மால்கம் பிரேசர்
ஜோன் மால்கம் பிரேசர் (John Malcolm Fraser, 21 மே 1930 – 20 மார்ச் 2015) ஆத்திரேலிய அரசியல்வாதி. இவர் 1975 முதல் 1983 வரை ஆத்திரேலியாவின் பிரதமராகவும், லிபரல் கட்சித் தலைவராகவும் பணியாற்றியவர். பிரேசர் 1955 ஆம் ஆண்டில் தனது 25வது அகவையில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1966 ஆம் ஆண்டில் ஆத்திரேலிய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். 1969 இல் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றார். 1972 தேர்தலில் லிபரல் கட்சி தோல்வியடைந்தததி அடுத்து மால்கம் பிரேசர் அக்கட்சியின் தலைமைப் பதவிக்குத் தகுந்தவராக அடையாளம் காணப்பட்டார். ஆனாலும், தலைமைப் போட்டியில் பில்லி சினெடனிடம் தோற்றார். பின்னர் மீண்டும் 1975 இல் போட்டியிட்டு லிபரல் கட்சியின் தலைவராக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆத்திரேலிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரானார்.[1] 1975 ஆம் ஆண்டில் அன்றைய கஃப் விட்லம் தலைமையிலான தொழிற் கட்சி அரசு சர்ச்சைக்குரிய முறையில் ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்பட்டதை அடுத்து, 1975 நவம்பர் 11 இல் மால்கம் பிரேசர் இடைக்கால அரசின் பிரதமராக ஆளுனர் சேர் ஜோன் கெர் என்பவரால் நியமிக்கப்பட்டார். விட்லம் அரசின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மால்கம் பிரேசர் பெரும் பங்காற்றினார்.[1] 1975 இல் இடம்பெற்ற தேர்தலில் லிபரல் கட்சி பெரு வெற்றி பெற்று பிரேசர் பிரதமரானார். 1977, 1980 தேர்தல்களிலும் பிரேசர் தலைமையில் லிபரல் கட்சி வெற்றி பெற்றது. 1983 தேர்தலில் லிபரல் கட்சி பொப் ஹோக் தலைமையிலான தொழிற் கட்சியிடம் தோல்வியடைந்தது.[1] இதன் பின்னர் சில காலத்தில் பிரேசர் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றார். 2015 மார்ச் 20 இல் சிறிது கால சுகவீனத்தை அடுத்து 2015 மார்ச் 20 இல் பிரேசர் மெல்பேர்ன் நகரில் காலமானார்.[1][2] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia