ரால்ப் வால்டோ எமேர்சன் (Ralph Waldo Emerson ) (மே 25, 1803 – ஏப்பிரல் 27, 1882) என்பவர் ஐக்கிய அமெரிக்க நாடுகளைச் சார்ந்த எழுத்தாளராகவும், சொற்பொழிவாளராகவும், கவிஞராகவும் விளங்கி, 19ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் "கடப்புவாதம்" (Transcendentalism) என்னும் கொள்கையை முன்னெடுத்துச் சென்ற அறிஞர் ஆவார்.
அவர் தனிமனிதவாத ஆதரவாளராகவும், சமூகத்தில் நெருக்கடி கொணர்கின்ற காரணிகளை விமர்சிக்கும் முன்னறிவு கொண்டவராகவும் போற்றப்படுகிறார். அவர் தம் சிந்தனைகளை எண்ணிறந்த கட்டுரைகள் வழியாகவும், ஐக்கிய அமெரிக்கா நாடெங்கும் வழங்கிய சொற்பொழிவுகள் வழியாகவும் வெளியிட்டுள்ளார்.
கட்டுரைகளும் பேருரைகளும்
எமேர்சன் சம கால சமய நம்பிக்கைகள், சமூகக் கருத்துகள் ஆகியவற்றிலிருந்து படிப்படியாக விலகிச் சென்றார். 1836இல் "இயற்கை" (Nature) என்ற தலைப்பில் அவர் ஒரு கட்டுரை வெளியிட்டார். அதில் அவர் "கடப்புவாதம்" (Transcendentalism) என்ற தமது மெய்யியல் கொள்கையை முன்வைத்தார்.
புகழ்மிக்க அந்தக் கட்டுரை வெளியீட்டுக்குப் பின் எமேர்சன் 1837இல் "அமெரிக்க அறிஞர்" (The American Scholar) என்ற தலைப்பில் ஒரு பேருரை ஆற்றினார். அவ்வுரை பற்றி விமர்சித்த ஆலிவர் வெண்டெல் ஹோம்சு என்பவர், அதை "அறிவுசார்ந்த விடுதலை முழக்கம்" என்று விவரித்துள்ளார்.[1]
எமேர்சன் வெளியிட்ட முக்கிய கட்டுரைகள் முதலில் பேருரைகளாக வழங்கப்பட்டவை. பின்னர் எமேர்சன் அவற்றை மறுபார்வை செய்து அச்சுக்கு அனுப்பினார். அவர் வெளியிட்ட கட்டுரைத் தொகுப்பின் முதல் பகுதியும் இரண்டாம் பகுதியும் அவருடைய சிந்தனைகளின் மையக் கருத்துகளை உள்ளடக்கி இருக்கின்றன. அவை முறையே 1841, 1844 ஆண்டுகளில் வெளியாயின. அக்கட்டுரைத் தொகுப்புகளில் அவர் எழுதிய "தற்சார்பு" (Self-Reliance), "மேல்-ஆன்மா" (The Over-Soul), "வட்டங்கள்" (Circles), "கவிஞன்" (The Poet), "அனுபவம்" (Experience) போன்ற கட்டுரைகள் அடங்கியுள்ளன.
மையக் கொள்கைகள்
"இயற்கை" (Nature) என்னும் கட்டுரையும் மேலே குறிப்பிட்ட கட்டுரைகளும் 1830களின் நடுப்பகுதியில் இருந்து 1840களின் நடுப்பகுதிவரையான காலகட்டத்தில் வெளியானதோடு, எமேர்சனின் எழுத்துவளம் மிக்க காலத்தைச் சார்ந்தவையாகவும் உள்ளன.
எமேர்சன் இறுகிய மெய்யியல் கொள்கைகளை ஏற்காதவர். பல பொருள்கள் பற்றிய சிந்தனைகளை அவர் வழங்கியுள்ளார். அவர் விளக்கும் சில மெய்யியல் கருத்துகளுள் "தனித்துவம்", "சுதந்திரம்", "மனிதர் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்", "ஆன்மாவும் சூழல் உலகும் உறவு கொண்டவை", "பிரபஞ்சம் என்பது இயற்கை மற்றும் ஆன்மாவின் தொகுப்பு" போன்றவை அடங்கும்.
எமேர்சனின் மெய்யியல் சிந்தனைகளை விளங்கிக்கொள்வது கடினம் என்று சம காலத்தவர் கருதினார்கள். அவரது எழுத்துப் பாணியைப் புரிவது இன்றும் கடினம்தான். என்றாலும், அமெரிக்க சிந்தனையாளர்களுள் தலைசிறந்த ஒருவராக எமேர்சன் விளங்குகிறார். அவருக்குப் பின் வந்த பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் அவரிடமிருந்து பலவற்றைக் கற்றுள்ளார்கள்.
எமேர்சனிடம், அவருடைய சிந்தனையின் மையம் என்ன என்று கேட்டபோது அவர், "தனிமனிதன் எல்லையற்ற தன்மையினன் என்பதே எனது மையக் கொள்கை" என்றுரைத்தார்.[2]
1859இல் ரால்ப் வால்டோ எமேர்சன்முதிர் வயதில் எமேர்சன்கொன்கோர்து நகரில் அமைந்துள்ள எமேர்சனின் கல்லறை
Myerson, Joel, Petrolionus, Sandra Herbert, Walls, Laura Dassaw, eds. (2010). The Oxford Handbook of Transcendentalism. New York: Oxford University Press. ISBN0195331036. {{cite book}}: |author= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)