வைத்தாங்கி ஒப்பந்தம்
வைத்தாங்கி ஒப்பந்தம் (Treaty of Waitangi) எனப்படுவது பிரித்தானிய அரசுப் பிரதிநிதிகளுக்கும், நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள பல்வேறு மாவோரி தலைவர்களுக்கும் இடையே 1840 பெப்ரவரி 6 செய்துகொள்ளப்பட்ட ஓர் உடன்பாடு ஆகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் நியூசிலாந்துக்கான பிரித்தானிய ஆளுனர் ஒருவரை நியமிக்கவும், மாவோரிகளின் நிலங்களுக்கும் உடைமைகளுக்கும் அவர்களுக்கு உரிமை வழங்கவும், மாவோரிகளுக்கு பிரித்தானியர்களுக்கான உரிமைகளை வழங்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆங்கிலத்திலும், மாவோரி மொழியிலும் இவ்வொப்பந்தம் எழுதப்பட்டது. ஆனாலும், இரண்டு மொழிகளிலும் உள்ள ஒப்பந்தங்களில் பெரும் வேறுபாடுகள் காணப்பட்டன. எனவே ஒப்புக்கொள்ளப்பட்ட உரிமைகள் எவை என்பது குறித்து தெளிவான கருத்திணக்கம் இருக்கவில்லை. பிரித்தானியர்களின் கருத்துப்படி, நியூசிலாந்து மீது பிரித்தானியாவுக்கு இறைமை வழங்கப்பட்டதுடன், ஆளுனருக்கு அநாட்டை ஆளும் உரிமையும் வழங்கப்பட்டது. ஆனாலும், மாவோரிகள் நியூசிலாந்தின் இறைமையை பிரித்தானியாவுக்கு விட்டுக் கொடுத்திருந்தாலும், அதற்குப் பதிலாக தமக்கு பாதுகாப்பு வழங்கவும், தமது அலுவல்களைத் தாமே கவனித்துக் கொள்ளும் உரிமையும் வழங்கப்பட்டதாக மாவோரிகள் நம்புகின்றனர்.[1] வைத்தாங்கியில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பின்னர், இதன் பிரதிகள் நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அடுத்த சில மாதங்களில் ஏனைய மாவோரி தலைவர்களிடம் இருந்தும் கையெழுத்து வாங்கப்பட்டது. மொத்தமாக இவ்வொப்பந்தத்தின் மூலப் பிரதியுடன் சேர்த்து மொத்தம் ஒன்பது பிரதிகள் இருந்தன.[2] கையெழுத்திட்ட கிட்டத்தட்ட 530 முதல் 540 வரையான தலைவர்களில், குறைந்தது 13 பேர் பெண்கள் ஆவர்.[3][4] வைத்தாங்கி ஒப்பந்த மீறல்கள் குறித்து மாவோரிகள் 1960களின் பிற்பகுதியில் இருந்து குரல் கொடுக்கத் தொடங்கினர். மொழிபெயர்ப்புகளில் இருந்த வேறுபாடுகளில் குழப்பம் இருப்பதும் தெரியவந்தது.[5] ஒப்பந்த மீறல்கள் குறித்து ஆராய 1975 இல், நிரந்தரமான வைத்தாங்கி தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட்டது. வைத்தாங்கி ஒப்பந்தம் குறித்து நாடெங்கும் பலமான வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. இது குறித்து மாவோரிகளும், மாவோரிகள் அல்லாதோரும் பெரும் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். ஒப்பந்தத்தின் படி பிரித்தானிய அரசு தமக்கு முழுமையான உரிமைகளை வழங்கவில்லை என பெரும்பான்மையான மாவோரிகள் கருதினர். இது குறித்து தீர்ப்பாயத்தில் அவர்கள் ஆதாரங்களைப் பதிந்தனர். மாவோரிகள் "சிறப்பு சலூகைகளைப்" பெறுவதற்காக வைத்தாங்கி ஒப்பந்தத்தை முறை தவறிப் பயன்படுத்துகின்றனர் என மாவோரியல்லாதோர் சிலர் குற்றம் சுமத்தினர்.[6][7] பல வழக்குகளில் தாம் ஒப்பந்தத்தை மீறியிருந்ததாக அரசு ஒப்புக் கொண்டது. இதனால், பல மில்லியன் டாலர்கள் இழப்பீடுகளை வழங்கப்பட்டதோடு, மன்னிப்பும் கேட்டுக் கொள்ளப்பட்டது. 1974 ஆம் ஆண்டு முதல் வைத்தாங்கி ஒப்பந்தம் கையெழுத்தான பெப்ரவரி 6 ஆம் நாள் நியூசிலாந்தில் ஒரு தேசிய விடுமுறையாகக் கொண்டாடப்ப்படு வருகிறது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia