முகூர்த்தக்கால் நடுதல்

திருமண வீடுகளில் முகூர்த்தக்கால் நடுதல் அல்லது பந்தக்கால் நடுதல் என்பது சுபகாரியத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. திருமண வீடுகளில், திருமணம் நடப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் சுபகூர்த்த நாளில், சுபமுகூர்த்தம் நேரத்தில்[1]முகூர்த்தக்கால் நடப்படுகிறது. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளாசியோடு மணமக்கள் இன்புற்று மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதைக் குறிக்கவே பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடப்படுகிறது.

மணப்பந்தலின் ஒரு கால்தான் முகூர்த்தக் கால் ஆகும். திருமணத்தின் போது மணமகன் மற்றும் மணமகள் இல்லங்களிலும், திருமணம் செய்யும் இடத்திலும் வடகிழக்கு திசையில் முகூர்த்தக் கால் நடுவது மரபாக இருந்து வருகிறது. மூங்கில் அல்லது பால் ஊறும் மரக் கிளைகளை மணமகன் மற்றும் மணப்பெண் இவர்களுக்கு மிக நெருக்கமான உறவினர்கள் சேர்ந்து இவர்களின் வீடுகளில் இடப்படும் மணப்பந்தலுக்கான முகூர்த்தக் காலாக நடுவார்கள். மூங்கிலும், பால் ஊறும் மரமும் தழைத்துச் செழிப்பது போல் மணமக்களின் வாழ்வும் செழிக்கும் என்ற நம்பிக்கை குறித்த சடங்காகும்.[2]

முகூர்த்தக்கால் நடும் முறை

வீட்டுத் திருமணத்தின் போது வடகிழக்கு திசையான ஈசான்ய மூலையில் முகூர்த்தக்கால் அல்லது பந்தக்கால் நடப்படும். முகூர்த்தக்கால் நடுவதற்கு மூங்கிலை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் பூசி, அதன் உச்சியில் பூக்கள் சுற்றி அலங்கரித்து வீட்டின் வடகிழக்கு திசையில் நடப்படுகிறது.

கோயில்களில் முகூர்த்தக் கால் நடுதல்

தமிழகக் கோயில் விழாக்களுக்கு சில நாட்கள் முன்னர், விழா சிறப்பாக நடைபெற வேண்டி, பூஜை, புனஸ்காரங்களுடன் கோயிலின் ஈசானிய மூலையில் பந்தக்கால் நடுவது பாரம்பரிய வழக்கமாக உள்ளது.[3][4]

திருத்தேர் முகூர்த்தக்கால் நடுதல்

தமிழகக் கோயில் விழாவின் முக்கிய வைபவமாகத் தேரோட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக, "திருத்தேர் முகூர்த்தக்கால்" ஊன்றும் நிகழ்வு நடைபெறும். தேருக்கு சில நாட்களுக்கு முன்பு காலையில் சிறப்பு பூஜைகள் முடிந்த பிறகு, முகூர்த்தக்கால் கோவிலிலிருந்து ஊர்வலமாக தேரடிக்கு கொண்டு வரப்படும். பின்னர், தேரின் முதல் நிலையில் முகூர்த்தக்காலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஊன்றப்படும். [5]

மேற்கோள்கள்

  1. சுபமுகூர்த்த நாட்கள்
  2. முகூர்த்தக் கால் நடுதல்
  3. : முகூர்த்தக் கால் நடுதல்: கோயில் விழா
  4. சிவராத்திரி விழாவிற்கு கோயில்களில் முகூர்த்தக் கால் நடப்பட்டது
  5. தைத் தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya