மால்கம் டேர்ன்புல்
மால்கம் பிளை டேர்ன்புல் (Malcolm Bligh Turnbull, பிறப்பு: 24 அக்டோபர் 1954) ஆத்திரேலிய அரசியல்வாதி ஆவார். இவர் 29-வது ஆத்திரேலியப் பிரதமராகவும், லிபரல் கட்சித் தலைவராகவும் 2015 முதல் 2018 வரை பதவியில் இருந்தார். 2004 ஆம் ஆண்டு முதல் சிட்னியின் வென்ட்வர்த் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். சிட்னியில் பிறந்த டேர்ன்புல் சிட்னி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், பின்னர் சட்டத்தில் பட்டமும் பெற்றார்.[1][2] ஆக்சுபோர்டு, பிரசெனோசு கல்லூரியில் ரோட்சு புலமைப்பரிசிலில் படித்து குடியுரிமைச் சட்டத்தில் பட்டம் பெற்றார்.[3] அரசியலில் இறங்கும் முன்னர் ஊடகவியலாளர்,[4] வழக்கறிஞர்,[5] முதலீட்டு வங்கியியலாளர், மூலதன முதலீட்டாளர் எனப் பல தொழில்களில் பணியாற்றினார். 1993 முதல் 2000 ஆம் ஆண்டு வரை ஆத்திரேலிய குடியரசு இயக்கத்தின் தலைவராகப் பணியாற்றினார். ஜோன் அவார்டின் அரசில் சுற்றுச்சூழல் அமைச்சராகவும், பின்னர் டோனி அபோட்டின் அரசில் தகவல்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 2008 செப்டம்பரில் லிபரல் கட்சித் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 2009 நவம்பரில், தொழிற்கட்சி அரசினால் முன்மொழியப்பட்ட கரிம மாசுக் குறைப்புத் திட்டத்தை ஆதரித்தடை அடுத்து, லிபரல் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதனை அடுத்து இடம்பெற்ற லிபரல் கட்சித் தலைவர் போட்டியில் டோனி அபோட் ஒரு வாக்கால் வெற்றி பெற்ததை அடுத்து டேர்ன்புல் கட்சித் தலைமைப் பதவியை இழந்தார். டேர்ன்புல் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2013 செப்டம்பரில் அபொட்டின் அரசில் தகவல்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2015 பெப்ரவரி 9 இல் கட்சித்தலைவர் டோனி அபோட் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை மால்கம் டேர்ன்புல் கொண்டு வந்தார். இது 61:31 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.[6] அதன் பின்னர் 2015 செப்டம்பர் 14 இல் தான் கட்சித் தலைமைக்குப் போட்டியிடப்போவதாக டேர்ன்புல் அறிவித்தார். உடனடியாக அவர் தனது அமைச்சர் பதவியையும் துறந்தார்.[7] அபோட் "நாட்டுக்குத் தேவையான பொருளாதாரத் தலைமைக்கு உகந்தவராக இல்லை" எனவும், "மக்களின் அறிவுக்கூர்மையை மெச்சும் ஒரு தலைவரே" லிபரல் கட்சிக்குத் தேவையென மால்கம் டேர்ன்புல் கூறினார்.[8][9] அன்றிரவு நடைபெற்ற கட்சித் தலைமைப்பதவிக்கான வாக்கெடுப்பில் டேர்ன்புல் 54:44 வாக்குகளால் வெற்றி பெற்று லிபரல் கட்சித் தமைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10] இதனை அடுத்து மால்கம் டேர்ன்புல் 2015 செப்டம்பர் 15 இல் ஆத்திரேலியாவின் 29வது பிரதமராக ஆளுனரால் நியமிக்கப்பட்டார்.[11][12] 2018 ஆகத்து மாதத்தில் பீட்டர் டட்டன் தலைமையில் ஆளும் லிபரல் கட்சியின் பழமைவாதிகளினால் பிரதமர் டேர்ன்புல் ஆட்சிக் கவிழ்ப்பு சவாலை எதிர் கொண்டார். டேர்ன்புல் இச்சவாலை முறியடித்தாலும்,[13][14] அவருக்கு எதிரான சர்ச்சைகள் கட்சியில் அதிகரித்த நிலையில், கட்சித் தலைமைப் பதவிக்குப் போட்டி ஏற்பட்டது.[15] போட்டியில் இருந்து டேர்ன்புல் விலகிக் கொண்டார். கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே 2018 ஆகத்து 24 இல் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஸ்கொட் மொரிசன், பீட்டர் டட்டன், வெளியுறவுத்துறை அமைச்சர் யூலி பிசொப் ஆகியோர் போட்டியிட்டனர். முதற்கட்ட வாக்கெடுப்பில் குறைந்த வாக்குகளைப் பெற்ற ஜூலி பிஷொப் விலகியதை அடுத்து, இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் மொரிசன் பீட்டர் டட்டனை எதிர்கொண்டு 45:40 வாக்குகள் பெற்று கட்சித் தலைவராகவும், ஆத்திரேலியாவின் 30-வது பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[16] இதனை அடுத்து, இதே நாளில் மால்கம் டேர்ன்புல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.[17] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia