லைகோ
![]() லைகோ (LIGO) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் சீரொளி குறுக்கீட்டுமானி ஈர்ப்பலை ஆய்வகம் (Laser Interferometer Gravitational-wave Observatory) ஈர்ப்பு அலைகளை கண்டறிவதற்காக நிறுவப்பட்ட இயற்பியல் சோதனைமுறை அமைப்பாகும். 1992இல் கால்டெக்கின் கிப் தோர்னும் ரோனால்டு திரெவரும் எம்.ஐ.டியின் இரெய்னர் வெய்சும் இணைந்து நிறுவிய லைகோ கூட்டிணைவுத் திட்டத்தில் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம், கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம், மற்றும் பல கல்லூரி, பல்கலைக்கழகங்களின் அறிவியலாளர்கள் பங்கேற்றனர்.[1][2] இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள அறிவியலாளர்களையும் ஈர்ப்பு அலை வானியல் தரவுகளையும் லைகோ அறிவியல் கூட்டிணைவு ஒருங்கிணைக்கின்றது. இத்திட்டத்தில் உலகமெங்கிருந்தும் 900 அறிவியலாளர்களும் 44'000 செயற்பாட்டிலிருந்த ஐன்ஸ்டைன்@ஓம் பயனாளர்களும் பங்கேற்றனர்.[3][4] இத்திட்டம் முப்பரிமாண ஈர்ப்பலை உணர்கருவிகளை இயக்குகின்றது; இத்தகைய கருவிகள் இரண்டு ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்கில் உள்ள வாசிங்டன் மாநிலத்தில் ஹான்ஃபோர்டிலும் மற்றொன்று அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள லூசியானா மாநிலத்தில் லிவிங்சுட்டனிலும் நிறுவப்பட்டுள்ளன. தற்போது இவை மேம்படுத்தப்பட்டு மேம்பட்ட லைகோ (Advanced LIGO) எனப்படுகின்றன. பெப்ரவரி 11, 2016இல் லிகோ அறிவியல் கூட்டிணைவின் 1012 அறிவியலாளர்களும் இத்தாலியின் விர்கோ குறுக்கீட்டுமானி கூட்டிணைவும் இணைந்து ஈர்ப்பு அலையைக் கண்டறிந்ததை ஆய்வுரையாக வெளியிட்டனர்; 14 செப்டம்பர் 2015 அன்று ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் 09.51க்கு புவியிலிருந்து 1.3 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள இரண்டு ~30 சூரியத் திணிவுள்ள கருந்துளைகள் இணைந்ததால் ஏற்பட்ட சமிக்ஞைகளிலிருந்து ஈர்ப்பு அலைகளைக் கண்டறிந்தனர்.[5][6][7] லைகோ இந்தியாலைகோ-இந்தியா உலகளாவிய மேம்பட்ட ஈர்ப்பலை ஆய்வகங்களில் ஒன்றை இந்தியாவில் நிறுவுவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டமாகும். இது இந்தியா, அமெரிக்கா அறிவியலாளர்களிடையே இத்திட்டத்தை ஒருங்கிணைக்கும்.[8] இத்திட்ட முன்மொழிவின்படி ஹான்ஃபோர்டிலுள்ள இரு உணர்கருவிகளில் ஒன்றை இந்தியாவிற்கு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. காந்திநகரிலுள்ள பிளாஸ்மா ஆய்வுக்கழகம் (IPR), புனேயிலுள்ள பல்கலைக்கழகங்களிடையேயான வானியல் மற்றும் வானியற்பியல் மையம் (IUCAA), மற்றும் இந்தூரிலுள்ள ராசா ராமண்ணா மேம்பட்டத் தொழினுட்பத்திற்கான மையம் முதன்மை நிறுவனங்களாகப் பங்கேற்கின்றன. இந்த ஆய்வகபணியின் மூலம் இந்தியா உலகிலேயே ஈர்ப்பலை ஆய்வகம் ஏற்படுத்தும் மூன்றாவது நாடாக திகழும்.[9] மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia