மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்
மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் மதுரை நகரில் தெற்கு மாசி வீதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1][2] மதுரை சௌராட்டிர சபையினரால் இக்கோயில் நிருவகிக்கப்படுகிறது.[3] கடல் மட்டத்திலிருந்து சுமார் 188 மீட்டர் உயரத்தில், 9°54′50″N 78°07′01″E / 9.9139°N 78.1170°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் பிரசன்ன வெங்கடேச பெருமாள்; தாயார் அலர்மேல்மங்கை ஆவர். உற்சவர் சீனிவாச பெருமாள் ஆவார். பள்ளி கொண்ட பெருமாள், நரசிம்மர், இலட்சுமி ஹயக்கிரீவர், பாண்டுரங்கன், ரகுமாயி தாயார், இராமர், வைஷ்ணவ விக்னேசுவரர், கருடாழ்வார், சுதர்சனர், அஞ்சலி ஆஞ்சநேயர், நடனகோபால நாயகி சுவாமி மற்றும் ஆண்டாள் ஆகியோரும் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலின் தீர்த்தம் சர்வ அபீஷ்ட தீர்த்தம் ஆகும். பாஞ்சராத்ர முறைப்படி பூசைகள் செய்யப்படுகின்றன. கிருஷ்ண ஜெயந்தி, பங்குனி பிரம்மோற்சவம், இராம நவமி, ஆடிப் பூரம், இரத சப்தமி, புரட்டாசி சனிக்கிழமைகள் ஆகியவை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.[4] 'மாற்றுத் திருக்கோல சேவை' என்ற வைபவத்தில், சுவாமி ஆண்டாள் அலங்காரத்திலும் , ஆண்டாள் சுவாமி அலங்காரத்திலும் காட்சி தருகின்றனர். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia