வில்லியம் சேக்சுபியர்
வில்லியம் சேக்சுபியர் (William Shakespeare; 26 ஏப்ரல்[b] 1564 – 23 ஏப்ரல் 1616)[c] என்பவர் ஆங்கிலேய நாடகாசிரியர், பாவலர் மற்றும் நடிகர் ஆவார். ஆங்கில மொழி எழுத்தாளர்கள் அனைவரிலும் சிறந்தவராகவும், உலகின் சிறந்த நாடக ஆசிரியராகவும் பரவலாகக் கருதப்படுகிறார்.[2][3][4] இவர் அடிக்கடி இங்கிலாந்தின் தேசியக் கவிஞர், "அவோனின் புலவர்" அல்லது சுருக்கமாகப் "புலவர்" என்று அழைக்கப்படுகிறார்.[5][6] இவரது கூட்டுமுயற்சிகள் உள்ளிட்ட நடப்பிலுள்ள படைப்புகளானவை சுமார் 39 நாடகங்கள்,[d] 154 ஈரேழ் வரிப்பாக்கள், 3 விவரிக்கப்பட்ட நீண்ட கவிதைகள், சில பிற கவிதைகள் மற்றும் ஆசிரியர் யாரென்று உறுதி செய்யப்படாத கவிதைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இவரது நாடகங்கள் கிட்டத்தட்ட முக்கியமான தற்கால மொழிகள் அனைத்திற்கும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, மற்ற எந்த நாடகாசிரியரின் படைப்புகளையும் விட அடிக்கடி நடத்தப்படுகின்றன.[7] விவாதத்திற்குரியதாக இருந்தாலும் ஆங்கில மொழியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளராக இவர் இன்றும் கருதப்படுகிறார். இவரது படைப்புகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகின்றன. மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் படைக்கப்படுகின்றன. சேக்சுபியர் இங்கிலாந்தின் வார்விக்குசையர் மாநிலத்தில் இசுதிராத்போர்டு என்ற இடத்தில் பிறந்தார். அங்கு வளர்க்கப்பட்டார். இவர் தன் 18ஆம் அகவையில் அன்னே கதாவேய் என்ற பெண்ணை மணந்தார். இருவருக்கும் சூசன்னா மற்றும் இரட்டைக் குழந்தைகளான ஆம்னெத் மற்றும் சூடித் ஆகிய 3 பிள்ளைகள் பிறந்தனர். 1585 மற்றும் 1592க்கு இடைப்பட்ட காலத்தில் இவர் இலண்டனில் நடிகர், எழுத்தாளர், மற்றும் பிரபு சாம்பெர்லைனின் ஆட்கள் என்ற நாடக நிறுவனத்தின் பகுதியளவு உரிமையாளராக வெற்றிகரமான தன் நாடக வாழ்க்கையைத் தொடங்கினார். இந்நிறுவனம் பிற்காலத்தில் அரசனின் ஆட்கள் என்று பெயர் பெற்றது. 1613ஆம் ஆண்டின் வாக்கில் தன் 49ஆம் அகவையில் இவர் இசுதிராத்போர்டுக்கு ஓய்வில் சென்றார் எனத் தெரிகிறது. அங்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் இறந்தார். சேக்சுபியரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி சில பதிவுகளே எஞ்சியுள்ளன. இது இவரது உடல் தோற்றம், சமய நம்பிக்கைகள் மற்றும் இவர் படைத்ததாகக் கூறப்பட்டுள்ள படைப்புகள் மற்றவர்களால் எழுதப்பட்டுள்ளனவா என்பது பற்றி பெருமளவிலான ஊகங்களைத் தூண்டியுள்ளது.[8][9][10] சேக்சுபியர் தற்போது அறியப்படும் தன் பெரும்பாலான படைப்புகளை 1589 மற்றும் 1613க்கு இடைப்பட்ட காலத்தில் படைத்தார்.[11][12][e] இவரது ஆரம்பகால நாடகங்கள் முதன்மையாக நகைச்சுவை மற்றும் வரலாற்று நாடகங்களாக இருந்தன. அந்நாடகங்கள் தத்தமது வகைகளின் மிகச் சிறந்த படைப்புகளில் சிலவாகக் கருதப்படுகின்றன. பிறகு இவர் 1608ஆம் ஆண்டு வரை முதன்மையாகத் துன்பியல் நாடகங்களை எழுதினார். அவற்றுள் சிலவான ஹாம்லெட், ரோமியோ ஜூலியட், ஒத்தெல்லோ, லெயிர் மன்னன், மற்றும் மக்பெத் ஆகிய அனைத்தும் ஆங்கில மொழியின் மிகச் சிறந்த படைப்புகளில் சிலவாகக் கருதப்படுகின்றன.[2][3][4] தன் வாழ்வின் கடைசிக் காலத்தில் இவர் துன்ப நகைச்சுவை நாடகங்களை (இவை காதல் நாடகங்கள் என்றும் அறியப்படுகின்றன) எழுதினார். மற்ற நாடகாசிரியர்களுடனும் இணைந்து படைப்புகளை உருவாக்கினார். இவரது பெரும்பாலான நாடகங்கள் இவரது வாழ்நாளில் வெவ்வேறு தரம் மற்றும் துல்லியத்துடன் கூடிய பதிப்புகளாகப் பதிப்பிக்கப்பட்டன. எனினும், 1623ஆம் ஆண்டு சேக்சுபியரின் நண்பர்களும், உடன் நடித்த நடிகர்களுமான யோவான் எம்மிங்சு மற்றும் என்றி கான்டல் ஆகிய இருவர் இவரது நாடகங்களின் முழுமையான தொகுப்பினை முதல் இணைபக்கம் என்ற பெயரில் பதிப்பிட்டனர். இது இவரின் இறப்பிற்குப் பிறகு பதிப்பிக்கப்பட்ட, இவரது இரு நாடகங்களைத் தவிர மற்ற அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பதிப்பாகும்.[13] இதன் முகப்பில் தற்போது அடைமொழியாகப் பயன்படுத்தப்படும், சேக்சுபியரைப் போற்றிய பென் ஜான்சனின் முன்னுணர்வுடைய ஒரு கவிதை குறிப்பிடப்பட்டிருந்தது: "ஒரு காலத்திற்கல்ல, எக்காலத்திற்கும் உரியவர்".[13] குறிப்புகள்
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia