மார்ஃபீன்
மார்ஃபீன் (Morphine) (அனைத்துலகத் தனியுரிமமற்ற பெயர் (INN) (/ˈmɔːrfiːn/; MS Contin, MSIR, Avinza, Kadian, Oramorph, Roxanol, Kapanol) என்பது வலுவாக இயங்கி வலிநீக்கத்திற்கு பயன்படும் வலிநீக்கி, வலிமறக்கச்செய்யும், மயக்கமூட்டும் மருந்து. இதனை முதன்முதலாக 1804 ஆம் ஆண்டு பிரீடிரிக்கு செர்ட்டியூனெர் (Friedrich Sertürner) என்பார் அபினி (ஓப்பியம்) என்னும் செடியில் இருந்து தாவரவேதிப் பொருளாகப் பிரித்தெடுத்தார். இதுவே எந்தவொரு தாவரத்தில் இருந்தும் பிரித்தெடுக்கப்பட்ட முதல் ஆல்கலாய்டு (நைதரசன் கொண்ட வளைய மூலக்கூற்று தாவர வேதிப்பொருள்) (alkaloid). இவரால் இப்பொருள் முதன்முதல் 1817 இல் வழங்கப்பட்டது; 1827 இல் வணிக முறையில் மெர்க்கு நிறுவனம் (Merck) இதனை விற்றது; அப்பொழுது அது தனியொரு மருந்துக்கடையாக இருந்தது. 1857 ஆம் ஆண்டு தோலுக்கடியில் பாய்ந்து மருந்தேற்றும் மருந்தூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்பு பரவலாகப் பயன்படுத்தப் பட்டது. கண்டுபிடிப்பாளர் செர்ட்டியூனெர், முதலில் கனவுகளுக்கான கிரேக்கக் கடவுளான மார்ஃபியசு (Morpheus, Μορφεύς) என்பாரின் பெயரடிப்படையில், தூக்கம் உண்டாக்குவது என்னும் கருத்தில் மார்ஃபியம் (morphium) என்று பெயரிட்டார்[2]. செர்ட்டியூனெர் அபினியில் இருந்து பிரித்தெடுத்த பின்னர், மரபாக வேதிச்செய்முறைகள் வழி அபினியில் இருந்து மார்ஃபீன் பெறப்பட்டது. இந்தியாவில் உரிமம் வழங்கப்பட்ட அபினி பயிற்தொழிலர்கள் அரசின் செய்முறைப் படைப்பாலகளில் அபினிப் பூக்களை ஒரே சீராக ஈரம் நீக்கிப் பதப்படுத்தி மருந்தாக்க நிறுவனங்களுக்கு விற்கின்றனர்; அவர்கள் இதில் இருந்து மார்ஃபீனைப் பிரித்தெடுக்கின்றார்கள். ஆனால் துருக்கி, தாசுமேனியா மார்ஃபீன் பொருள் முற்றிலும் முதிர்ச்சி அடைந்த உலர்ந்த அபினி விதைகளில் இருந்தும் தண்டுகளில் (poppy straw) இருந்தும் பெறுகின்றார்கள். இப்படித் தண்டுகளில் இருந்து பெரிய அளவில் செய்முறைப் படைப்பாலகள் வழி மார்ஃபீன் பெறுவதால் சட்டமீறலாக கள்ளத்தனமாக மார்ஃபீன் பெறுவதைக் குறைப்பதாகக் கூறப்படுகின்றது. துருக்கியில் நீர் நீக்க முறையிலும் தாசுமேனியாவில் கரைப்பான் வழி பிரித்தெடுப்பு முறையில் பெறுகின்றார்கள். மார்ஃபீன் என்பது அபினியில் மிகக் கணிசமாகக் காணப்படும் ஓப்பியேட்டு (opiate) (அபினிப்பொருள், அபினியம்), இது காய்ந்த அபினிப் பாலில் (latex) இருந்து பெறப்படுகின்றது. பேப்பவெர் சோம்னிஃபெரம் என்று தாவரவியலில் அழைக்கப்படும் அபினியின் காயை மேலோட்டமாகச் சீவி அதிலிருந்து வடியும் பாலைக் காயவைத்து மார்ஃபீன் எடுக்கப்படுகின்றது. மார்ஃபீன் என்பதே முதன்முதலாக எந்தவொரு தாவரத்தில் இருந்தும் எடுக்கப்பட்ட, தனித்துப்பிரித்தெடுக்கப்பட்டுத் தூய்மைப்படுத்தப்பட்ட, உடலில் இயங்கும் தாவரப்பொருள், ஆனால் குறைந்தது 50 வெவ்வேறு ஆல்கலாய்டுகள் அபினியிலும், அபினித்தண்டு செறிவகத்திலும் ('concentrate'), பிற அபினிப்பூ வழிப்பெற்ற பொருள்களிலும் காணப்படுகின்றது. உலர்ந்த அபினியில் 8 முதல் 14 விழுக்காடு வரை மார்ஃபீன் எடுக்கலாம்[3], ஆனால் சிறப்பாக வளர்த்தெடுத்த வகைகளில் 26% வரையிலோ அல்லது சிலவற்றில் ஏறத்தாழ ஏதுமில்லாமலோ (1% உக்கும் குறைவாக, 0.04$ வரையிலும்) இருக்கும். பின்னர் கூறப்பட்ட அதிக மார்ஃபீன் இல்லாத வகை அபினிகளில், பிரசெமுக்கோ ('Przemko') மற்றும் நோர்மன் ('Norman') போன்றவற்றில் இருந்து வேறு மருந்துகளுக்குத் தேவைப்படும் அபினியின ஆல்கலாய்டுகளாகிய தெபைன் (thebaine), ஓரிப்பவைன் (oripavine) பிரித்தெடுக்கின்றார்கள். இவை பாதி செயற்கையான அபினியின மருந்துகளாகிய ஆக்ஃசிக்கோடோன் (oxycodone) இட்டார்ஃபைன் (etorphine) போன்றவற்றுக்குத் தேவைப்படுகின்றன. பேப்பவெர் பிராக்டீட்டம் (Papaver bracteatum) செடியில் மார்ஃபீனோ கோடீனோ (codeine) அல்லது பிற ஃபீனாந்திரீன்-வகை (phenanthrene-type) வயப்பொருளோ (narcotic) கொண்ட தாவரவேதிப்பொருள் (ஆல்கலாய்டு) இல்லை. இவ்வகைச்செடி தெபைன் (thebaine) தருவது[4] மருத்துவத்தில் மார்ஃபீன் என்பது இவ்வகையான மற்ற பொருள்களை ஒப்பிட எடுத்துக்கொள்ளும் முதல்தரம் அல்லது ஆணித்தர வலிநீக்கி, வலிமறப்பி (ஆணித்தரம்-reference). மற்ற அபினிய வகையான ஆக்ஃசிக்கோடோன், ஐதரோமார்ஃபோன், டை-அசிட்டைல்மார்ஃபீன் (ஃகெராயன், heroin) போன்றே மார்ஃபீனும் மைய நரம்பு மண்டல வழி இயங்கி வலி நீக்குகின்றது (வலி மறக்கச்செய்கின்றது). மார்ஃபீன் வயப்படுத்தும் (பழக்கத்துக்கு அடிமைப்படுத்தும்) தன்மை கொண்டது; மருந்தின் விளைவு குன்றுமை (அதாவது மருந்தளவின் விளைவு குன்றுதல்; இதனால் அதிக மருந்து தேவைப்படல்), மனதளவில் பழக்கத்துக்கு வயப்படுதல் போன்றவை விரைவில் ஏற்படுகின்றது, ஆனால்தொடர்ந்து வலியால் துன்புறும் நோயாளிகளுக்கு தொடர்ந்து பல ஆண்டுகள் வரை அளித்து வருகின்றார்கள். மருத்துவப் பயன்பாடுகள்மார்ஃபீன் பெரும்பாலும் தொடர்ந்து இருக்கும் வலியைக் குறைக்கவே பயன்படுகின்றது. இதயவலி அல்லது மாரடைப்பு காலத்திலும் மகப்பேறு காலத்திலும்[5] வலியைக் குறைக்கப் பயபடுத்தப்படுகின்றது. ஆனால் மார்ஃபீனின் பயன்பாடு சில நெஞ்சுவலி (non ST elevation myocardial infarction) சூழல்களில் பயன்படுத்தினால் இறப்பு விகிதம் கூடும் என்னும் கவலையும் உண்டு[6]. நுரையீரல் நீர்க்கோவை (acute pulmonary edema) ஏற்பட்டாலும் மார்ஃபீன் தருவது வழக்கமாக இருந்தது.[5]. ஆனால் 2006 இல் செய்த ஒரு மீள்பார்வையின்படி இப்படியான வழக்கத்துக்குப் போதிய தேவை இருப்பதாக இல்லை என்று கூறப்பட்டது.[7]. மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
|
Portal di Ensiklopedia Dunia