முசுலிம் சகோதரத்துவ சமூகம் (The Society of the Muslim Brothers, அரபி: الإخوان المسلمون, பெரும்பாலும் சுருக்கமாக "சகோதரத்துவம்" அல்லது "MB") உலகின் மிகவும் செல்வாக்குடைய ,[1] பெரும் இசுலாமிய இயக்கங்களில் ஒன்றாகும்.[2] பல அரபு நாடுகளில் பெரும் எதிர்கட்சியாக விளங்குகின்ற இச்சமூகம் எகிப்தில் 1928ஆம் ஆண்டில் இசுலாமிய அறிஞரும் பள்ளியாசிரியருமான ஹசன் அல்-பன்னாவால் நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் இறுதிகட்டத்தில் முசுலிம் சகோதரத்துவத்தில் இரண்டு மில்லியன் உறுப்பினர்கள் இருந்ததாக மதிப்பிடப்படுகிறது.[3] இதன் கருத்தாக்கங்கள், "இசுலாமிய ஈகைப் பணியுடன் அரசியல் செயல்முனைப்பு", அரபு உலகெங்கும் பரவியதுடன் பிற இசுலாமிய குழுக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது.[4] உலகளவில் பயன்படுத்தப்படும் இதன் மிகவும் புகழ்பெற்ற முழக்கம் "இசுலாமே தீர்வு" என்பதாகும்.[4]
"முசுலிம் குடும்பம், தனிநபர்,சமூகம் ...மற்றும் நாட்டின் வாழ்வை ஒழுங்குபடுத்தும் ஒரே உய்வுத்துணையாக ..." திருக்குர்ஆன் மற்றும் சுன்னாவை ஆக்குவதே தனது கொள்கையாக சகோதரத்துவம் அறிவித்துள்ளது. இந்த இயக்கம் அலுவல்முறையாக தனது கொள்கைகளை நிலைநாட்ட வன்முறை வழிகளை எதிர்க்கிறது; இருப்பினும் இச்சமூகத்தில் முன்பு படைசார் பிரிவு இருந்ததையும் இனப்படுகொலை, குண்டுவெடிப்புகள் மற்றும் அரசியல் எதிரிகளின் கொலைகளில் இதன் உறுப்பினர்கள் ஈடுபட்டதையும் சுட்டி இதன் எதிர்ப்பாளர்கள் இதனை ஓர் வன்முறை இயக்கமாக விவரிக்கின்றனர். குறிப்பாக இந்தச் சமூகத்தை நிறுவிய ஹசன் அல்-பன்னா மற்றும் எகிப்திய பிரதமர் மகமது அன்-நுக்ராஷி பாஷா கொலை செய்யப்பட்டதைச் சுட்டுகின்றனர்.[4][5] அதே நேரம் ஆயுதமேந்திய ஜிகாத்தை விட மக்களாட்சித் தேர்தல்களை ஆதரிப்பதற்காக இந்த இயக்கத்தை அல் காயிதா எதிர்க்கிறது.
முசுலிம் சகோதரத்துவம் துவக்கத்தில் இசுலாமை கற்பித்தும் கல்வி புகட்டியும் மருத்துவமனைகளை நிறுவியும் வணிக வளாகங்களை நிறுவியும் ஓர் சமய சமூக அமைப்பாக விளங்கியது. செல்வாக்குப் பெறத் தொடங்கியவுடன் 1936இல் எகிப்தில் பிரித்தானிய ஆட்சியை எதிர்த்தது.[6] இந்த காலகட்டத்தில் சகோதரத்துவ உறுப்பினர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.[7] முதல் அரபு-இசுரேல் போரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து எகிப்திய அரசு இச்சமூகத்தை கலைத்து இதன் உறுப்பினர்களைக் கைது செய்தது.[6] 1952ஆம் ஆண்டு நிகழ்ந்த எகிப்து புரட்சியை ஆதரித்தது. ஆனால் எகிப்தின் குடியரசுத் தலைவரைக் கொலை செய்ய முயன்றதால் மீண்டும் தடை செய்யப்பட்டது.[8] மற்ற நாடுகளிலும், குறிப்பாக சிரியாவில், முசுலிம் சகோதரத்துவம் தடை செய்யப்பட்டுள்ளது.[9]
முசுலிம் சகோதரத்துவ உறுப்பினர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியைச் சமூகத்திற்கு வழங்க கடமைப்பட்டுள்ளனர். இந்தப் பங்களிப்புகளில் சவூதி அரேபியா மற்றும் பிற எண்ணெய்-வள நாடுகளில் பணியாற்றும் உறுப்பினர்களிடமிருந்து பெறப்படுவதும் அடக்கம் .[10]
Dreyfuss, Robert (2006). Devil's Game: How the United States Helped Unleash Fundamentalist Islam. Owl Books. ISBN978-0-8050-7652-3.
Mallmann, Klaus-Michael and Martin Cüppers (2006) Halbmond und Hakenkreuz: Das 'Dritte Reich', die Araber und Palästina Wissenschaftliche Buchgesellschaft, Darmstadt. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-3-534-19729-3
Mayer, Thomas (1982) "The Military Force of Islam: The Society of the Muslim Brethren and the Palestine Question, 1945–1948" In Kedourie, Elie and Haim, Sylvia G. (1982) Zionism and Arabism in Palestine and Israel Frank Cass, London, pp. 100–117, பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-7146-3169-8