வலந்தீனா தெரெசுக்கோவா
வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா (Valentina Vladimirovna Tereshkova; உருசியம்: Валентина Владимировна Терешкова; பிறப்பு: 6 மார்ச் 1937), என்பவர் சோவியத் ஒன்றியத்தின் ஓய்வுபெற்ற விண்வெளி வீராங்கனையும் முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண்ணும் ஆவார். இவர் வசுத்தோக்கு 6 விண்கலத்தில் 1963 சூன் 16 அன்று விண்வெளிக்குச் சென்று அங்கு மூன்று நாள்களுக்குச் சற்றுக் குறைவாகத் தங்கியிருந்து வெற்றிகரமாகத் திரும்பினார்.[1] 1961ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த யூரி ககாரின் மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மாந்தர் என்ற பெருமையைப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாகப் பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத்து ஒன்றியம் முடிவு செய்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதிக் கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். மிகக்கடினமான பயிற்சிகளுக்குப் பிறகு 25 வயதான வலண்டீனா தெரெசுக்கோவா தெரிவு செய்யப்பட்டார். வத்தோக்கு-6 என்ற விண்கலம் வலண்டீனாவை ஏற்றிக்கொண்டு 1963 சூலை 16ஆம் நாள் வானத்தை நோக்கிப் புறப்பட்டது. இவர் பூமிப்பந்தைச் சுற்றி 48 முறைகள், 70 மணி நேரம் 50 நிமிடங்கள் விண்வெளியில் வலம் வந்தார். விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும், அதிக நேரம் விண்வெளியில் தங்கியிருந்த விண்வெளி வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.[2][3][4] சூன் 19ஆம் நாள் விண்கலம் பூமிநோக்கிப் பாய்ந்து வந்தபோது, தரையிறங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து, பாதுகாப்பாக இறங்கினார்.[5] ‘சோவியத் ஒன்றியத்தின் வீராங்கனை’ என்ற பதக்கத்துடன் ‘இலெனின் விருது’, வேறு பல விருதுகள் எனக் குவிந்தன.[6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia