தமிழ் விக்கிபீடியாவிற்கு 2005ம் ஆண்டு ஒரு அடித்தளமான ஆண்டு. ஆக்க உருவாக்கம், பக்க வடிவமைப்பு, வகைப்படுத்தல், நுட்ப மேம்படுத்தல், மொழிபெயர்ப்பு, நடைமுறை பரிந்துரைகள், பயனர் அறிமுகம் என பல தளங்களில் தமிழ் விக்கிபீடியா வளர்ச்சி கண்டுள்ளது. இவ் ஆண்டு 1000 கட்டுரைகள் என்ற இலக்கு எட்டப்பட்டு, 10 000 கட்டுரைகள் என்ற புதிய இலக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. கட்டுரை எண்ணிக்கைகளை விட தமிழ் விக்கிபீடியாவை பொறுத்தவரை அதன் நடு நிலமை, உலக நோக்கு, தரம், நம்பிக்கை, சமூகம் ஆகியவை முக்கியம் என்பது மிக ஆழமாக உணரப்பட்டுள்ளது. இந்த "2005 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை"யின் நோக்கம் 2005 ஆண்டு செயல்பாடுகளை விபரித்து, 2006 ஆண்டுக்கான ஒரு முன்பார்வையை வைக்கும்படி வேண்டுவதுதான். இவ்வேண்டுகோளை முன்வைக்கும் பொழுது விக்கிபீடியாவின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி, இறுகிய திட்டங்களையோ கட்டமைப்பையோ கொண்டிருப்பதில்லை என்பது சுட்டப்படுகின்றது. இவ்வறிக்கை பயனர்களின் ஒரு பார்வை மட்டுமே. பிற பார்வைகளை விக்கிபீடியா:ஆலமரத்தடி, விக்கிபீடியா பேச்சு:பக்க வகைகளின் கட்டமைப்பு போன்ற பக்கங்களில் பார்க்கலாம். யாரும் எப்பொழுதும் விக்கிபீடியா ஆக்கங்களை மேம்படுத்தலாம் என்பது இவ்வறிக்கைக்கும் பொருந்தும்.
|