவுக்கும் பயந்து மிக மெதுவாக நகர்வர். சிலர் மிகவும் அஞ்சுபவர்கள் போலவும், அசாதாரண நடத்தை உள்ளவர்களாகவும் தோன்றுவர். சிலர் இதற்கு நேர்மாறாகச் செயற்படுவர். அவர்கள் சுற்றுதல், சுழலுதல், போன்ற செயல்களில் மற்றவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாத வேகத்தில் செயல்படுவர். உள் உறுப்புகள் உணர்வு மண்டலமும்தசைகள், நரம்புகள், மூட்டுகள், உட்காது ஆகியவற்றில் உள்ள புலன் உணர்வு உறுப்புக்கள், உடலின் நிலை, கைகால்களின் நிலை ஆகியற்றைக் கண்டறிகிறது. உள்ளுறுப்பு தூண்டல்களுக்கு ஏற்ப சில துலங்கல்களை வெளிக்காட்டுவதன் மூலம் செயல்படுகிறது. நமது புலன்களும் நமது உள்ளுறுப்புகளும் வெளியே இருக்கும் தகவல்களை மூளைக்குத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கின்றன. இதனால்தான் கண்களால் காணமுடியாத புலன் சார் தகவல்களைக் கூட மூளையால் ஒருங்கிணைக்க முடிகிறது. மதியிறுக்கமுடைய குழந்தைகளுக்கு இந்தப் புலன்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட புலன்சார் தகவல்கள் மூளைக்குச் சரியாகச் செல்வதில்லை. அல்லது மூளையால் சரியாக ஒருங்கிணைக்கப்படுவதில்லை. ஆகையால் புலன் சார் தூண்டுதலுக்கு அவர்களை நடத்தைகள் விநோதமாகவும், சமூகத் திறனில் குறைபாடு உடையவர்களாகவும் காட்டும்.
தொடர் செய்கைமதியிறுக்க நபர்கள் பல்வேறுவகையான தொடர் செய்கைகளை அல்லது மட்டுப்படுத்தப்பட்ட செய்கைகளை வெளிப்படுத்துகின்றனர். இதனைத் தொடர் செய்கை நிலை-மாற்றியமைக்கப்பட்டது (RBS-R)[11] பின்வருமாறு வகைப்படுத்துகிறது: ![]()
மதியிறுக்கத்திற்கென்று குறிப்பிட்டுக் கூறும்படியான தொடர் செய்கை எதுவும் இல்லை. இருப்பினும் இத்தகைய செயற்பாடுகளின் நிகழ்வுகளுக்கும் கடுமைக்கும் மதியிறுக்க குறைபாடுள்ளவர்களுக்கு கூடுதல் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது [25] மற்ற அறிகுறிகள்மதியிறுக்க குறைபாடுள்ளவர்களுக்கு இக்குறைபாடின் பொதுவான கூட்டறிகுறிகளை விட மாறுபட்ட அறுகுறிகள் இருந்து அவரையும் அவரது குடும்பத்தையும் பாதிக்கலாம்.[26] மதியிறுக்கம் உடையோரில் 0.5% முதல் 10% வரை மிக வழமைக்கு மேற்பட்ட திறன்களை வெளிப்படுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சிறு துணுக்குத் தகவல்களை நினைவு கொள்வதிலிருந்து, மேதைகளைப் போன்ற மிக அபாரமான அறிவுத்திறன் உடையவர்களாக உள்ளனர்.[27] மற்றவர்களை விடக் கவனத்திலும் உய்த்துணர்தலிலும் மிகவும் திறனுடையவர்களாக உள்ளனர்.[28] 90%க்கும் கூடுதலான மதியிறுக்கம் கொண்டோருக்கு இயல்புக்கு மாறான உணர்வுகள் உள்ளன.[29] இருப்பினும் இவற்றால் மட்டுமே மற்ற வளர்ச்சிக் குறைபாடுகளிலிலிருந்து மதியிறுக்கத்தைத் தனிப்படுத்த முடியாது.[30] மதியிறுக்கம் கொண்டோரில் 60%–80% பேருக்குத் தசையியக்க அறிகுறிகளாக வலுவிழந்த தசைநார்கள், செயற்றிறன் குறைபாடு, முன்னங்கால் நடை (அல்லது கால்விரல் நடை) போன்றவற்றைக் கொண்டுள்ளனர்.[29][31] முக்கால்வாசி மதியிறுக்கக் குழந்தைகளுக்கு உணவருந்தும் பழக்கங்களில் வேறுபாட்டைக் காணலாம்.[17] இருப்பினும் இது ஊட்டக்குறைபாட்டில் முடிவதில்லை. சில குழந்தைகளுக்கு மனித இரையகக் குடற்பாதை (GI) அறிகுறிகள் இருப்பினும் இதற்கு சான்றாகப் பதிக்கப்பட்ட தரவுகள் இல்லை.[32] நடத்தப்பட்ட சில ஆய்வுகளின் முடிவுகள் இந்தத் தொடர்பை உறுதிப்படுத்துவதாக இல்லை.[33] மதியிறுக்க குழந்தைகளின் உடன்பிறப்புகளுக்கு அவர்களிடமிருந்து கூடிய பெருமை கிடைப்பதுடன் பிணக்குகளும் குறைவாக உள்ளன. இது டெளன் நோய்க்கூட்டறிகுறி உடையோரின் உடன்பிறப்புகளைப் போன்றே இருப்பினும் டெளன் நோய்க்கூட்டறிகுறியாளர்களின் உடன்பிறப்புக்களுக்கு இவர்களின் உடன்பிறப்புக்களை விடக் கூடுதலான அண்மையும் நெருக்கமும் கிடைத்தது.[34] மதியிறுக்கம் பற்றிய சில உண்மைகள்மதியிறுக்கம் உடையவர்கள் மூளையில் தகவல் பரிமாற்றம் செய்யும் பகுதிகளில் பாதிப்புக்களைக் கொண்டிருப்பதால், நடத்தைக் குறைபாடு, அறிவுத்திறன் வளர்ச்சியில் பாதிப்பு, மற்றும் நரம்பியலுடன் தொடர்புடைய பிற குறைபாடுகளும் இணைந்து காணப்படுபவர்களாக இருப்பார்கள். இது தவறான வளர்ப்பு முறையாலோ அல்லது குழந்தைகளைத் துன்புறுத்துவதாலோ, ஒதுக்குவதாலோ உண்டாகும் பிரச்சனையல்ல. இது நோயல்ல. மருந்துகளால் குணப்படுத்த முடியாதது. இது வாழ்நாள் வரையில் நீடிக்கும் குறைபாடு. குழந்தைகளின் முதல் 3 வயதிற்குள் வெளிப்படும். இந்தக் குறைபாடு அனைத்து தரப்பினரையும் பாதிக்கும்.[26] மதியிறுக்கம் உண்டாவதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சில நேரங்களில் பரம்பரையாக வருவதாக நம்பப்படுகிறது.[35][36] கடந்த 60 ஆண்டுகளாக மருத்துவத்துறையில் மதியிறுக்கம் குறிப்பிட்ட குறைபாடாகக் கருதப்படுகிறது. மதியிறுக்கம் இளவயது மனச்சிதைவு என்றும் கூறப்பட்டது. மனச்சிதைவுக்கும், மதியிறுக்கத்திற்கும் இடையே வெளிப்படும் வயது, அறிவுத்திறன் அளவு மற்றும் குடும்பப் பின்னணி போன்றவற்றில் அதிக வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவர்களுடைய இயல்புகள் மற்றும் செய்கைகளைத் தொடக்கக் காலத்திலேயே கண்டறிந்து சீர்படுத்தினால், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணலாம்.[37] மதியிறுக்கக் குறைபாடு உடையவர்கள்
மதியிறுக்கம் பற்றிய தவறான கருத்துகள்மதியிறுக்கம் கொண்டவர்களைப் பற்றிச் சமூகத்தில் நிலவும் சில தவறான கருத்துகள்:
கண்டறிய உதவும் குறிப்புகள்
புறப்பரவியல்![]() 1000 பேருக்கு 1–2 பேருக்கு மதியிறுக்கமும் 6 பேருக்கு மதியிறுக்கத் தொகுதிக் குறைபாடும் உள்ளதாகச் சில மதிப்பீடுகள் வெளியாகியுள்ளன.[38] 2008 இல் ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் 1,000 சிறார்களில் 11 பேருக்கு மதியிறுக்கத் தொகுதி குறைபாடு உள்ளதாகவும்[4][39], சரியான தகவல்கள் இல்லாமையால் இந்த அறிக்கைகள் மதியிறுக்கத் தொகுதிக் குறைபாடுகளைக் குறைவாக மதிப்பிடுவதாகவும்[40] கூறப்படுகிறது. இத்தொகுதியில் உள்ள குறிப்பிட்டுக் கூறவியலா பரந்த வளர்ச்சிக் குறைபாடு (PDD-NOS) மட்டுமே 1,000 பேருக்கு 3.7 ஆகவும், அசுபெர்கர் கூட்டறிகுறி ஏறத்தாழ 1000க்கு 0.6 ஆகவும் சிறுவயது சிதைவு குறைபாடு 1000க்கு 0.02 ஆகவும் மதிப்பிடப்படுகிறது.[41] இக்குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை 1990களிலும் 2000களின் துவக்கத்திலும் மிகக் கூடுதலாக இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இந்த உயர்வு பெரும்பாலும் இக்குறைபாடுகளை அறியும் செய்முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினாலும் மருத்துவ ஆலோசனைகளாலும், சேவைகள் கிடைப்பதாலும் குறைபாடு வெளிப்படும் அகவையினாலும் பொதுமக்கள் அறிதலாலும் ஏற்பட்டுள்ளன;[41][42] இருப்பினும் அடையாளம் காணாத சுற்றுச்சூழல் தீவாய்ப்புக் காரணிகளைப் புறந்தள்ள இயலாது.[2] உண்மையிலேயே இக்குறைபாடுள்ளோர் கூடியுள்ளனரா அல்லது மறைந்திருந்த குறைபாடுகள் இப்போதுதான் அடையாளம் காணப்படுகி்றனவா என்பதை தற்போதுள்ள சான்றுகளின்படி அறிய முடியாது உள்ளது. உண்மையிலேயே குறைபாடுகள் கூடினால்[41] மரபியல் ஆராய்ச்சிகளில் முனைப்பு காட்டுவதை விடச் சுற்றுச்சூழல் காரணிகளை மாற்றியமைப்பதற்கான ஈர்ப்பிலும் நிதி திரட்டுவதிலும் முனைப்பு காட்ட வேண்டி இருக்கும்.[43] உசாத்துணைமாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடங்கிய கல்வி என்ற தலைப்பில் தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட பயிற்சிக்கான கையேடு. மேற்கோள்களும் குறிப்புகளும்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia