வின்ட்சர் கோட்டை
வின்ட்சர் கோட்டையகம் (Windsor Castle) உலகில் வசித்து வருகின்ற கோட்டைகளில் மிகப்பெரிய கோட்டை ஆகும். இது இங்கிலாந்தின் பெர்க்சையரில் வின்ட்சர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இது ஐக்கிய இராச்சியத்தின் அரச குடும்பத்தினரின் பிரதான வசிப்பிடமாக இருந்து வந்துள்ளது. மறைந்த அரசி இரண்டாம் எலிசபெத் ஆண்டின் பெரும்பகுதி இங்குதான் வாழ்ந்துள்ளார். இந்தக் கோட்டையை இங்கிலாந்தின் முதலாம் வில்லியம் கட்டினார். 1992 இல் கோட்டையில் தீ விபத்து ஏற்பட்டது. இக்கோட்டை தேம்சு ஆற்றின் அருகே அமைந்துள்ளது. இது ஆங்கிலக் கவுன்டியான பேர்க்சயரின் வின்சரில் அமைந்துள்ள அரச மனை ஆகும். இங்கிலாந்து, பின்னர் பிரித்தானிய அரச குடும்பத்தினருடன் இவ்வரண்மனை கொண்டுள்ள நீண்ட தொடர்பினாலும், கட்டிடக்கலையாலும் இது குறிப்பிடத் தக்கதாக விளங்குகின்றது. முதல் அரண்மனை 11 ஆம் நூற்றாண்டில், இங்கிலாந்தின் மீதான நார்மன் படையெடுப்புக்குப் பின்னர் வெற்றியாளன் வில்லியம் என அழைக்கப்படும் முதலாம் வில்லியத்தால் கட்டப்பட்டது. முதலாம் என்றியின் காலத்தில் இருந்து இது ஆட்சியில் இருக்கும் அரசர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஐரோப்பாவில் மிக நீண்டகாலம் பயன்பாட்டில் உள்ள அரச மாளிகை என்னும் பெருமையும் இதற்கு உண்டு. இந்த மாளிகையின் பகட்டான அறைகளின் தொகுதி பற்றி விபரித்த கலை வரலாற்றாளரான இயூ ராபர்ட், "ஒரு உயர்வானதும், நிகரில்லாததுமான அறைகளின் தொடர் மிகச் சிறப்பானதும் ஆகக்கூடிய அளவு முழுமையானதுமான பிந்திய ஜார்ஜிய இரசனையின் வெளிப்பாடு என பரவலாகக் கருதப்படுகிறது."[4] என்றார். அரண்மனைச் சுவர்களுக்கு உள்ளே 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சென் ஜார்ஜ் சிற்றாலயம் உள்ளது. வரலாற்றாளர் யோன் மார்ட்டின் ராபின்சனின் கருத்துப்படி இது ஆங்கில நிலைக்குத்து கோதிக் வடிவமைப்பின் உயரிய சாதனை ஆகும்.[5] தொடக்கத்தில், இலண்டனின் புறப் பகுதிகளில் நார்மன்களின் ஆதிக்கத்தைப் பாதுகாக்கவும், தேம்சு ஆற்றின் முக்கிய பகுதியைக் கண்காணிக்கவும் கூடியதாக மண் அரண்களுடனும், பாதுகாப்பு வெளிகளுடனும் வடிவமைக்கப்பட்டது. படிப்படியாகக் கற்சுவர்களாக மாற்றப்பட்ட இதன் அரண்கள், 13 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இடம்பெற்ற முதல் பாரனின் போரின்போது இடப்பட்ட நீண்ட முற்றுகையை வெற்றிகரமாகச் சமாளித்தன. அந்நூற்றாண்டின் நடுப்பகுதியில் மூன்றாம் என்றி ஒரு ஆடம்பர அரச மாளிகையை இதன் சுவர்களுக்குள் கட்டினார். மூன்றாம் எட்வார்டு மேலும் ஒருபடி மேலே சென்று கூடுதலான ஆடம்பரமாக அம்மாளிகையை மீளக் கட்டினார். இது முழு மத்திய காலத்திலும் இங்கிலாந்தில் கட்டப்பட்ட செலவு கூடிய மதச் சார்பற்ற கட்டிடமாக விளங்கியது. எட்வார்டின் மைய வடிவமைப்பு டியூடர் காலம் வரை நிலைத்திருந்தது. அக்காலத்தில், எட்டாம் என்றியும், முதலாம் எலிசபெத்தும் இம்மாளிகையை அரச அவையாகவும், இராசதந்திரக் கேளிக்கைகளுக்கான மையமாகவும் பயன்படுத்தினர். ஆங்கில உள்நாட்டுப் போரின்போது நிலவிய கொந்தளிப்பான சூழ்நிலையிலும் வின்சர் அரண்மனை தப்பிப் பிழைத்தது. அக்காலத்தில் அது நாடாளு மன்றப் படைகளின் இராணுவத் தலைமை இடமாகவும், முதலாம் சார்லசின் சிறையாகவும் பயன்பட்டது. 1660 இல் முடியாட்சி மீள்விக்கப்பட்ட பின்னர், வின்சர் அரண்மனையின் பெரும் பகுதியை இரண்டாம் சார்லசு, கட்டிடக்கலைஞர் இயூ மே என்பவரின் உதவியுடன் மீளக் கட்டினார். இம்மீளமைப்பின்போது, பெருஞ்செலவில் பரோக் பாணியிலான ஒரு தொகுதி உள்ளக அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவை இன்றும் பார்ப்போரைக் கவரக்கூடியவையாக உள்ளன. சிறிது காலப் புறக்கணிப்புக்குப் பின்னர், 18 ஆம் நூற்றாண்டில் மூன்றாம் ஜார்ஜ், நான்காம் ஜார்ஜ் ஆகியோர் இரண்டான் சார்லசின் மாளிகையைப் பெருஞ் செலவில் மீளக் கட்டினர். இதுவே, ரோக்கோக்கோ, கோதிக், பரோக் தளவாடங்கள் நிறைந்த தற்கால அரச அறைத் தொகுதியின் வடிவமைப்பை உருவாக்கியது. அரசி விக்டோரியாவும், அரண்மனையில் சில சிறிய மாற்றங்களைச் செய்தார். அரசி விக்டோரியாவில் ஆட்சிக் காலத்தின் பெரும் பகுதியில் இது ஒரு அரச கேளிக்கை மையமாக விளங்கியது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia