மார்பு நெரிப்பு
மார்பு நெரிப்பு (angina pectoris) என்பது நெஞ்சின் நடுப்பகுதியில், மார்பு எலும்பின் பிற்பகுதியில் அழுத்துவது அல்லது பிசைவது போன்ற உணர்வுடன் ஏற்படக்கூடிய ஒருவகை நெஞ்சுவலி உணர்வாகும். முடியுரு நாடியின் ஒரு கிளைப்பகுதி அடைபடுவதால் அல்லது அது இறுக்கமடைந்து அதனது விட்டம் சுருங்குவதால் இதயத்தசைக்கு போதியளவு குருதியோட்டம் குறைகின்றது. போதியளவு குருதி இன்மையால் குறிப்பிட்டதொரு முடியுரு நாடியின் கிளைப்பகுதி மூலம் குருதியைப் பெற்றுக்கொள்ளும் இதயத்தின் குறிப்பிட்ட தசைப் பகுதி பாதிப்படைகின்றது. இதன்போது இந்நோயுணர்வு ஏற்படுகின்றது. [1] மார்பு நெரிப்பின் முதன்மைக் காரணி தமனிக்கூழ்மைத் தடிப்பு என்றாலும் குருதிச்சோகை, இதயத்துடிப்பு இலயமின்மை, இதயச்செயலிழப்பு போன்றனவையும் ஏனைய காரணிகளாகும். இலத்தின் பெயரீடு angere ("நெரித்தல்") மற்றும் pectus ("மார்பு") ஆகியனவற்றின் கூட்டு மார்பு நெரிப்பு என அழைக்கப்படுகின்றது. முடியுரு நாடியின் விட்டம் குறுகலைடைவது, தமனிக்கூழ்மைத் தடிப்பு உடைந்து குருதி உறைவது மற்றும் இதயத்தசைக்குத் தேவையான குருதியின் அளவு என்பன முடியுரு நோய்க் கூட்டறிகுறிகளின் வகைகளைத் (நிலையில்லா மார்பு நெரிப்பு, இதயத்தசை இறப்பு) தீர்மானிக்கின்றன. நிலையான மார்பு நெரிப்பு மற்றும் நிலையில்லா மார்பு நெரிப்பு என்று மார்பு நெரிப்பு மேலும் வகுக்கப்படுகின்றது. இவற்றில் அறிகுறிகள் முற்றிலும் அற்ற நிலை தொடங்கி நோய் அறிகுறிகள் தீவிரம் பெறும் நிலை வரை நோய் காணப்படலாம். மேலும், இவை ஒருவரது செயற்பாட்டிலும் தங்கி உள்ளது: சிலருக்கு ஓய்விலேயே நோய் அறிகுறிகள் தென்படும் அதேவேளையில் வேறு சிலருக்கு சிறிய வேலைகளின் போது அல்லது பாரிய வேலைகளின் போது மட்டும் ஏற்படலாம். உசாத்துணைகள்
|
Portal di Ensiklopedia Dunia