முக்கூர்த்தி![]() இந்தியாவின் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்று மூக்கறுத்தி சிகரம் அல்லது முக்கூர்த்தி சிகரம் (Mukurthi). இது சுமார் 2,554 மீட்டர் (8,379 அடி) உயரத்தில் உள்ளது. முக்கூர்த்தி சிகரம் தமிழகத்தின் இரண்டாவது மிக உயர்ந்த சிகரம் மற்றும் தென்னிந்தியாவில் ஐந்தாவது மிக உயர்ந்த சிகரம் ஆகும்.[1] இது தமிழ்நாட்டில் உதகமண்டலம் வட்டம், கேரள மாநிலம் நிலம்பூர் வட்டம் இதன் எல்லையில் அமைந்துள்ளது. இதன் மேற்கு சாய்வில் கேரள தமிழ்நாடு எல்லையாகும். இதில் 500 மீட்டர் முதல் 2500 மீட்டர் வரை பல பாறை முகடுகள் உள்ளன. முக்கூர்த்தி மலையின் ஒரு பகுதி கேரளாவின் மலப்புரம் மாவட்டத்திற்குள் உள்ளது. இது ஆனைமுடி (2696 மீ) இடுக்கி மற்றும் சைஷாபுலலைலா (2651 மீ) இடுக்கி இவற்றிற்கு அடுத்து மூன்றாவது உயர்ந்த சிகரமாகும். இப்பகுதிக்கு நீலகிரி மாவட்டம் வழியாக மட்டுமே செல்ல இயலும். மலாப்புரத்திலிருந்து நேரிடையாகச் செல்ல இயலாது. முக்கூர்த்தி சிகரம் மூக்கு முனை போன்று காணப்படும். இது முக்கூர்த்தி தேசிய பூங்கா (நீலகிரி வரையாடு தேசிய பூங்கா), நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தின் ஒரு பகுதியாகும். முக்கூர்த்தி மலை பைன், புல்வெளிகள் மற்றும் புதர்கள் உள்ளிட்ட சோலைக் காடுகளால் சூழப்பட்டுள்ளது. இது ஆசிய யானை, புலி மற்றும் நீலகிரி வரையாட்டிற்கு மிகவும் பிடித்த இடமாகும். முக்கூர்த்தி தேசியப் பூங்கா முதுமலை தேசிய பூங்கா மற்றும் அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்காவிற்கு இடையே அமைந்துள்ளது. இங்கிருந்து ஊட்டி நகரம் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ஊட்டியின் சிறந்த மலையேற்ற இடமாகவும் சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. பிச்சல்பெட்டா (2,544 மீ) மற்றும் நீலகிரி மலை ஆகியவை இந்த பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய சிகரங்கள். முக்கூர்த்தி அணையும் (ஏரி) இதன் அருகில் உள்ளது. தொன்மம்மூக்கறுத்தி சிகரமானது தோடர்களால் புனிதமானதாகக் கருதப்படுகிறது.[2] இச்சிகரத்திற்கு அப்பால் சொர்க்கத்தின் வாயில் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். இச் சிகரத்தோடு தொடர்புடைய இரண்டு கதைகள் தோடர்களிடையே வழங்கப்படுகிறது. தோடர்களிடையே ஒரு காலத்தில் பெண் சிசுக் கொலை பழக்கம் இருந்ததுள்ளது. கொலை செய்ய வேண்டிய குழந்தைகளை இங்குக் கொணர்ந்து எறிந்து கொன்று விடுவதுண்டாம், ஆகையினால் எந்தப் பெண்ணையும் தோடர்கள் இச்சிகரத்தின் பக்கமாகச் செல்ல விடுவதில்லை. இக் கட்டுப்பாட்டை மீறி ஒரு பெண் இங்கு வந்துவிட்டாளாம். இதையறிந்த தோடர்கள், அப் பெண்ணின் மூக்கை அறுத்துத் தண்டித்தார்களாம். தண்டனை பெற்ற அப் பெண் இம்மலைச் சிகரத்தை அடைந்து மறைந்துவிட்டடாளாம். தற்போதும்கூட அப் பெண்ணை ஒரு சிறு தெய்வமாகத் தோடர்கள் வணங்குகின்றனர்.[3] இச் சிகரத்தோடு தொடர்புடைய மற்றொரு கதை இராவணனைப் பற்றியதாகும். தோடர்கள் இராவணனுக்கு மரியாதை காட்டாமல், இராமனிடத்தில் அதிக அன்பு செலுத்தினார்களாம். அதனால் சினங்கொண்ட இலங்கை மன்னன் ஒரு கை மண்ணை எடுத்துக் காற்றில் வீசினானாம். அம்மண் கொடிய கிருமிகளாக மாறித் தோடர்களுடைய கால்நடைகளையும், வீடுகளையும் பீடித்துத் துன்புறுத்தியதோடு, அவர்களையும் நோய் கொள்ளுமாறு செய்து கொடுமை புரிந்ததாம். இன்றுகூட அக்கிருமிகளால் தாங்கள் துன்புறுவதாகத் தோடர்கள் நம்புகிறார்கள். இதை உணர்ந்த இராமன் இச்செயலுக்குப் பழிவாங்க எண்ணி இராவணன் தங்கையான சூர்ப்பணகையின் மூக்கை அறுத்து, எல்லாருக்கும் தெரியும்படி இச் சிகரத்தில் பதித்து வைத்தானாம். இக் காரணங்களாலேயே இச்சிகரம் மூக்கறுத்தி சிகரம் என்று பெயர் பெற்றதாகத் தோடர்கள் நம்புகின்றனர்.[3]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia