முதலாம் சுலைமான்
முதலாம் சுலைமான், ஓட்டோமான் பேரரசின் பத்தாவது சுல்தானும், அப் பேரரசில் மிக நீண்டகாலம் ஆட்சியில் இருந்தவரும் ஆவார். இவர் கிபி 1520 ஆம் ஆண்டில் இருந்து 1566 இல் அவர் இறக்கும்வரை ஆட்சி நடத்தினார். மேலை நாடுகளில் இவர் "பெருஞ் சிறப்புப்பெற்ற சுலைமான்" என்றும், ஓட்டோமான் பேரரசின் சட்ட முறைமையை முற்றாக மாற்றியமைத்தவர் என்ற வகையில் கீழை நாடுகளில் "சட்டவாக்குனர்" என்ற பொருள்படும்படியும் அழைக்கப்படுகிறார். சுலைமான் 16 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவில் முன்னணிப் பேரரசராக இருந்ததுடன், ஓட்டோமான் பேரரசு படைத்துறை, அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் அதன் மிக உயர்ந்த நிலையில் இருந்தபோது அதனை வழி நடத்தினார். இவர் ஓட்டோமான் படைகளுக்குத் தானே தலைமை தாங்கிச் சென்று கிறித்தவர்களின் பலம் வாய்ந்த இடங்களான பெல்கிரேட், ரோட்சு, அங்கேரியின் பெரும் பகுதி ஆகியவற்றைக் கைப்பற்றினார். எனினும் 1529ல் வியன்னாவில் இவரது படைகளின் முன்னேற்றம் தடுக்கப்பட்டது. பாரசீகருடன் ஏற்பட்ட பிணக்குகளின் பின்னர் இவர், மையக் கிழக்கின் பெரும்பாலான பகுதிகளையும் ஓட்டோமான் பேரரசுடன் இணைத்துக்கொண்டார். வட ஆப்பிரிக்காவிலும் மேற்கே அல்சீரியா வரையிலான பெரும் பகுதிகளை அவர் கைப்பற்றினார். இவரது ஆட்சியின் கீழ், ஓட்டோமான் கப்பல்கள் நடுநிலக்கடல், செங்கடல், பாரசீகக் குடா ஆகிய பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தன. |
Portal di Ensiklopedia Dunia