விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2025
ஈழப்போரில் கிழக்குப் போர்முனை என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கிழக்கு திருக்கோணமலை மாவட்டத்தில் நெல்வயல்களுக்கான நீர் விநியோகத்தை புலிகள் துண்டித்ததைக் காரணமாக கொண்டு 2006, யூலை, 21 அன்று மோதலாக துவங்கியது. ஏறக்குறைய ஓராண்டு சண்டைக்குப் பிறகு, 2007, யூலை, 11 குடும்பிமலையை (பரோனின் தொப்பி) கைப்பற்றிய பின்னர் கிழக்கு மாகாணத்தின் முழு கட்டுப்பாடும் தங்கள் வசம் வந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. இச்சமயத்தில் சம்பூர், வாகரை, கஞ்சிகுடிச்சாறு, கொக்கடிச்சுளாய், குடும்பிமலை ஆகிய இடங்களில் பெரும் போர்கள் நடந்தன. இராணுவம் மற்றும் பொதுமக்கள் இறப்புகள் இருபுறமும் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தன. மேலும்... அமெரிக்க ஐக்கிய நாடுகள் அல்லது அமெரிக்கா என்பது முதன்மையாக வட அமெரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இது 50 மாநிலங்களையும், ஒரு கூட்டமைப்பு மாவட்டத்தையும், ஐந்து முதன்மையான ஒன்றிணைக்கப்படாத நிலப்பரப்புகளையும் மற்றும் ஒன்பது சிறிய வெளிப்புறத் தீவுகளையும் உள்ளடக்கியுள்ளது. தொல்குடி அமெரிக்கர்களுக்காக ஒதுக்கப்பட்ட 326 பகுதிகளையும் இது உள்ளடக்கியுள்ளது. நிலப்பரப்பளவு மற்றும் மொத்தப் பரப்பளவு ஆகிய இரு அளவுகளின் அடிப்படையிலும் அமெரிக்காவானது உலகின் மூன்றாவது மிகப் பெரிய நாடாகத் திகழ்கிறது. மேலும்...
கேரளம் என்பது இந்தியாவின் மலபார் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும். 1956 மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் முறையைப் பின்பற்றி 1956 நவம்பர் 1 அன்று இது உருவாக்கப்பட்டது. கொச்சி, மலபார், தென் கன்னட மாவட்டம் மற்றும் திருவாங்கூரின் அப்போதைய பகுதிகளின் மலையாளம் பேசிய பகுதிகளை இணைத்து இது உருவாக்கப்பட்டது. 38,863 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன், 21-ஆவது மிகப் பெரிய இந்திய மாநிலமாக கேரளம் உள்ளது. இதற்கு வடக்கு, வடகிழக்கே கருநாடகமும், கிழக்கு, தெற்கே தமிழ்நாடும், மேற்கே இலட்சத்தீவுக் கடலும் எல்லைகளாக உள்ளன. மேலும்... டேனியக் கோட்டை என்பது தமிழ்நாட்டின் தரங்கம்பாடியில், வங்கக் கடலை ஒட்டியுள்ள ஒரு டென்மார்க் நாட்டவர்களின் கோட்டையாகும். இக்கோட்டை தஞ்சை அரசரான இரகுநாத நாயக்கருடன் டென்மார்க்கு அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்ய்யப்பட்டு பொ.ஊ. 1620 இல் கட்டப்பட்டது. இந்தக் கோட்டையே டென்மார்க்கர்களின் கோட்டைகளில் இரண்டாவது பெரிய கோட்டையாகும். இக்கோட்டை தரங்கம்பாடியோடு 1845 ஆண்டில் பிரித்தானியருக்கு விற்கப்பட்டது. அதன் பிறகு இந்த ஊரும் இக்கோட்டையும் தம் சிறப்பை இழந்தன. இந்தியா விடுதலையான 1947-க்குப் பின்னர் 1978 வரை இக்கோட்டை தமிழ்நாட்டு அரசால் ஆய்வு மாளிகையாகப் பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு தமிழக தொல்லியல் துறையின் கட்டு்ப்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது அகழ் வைப்பகம் என்னும் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. மேலும்... இந்தித் திணிப்பு என்பது மொழி மேலாதிக்கத்தின் ஒரு வடிவமாகும். இதில் இந்தியைப் பிராந்திய மொழியாகக் கொண்டிராத அல்லது பயன்படுத்த விரும்பாத இந்திய மாநிலங்களில் இந்தியைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற அழுத்தம் உருவாக்கப்படுகிறது. இந்தச் சொல் தமிழ்நாட்டின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களில் வேரூன்றியது. மதராஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் இந்தி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டபோது அது ஒரு சிக்கலாக மாறியது. மேலும்... உருசியா என்பது கிழக்கு ஐரோப்பா மற்றும் வடக்கு ஆசியாவில் பரவியிருக்கும் ஒரு நாடு ஆகும். பரப்பளவில் உலகின் மிகப் பெரிய நாடு இது தான். இது 11 நேர வலயங்களுக்கு விரிவடைந்தும், 14 நாடுகளுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொண்டும் உள்ளது. உலகின் ஒன்பதாவது மிக அதிக மக்கள் தொகையுடைய நாடும், ஐரோப்பாவின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடும் இதுவாகும். உருசியா அதிக அளவு நகரமயமாக்கப்பட்ட ஒரு நாடாகும். 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட 16 மக்கள் தொகை மையங்களை இது உள்ளடக்கியுள்ளது. மாஸ்கோ இதன் தலைநகரமும், மிகப் பெரிய நகரமும் ஆகும். சென் பீட்டர்சுபெர்கு உருசியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமும், இதன் பண்பாட்டுத் தலைநகரமும் ஆகும். மேலும்... குப்தப் பேரரசு என்பது ஒரு பண்டைக் கால இந்தியப் பேரரசு ஆகும். இது அதன் உச்சபட்ச நிலையின் போது, தோராயமாக பொ.ஊ. 319 முதல் 467 வரை, பெரும்பாலான இந்தியத் துணைக்கண்டத்தை உள்ளடக்கியிருந்தது. பிற வரலாற்றாளர்கள் இதன் பின்னர் வரும் இயல்பாக்கத்தை விவாதத்திற்கு உள்ளாக்குகின்ற போதிலும், சில வரலாற்றாளர்களால் இக்காலமானது இந்தியாவின் பொற்காலம் என்று கருதப்படுகிறது. பேரரசின் ஆட்சி புரிந்த அரசமரபானது குப்தரால் நிறுவப்பட்டது. அரசமரபின் மிகுந்த குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களாக முதலாம் சந்திரகுப்தர், சமுத்திரகுப்தர், இரண்டாம் சந்திரகுப்தர் மற்றும் ஸ்கந்தகுப்தர் ஆகியோர் திகழ்ந்தனர். மேலும்... சுபான்சூ சுக்லா இந்திய விமானப்படையின் பரிசோதனை விமானியாவார். மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட நான்கு விண்வெளி வீரர்களில் ஒருவர். அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயணச் சேவைகள் நிறுவனமான ஆக்சிம் விண்வெளி நிறுவனத்தின் ஆக்சிம்-4 திட்டத்தின் கீழ் 2025 மே மாதத்தில் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்குப் பயணம் செய்ய உள்ளார். மேலும்...
சீனா கிழக்காசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அதிகாரபூர்வமாக சீன மக்கள் குடியரசு என்று அழைக்கப்படுகிறது. 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் இந்தியாவுக்குப் பிறகு உலகின் இரண்டாவது மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இதுவாகும். ஐந்து நேர வலயங்களுக்குச் சமமாக சீனா விரிவடைந்துள்ளது. 14 நாடுகளுடன் நில எல்லைகளைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 96 இலட்சம் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவுடன் மொத்த நிலப்பரப்பளவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய நாடு இதுவாகும். இந்நாடானது 33 மாகாண நிலைப் பிரிவுகள், 22 மாகாணங்கள், ஐந்து சுயாட்சிப் பகுதிகள், நான்கு மாநகராட்சிகள் மற்றும் இரண்டு பகுதியளவு சுயாட்சியுடைய சிறப்பு நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பெய்சிங் இந்நாட்டின் தலைநகரம் ஆகும். மேலும்... சர்வோதயக் கல்வி என்பது அறிவும் உழைப்பும் தனித்தனியானவை அல்ல என்பதைக் கூறும் ஒரு கொள்கையாகும். இந்தக் கல்வியியல் கொள்கையின் அடிப்படையில் அதே பெயரில் ஒரு கல்விப் பாடத்திட்டத்தை மகாத்மா காந்தி ஊக்குவித்தார். இந்தச் சொற்றொடர் 'அனைவருக்கும் அடிப்படைக் கல்வி' என மொழிபெயர்க்கப்படுகிறது. இது ஆங்கிலக் கல்வி முறை, காலனித்துவத்துடன் காந்திக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்து உருவாக்கப்பட்டது. காந்தியக் கல்வி முறையானது குழந்தைகள் தங்கள் கைவண்ணத்தையும் கற்பனைத் திறனையும் காட்டும் தொழில் பட்டறைகளை அறிமுகம் செய்யும் கல்வியாக இருந்தது. மேலும்... சிங்கப்பூர் என்பது தென்கிழக்காசியாவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடும் நகர அரசும் ஆகும். சிங்கப்பூர் அதன் தொடக்க கால வரலாற்றில் துமாசிக் என்று அறியப்பட்டது. அந்தக் கட்டத்தில் சிங்கப்பூர் ஒரு கடல்சார் வணிக மையமாகத் திகழ்ந்தது. இதன் சமகால வரலாறு 1819 இல் தொடங்குகிறது. இசுடாம்போர்டு இராஃபிள்சு பிரித்தானியப் பேரரசிற்குச் சொந்தமாக ஒரு வணிகப் பணியிடமாகச் சிங்கப்பூரை நிறுவினார். 1867-இல் சிங்கப்பூர், நீரிணைக் குடியேற்றங்களின் ஒரு பகுதியாக, பிரித்தானியாவின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1959-இல் சிங்கப்பூர் சுயாட்சி பெற்றது. 1963-இல் மலாயா, வடக்கு போர்னியோ மற்றும் சரவாக் ஆகியவற்றுடன் இணைந்து மலேசியாவின் ஒரு புதிய கூட்டமைப்பின் ஒரு பகுதியாக உருவானது. 1965-ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஒரு சுதந்திரமான இறையாண்மையுள்ள நாடாக உருவானது. மேலும்... குத்புத்தீன் ஐபக் என்பவர் கோரி சுல்தான் முகம்மது கோரியின் ஒரு தளபதி ஆவார். 1206-இல் முகம்மது கோரியின் அரசியல் கொலைக்குப் பிறகு இவர் தில்லி சுல்தானகத்தை (1206–1526) நிறுவி, மம்லூக் அரசமரபைத் தொடங்கினார். இது சுல்தானகத்தை 1290 வரை ஆண்டது. தில்லியில் குதுப் மினாரைக் கட்டும் பணியைத் தொடங்கி வைத்ததற்காக ஐபக் அறியப்படுகிறார். 1192-இல் இரண்டாம் தரைன் போரில் கோரி வெற்றிக்குப் பிறகு இந்திய நிலப்பரப்புக்கு பொறுப்பாளராக ஐபக்கை முகம்மது கோரி நியமித்தார். முகம்மது கோரியின் இறப்பிற்குப் பிறகு வடமேற்கு இந்தியாவில் கோரி நிலப்பரப்புகளின் கட்டுப்பாட்டுக்காக மற்றொரு முன்னாள் அடிமை தளபதியான தாசல்தீன் இல்திசுவுடன் ஐபக் சண்டையிட்டு, தன்னுடைய தலைநகரை லாகூரில் அமைத்தார். முகம்மது கோரிக்கு பின் பதவிக்கு வந்த கியாசுதீன் மகுமூது, இந்தியாவின் ஆட்சியாளராக ஐபக்கை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தார். மேலும்... இந்தியா என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். உலகில் பரப்பளவு அடிப்படையில் ஏழாவது மிகப் பெரிய நாடும், மக்கள் தொகையின் அடிப்படையில் முதலாமிடத்தைக் கொண்ட நாடும் இதுவாகும். இதற்குத் தெற்கே இந்தியப் பெருங்கடலும், தென் மேற்கே அரபிக்கடலும், தென் கிழக்கே வங்காள விரிகுடாவும் சூழ்ந்துள்ளன. இந்தியாவின் மேற்கே பாக்கித்தான், வடக்கே சீனா, நேபாளம் மற்றும் பூட்டான், கிழக்கே வங்காளதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகள் நில எல்லைகளைப் பகிர்கின்றன. இந்தியப் பெருங்கடலில் இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு அருகில் இந்தியா அமைந்துள்ளது. இந்தியாவின் ஒரு பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளானவை தாய்லாந்து, மியான்மர் மற்றும் இந்தோனேசியாவுடன் ஒரு கடல் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.மேலும்... பாண்டிய நாட்டின் மீது மாலிக் கபூரின் படையெடுப்பு - 1310-1311 காலப்பகுதியில், தில்லி சுல்தானகத்தின் ஆட்சியாளர் அலாவுதீன் கில்சி தன் தலைமைப் படைத்தலைவர் மாலிக் கபூர் தலைமையிலான படைகளை இந்திய துணைக்கண்டத்தின் தெற்கே உள்ள நாடுகளைக் கைப்பற்ற அனுப்பினார். போசளர்களை அடிமைப்படுத்திய பின்னர், மாலிக் கபூர் இன்றைய தமிழ்நாட்டின் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தார். இதற்கு பாண்டிய சகோதரர்களான வீரபாண்டியனுக்கும், சுந்தரபாண்டியனுக்கும் இடையிலான அரசுரிமைப் போரைப் பயன்படுத்திக் கொண்டார். 1311 மார்ச்-ஏப்ரல் காலக்கட்டத்தில், பாண்டிய நாட்டில் அவர்களின் தலைநகர் மதுரை உட்பட பல இடங்களில் திடீர்த்தாக்குதல் நடத்தினார். தில்லி சுல்தானகத்துக்கு அடங்கிய ஆட்சியாளராக பாண்டிய மன்னரை அவரால் மாற்ற முடியவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து யானைகள், குதிரைகள், தங்கம், விலைமதிப்பற்ற கற்கள் உட்பட பெரிய கொள்ளை பொருட்களைப் பெற்றார். மேலும்... மௌரியப் பேரரசு என்பது மகதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியத் துணைக்கண்டத்தில் விரிவடைந்திருந்த ஒரு வரலாற்றுச் சக்தியாகும். இது பொ.ஊ.மு. 322-இல் சந்திரகுப்த மௌரியரால் நிறுவப்பட்டு, பொ.ஊ.மு. 185 வரை நீடித்திருந்தது. சிந்து-கங்கைச் சமவெளியை வென்றதன் மூலம் மௌரியப் பேரரசானது மையப்படுத்தப்பட்டது. இதன் தலைநகரம் பாடலிபுத்திரத்தில் அமைந்திருந்தது. அசோகரின் ஆட்சியின் போது பேரரசானது குறுகிய காலத்திற்கு இந்தியத் துணைக் கண்டத்தின் முக்கிய நகர மையங்களையும் நெடுஞ்சாலைக் குடியிருப்புகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தொலைதூரத் தென்னிந்தியாவில் இருந்த பகுதிகள் தவிர மற்றப் பகுதிகளைக் கட்டுப்படுத்தியது. அசோகரின் ஆட்சிக் காலம் முடிந்து ஏறத்தாழ 50 ஆண்டுகள் கழித்து இது வீழ்ச்சியடையத் தொடங்கியது. பிரகத்ரதரைப் புஷ்யமித்திர சுங்கன் அரசியல் கொலை செய்து மகதத்தில் சுங்கப் பேரரசை நிறுவியதற்குப் பிறகு பொ.ஊ.மு. 185இல் இப்பேரரசு கலைக்கப்பட்டது. மேலும்... கையசு சூலியசு சீசர் (100 பொ.ஊ.மு.–44 பொ.ஊ.மு.) என்பவர் ஓர் உரோமானியத் தளபதியும் அரசியல் மேதையும் ஆவார். இவர் கௌல் போர்களில் உரோமானிய இராணுவத்திற்குத் தலைமை தாங்கினார். பிறகு தன் அரசியல் எதிரி பாம்பேயை ஓர் உள்நாட்டுப் போரில் தோற்கடித்தார். இறுதியாக பொ.ஊ.மு. 49-இல் சர்வாதிகாரியானார். பொ. ஊ. மு. 44-இல் அரசியல் கொலை செய்யப்படும் வரை இப்பதவியில் தொடர்ந்தார். உரோமைக் குடியரசின் வீழ்ச்சியிலும் உரோமைப் பேரரசின் வளர்ச்சிக்கும் வழி வகுத்த நிகழ்வுகளில் முக்கிய பங்கை ஆற்றினார். தொடர்ச்சியான இராணுவ வெற்றிகளை கௌல் போர்களில் பெற்றதன் வழியாக உரோமைக் குடியரசில் மிகுந்த சக்தி வாய்ந்த அரசியல்வாதிகளில் ஒருவராக சீசர் வளர்ந்தார். மேலும்... |
Portal di Ensiklopedia Dunia