வியட்நாம் சோசலிசக் குடியரசின் அரசுத்தலைவர் (president of the Socialist Republic of Vietnam) என்பவர் வியட்நாமின் தேசிய சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாட்டுத் தலைவர் ஆவார். வியட்நாம் ஒரு கட்சி நாடாக இருப்பதால், பதவிக்கான வேட்பாளர்கள் வியட்நாம் பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழுவால் பரிந்துரைக்கப்படுகிறார்கள். அரசியல் அமைப்பில் வியட்நாம் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளருக்குப் பிறகு, அரசுத்தலைவர் பதவியில் இருப்பவர் பொதுவாக இரண்டாவது-உயர்ந்த பதவியை வகிப்பவராகக் கருதப்படுகிறார்.[2]
நாட்டுத் தலைவராக, அரசுத்தலைவர் உள்நாட்டிலும் பன்னாட்டு அளவிலும் வியட்நாமைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், அத்துடன் தேசிய அரசாங்கத்தின் வழக்கமான மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டினையும் நிலைத்தன்மையையும் பராமரிக்கிறார், நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கிறார்.
அரசுத்தலைவர் தேசிய சட்டமன்றத்தின் பிரதிநிதியாக இருக்க வேண்டும். கூடுதலாக, அரசுத்தலைவர் பாரம்பரியமாக பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும், அரசாயக் குழுவின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழு தேசிய சட்டமன்றத்தின் நிலைக்குழுவிற்கு வேட்பாளர்களைப் பரிந்துரைக்கிறது, பின்னர் தேசிய சட்டமன்றத்தின் அனைத்து பிரதிநிதிகளாலும் அந்த வேட்பாளர்களை அதிகாரப்பூர்வத் தேர்தலுக்கு உறுதிப்படுத்திப் பரிந்துரைக்கிறது.
அரசுத்தலைவர் துணை அரசுத்தலைவர், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் பிற அதிகாரிகளை தேசிய சட்டமன்றத்தின் ஒப்புதலுடன் நியமிக்கிறார். அரசுத்தலைவர் வியட்நாம் மக்கள் ஆயுதப் படைகளின் பெயரளவிலான உச்சத் தளபதியாகவும், தேசியப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் பேரவையின் தலைவராகவும் உள்ளார். கூடுதலாக, அவர் மத்திய இராணுவ ஆணையம், மத்திய காவல்துறைக் கட்சிக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். செப்டம்பர் 2011 முதல், நீதித்துறை சீர்திருத்தத்திற்கான மத்திய வழிகாட்டுதல் குழுவின் தலைவராகவும் உள்ளார்.
அரசுத்தலைவர் பதவியின் அதிகாரங்களும் கௌரவமும் பல ஆண்டுகளாக வேறுபட்டு வருகின்றன. உதாரணமாக, பதவியேற்ற முதலாவது அரசுத்தலைவர் கோ சி மின், பொதுவுடைமைக் கட்சியின் தலைவராகவும் இருந்தபோது, அவர் (அந்த நிலையில்) வியட்நாமின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான அரசாயக்குழுவின் முதல் தரவரிசை உறுப்பினரானார். அவரை அடுத்துப் பதவியேற்ர தொன் தூக் தாங், அரசாயத்தில் உறுப்பினராக இருக்கவில்லை, ஆனால் பொதுச் செயலாளர் இலே துவானின் கீழ் ஒரு குறியீட்டு அதிகாரியாகப் பணியாற்றினார். துரோங் சின் அரசுத்தலைவரானதில் இருந்து, அரசுத்தலைவர் 1வது (ஒரே நேரத்தில் இவரே பொதுச் செயலாளராகப் பணியாற்றியிருந்தால்) அல்லது 2வது இடத்தைப் பிடித்தார்.
அரசுத்தலைவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும், ஒருவர் மூன்று முறை மட்டுமே அரசுத்தலைவராகப் பணியாற்ற முடியும். அவரால் பதவிக் கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், அவர் மீண்டும் கடமையைத் தொடங்கும் வரை அல்லது தேசிய சட்டமன்றத்தால் புதிய அரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கும் வரை இடைக்கால அடிப்படையில் துணைத் தலைவர் அரசுத்தலைவர் பதவி ஏற்பார்.[3]
வோ வான் துரோங் தவறுகள் மற்றும் விதிமுறைகளை மீறியதால் அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகியதால், புதிய அரசுத்தலைவராக தோ லாம் 2024 மே 22 முதல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5]
வியட்நாம் அரசுத்தலைவர்களின் பட்டியல்
பதில் அரசுத்தலைவர் பதவியைக் குறிக்கிறது
வியட்நாம் சனநாயகக் குடியரசு (வடக்கு வியட்நாம், 1945–1976)