லாக்டிக் அமிலம்
லாக்டிக் அமிலம் (Lactic Acid) என்பது CH3CH(OH)COOH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதனுடைய திண்ம நிலையில் இது வெண்மை நிறத்துடனும் நீரில் கரையக்கூடியதாகவும் உள்ளது. நீர்ம நிலையில் இது நிறமற்றதாக உள்ளது. இயற்கை முறையிலும் செயற்கையாகவும் லாக்டிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. ஒரு ஐதராக்சில் குழுவும் அதற்குப் பக்கத்தில் கார்பாக்சில் குழுவும் இடம்பெற்றிருப்பதால் லாக்டிக் அமிலத்தை ஆல்பா ஐதராக்சி அமிலம் என வகைப்படுத்துகிறார்கள். இதனுடைய இணை காரமாகக் கருதப்படும் லாக்டேட்டு பல்வேறு உயிர்வேதியியல் செயல்முறைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கரைசலில் கார்பாக்சில் குழுவிலிருந்து ஒரு புரோட்டானை இது அயனியாக்கி லாக்டேட்டு அயனியை CH3CH(OH)CO−2 உருவாக்குகிறது. அசிட்டிக் அமிலத்துடன் ஒப்பிடுகையில் லாக்டிக் அமிலத்தின் pKa மதிப்பு ஓர் அலகு குறைவாகும். இதன் பொருள் அசிட்டிக் அமிலத்தைக் காட்டிலும் லாக்டிக் அமிலம் பத்து முறை அதிகமாக புரோட்டான் நீக்கம் செய்கிறது. α- ஐதராக்சில் மற்றும் கார்பாக்சிலேட்டு குழுக்களுக்கு இடையிலான மூலக்கூற்றிடை ஐதரசன் பிணைப்பு காரணமாக உயர் அமிலத்தன்மை உண்டாகிறது. லாக்டிக் அமிலம் சமச்சீர்மையுடன் காணப்படுகிறது. இரண்டு ஒளியியல் மாற்றியங்க்களைக் கொண்டுள்ளது. L-(+)-லாக்டிக் அமிலம் அல்லது (S)-லாக்டிக் அமிலம் மற்றும் இதனுடைய ஆடி மாற்றியன்களான D-(−)-லாக்டிக் அமிலம் அல்லது (R)-லாக்டிக் அமிலம் என்பன அவ்விரண்டுமாகும். இவ்விரண்டு மாற்றியங்களின் சம அளவு கலவை DL-லாக்டிக் அமிலம், அல்லது சுழிமாய் லாக்டிக் அமிலம் எனப்படுகிறது. லாக்டிக் அமிலம் நீருறிஞ்ச்சும் தன்மை கொண்டது ஆகும். எத்தனாலுடன் அதனுடைய உருகு நிலைக்கும் சற்று அதிகமான வெப்ப நிலையில் 17 அல்லது 18 பாகை செல்சியசு வெப்பனிலையில் கலக்கிறது. D-லாக்டிக் அமிலம் மற்றும் L-லாக்டிக் அமிலம் இரண்டும் உயர் உருகு நிலை கொண்டிருக்கின்றன. விலங்குகளில் லாக்டேட்டு டி ஐதரசனேசு நொதி வழியாக பைருவேட்டிலிருந்து நிலையாக எல்-லாக்டேட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. சாதாரணமான வளர்ச்சிதை மாற்ற செயல்முறையின் போது நிகழும் நொதித்தல் செயல்முறையிலேயே இந்த உற்பத்தி நிகழ்கிறது. லாக்டேட்டு வெளியேற்றப்படும் வீதத்தைக் காட்டிலும் லாக்டேட்டு உற்பத்தி வீதம் அதிகரித்தாலொழிய இதன் அடர்த்தி அதிகரிக்காது. பல்வேறு காரணிகள் இதை முறைப்படுத்துகின்றன. மோனோகார்பாக்சிலேட்டு இடமாற்றிகள், அடர்த்தி மற்றும் லாக்டேட்டு டி ஐதரசனேசு நொதியின் ஓரினவடிவம் மற்றும் திசுக்களின் ஆக்சிசனேற்ற திறன் உள்ளிட்டவை இக்காரணிகளில் அடங்கும். பொதுவாக ஓய்வு நேரத்தில் இரத்தத்தில் லாக்டேட்டு அளவு 1-2 மில்லிமோல்/லிட்டர் ஆகும். இது தீவிர உழைப்பின்போது 20 மில்லிமோல்/லிட்டர் ஆகவும் [3] அதற்கும் மேற்பட்ட கடும் உழைப்பெனில் 25 மில்லிமோல்/லிட்டர் ஆகவும் இருக்கும்[4] தொழிற்சாலைகளில் லாக்டிக் அமில பாக்டிரியாக்கள் லாக்டிக் அமில நொதித்தல் செயல்முறையை மேற்கொள்கின்றன. குளுக்கோசு, பிரக்டோசு அல்லது காலக்டோசு உள்ளிட்ட எளிய கார்போவைதரேட்டுகளை இவை லாக்டிக் அமிலமாக மாற்றுகின்றன. இந்த பாக்டிரியாக்கள் வாய் பகுதியிலும் வளர்கின்றன. இவை உற்பத்தி செய்யும் அமிலத்தன்மை பற் சொத்தைக்கு காரணமாகிறது[5][6][7][8]. லாக்டேட்டு ஏற்றப்பட்ட லாக்டேட் ரிங்கர் கரைசல் மற்றும் ஆர்ட்மானின் கரைசல் ஆகியவற்றின் பகுதிப் பொருள்களில் லாக்டேட்டும் ஒரு முக்கிய கூறாகும். நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிற இக்கரைசல்களில் சோடியம் மற்றும் பொட்டாசியம் நேர்மின் அயனிகளும் லாக்டேட்டு மற்றும் குளோரைடு போன்ற எதிர்மின் அயனிகளும் காய்ச்சி வடிகட்டிய நீரில் கரைக்கப்பட்டுள்ளன. பொதுவாக மனித இரத்தத்துடன் சம அழுத்தம் கொண்ட இக்கரைசல்கள். விபத்துக் காயம், அறுவை சிகிச்சை, அல்லது தீவிபத்து ஆகியவற்றின் காரணமாக ஏற்படும் இரத்த இழப்புக்குப் பிறகான சிகிச்சையில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia