ஷிங்கிள் நடவடிக்கை
ஷிங்கிள் நடவடிக்கை (Operation Shingle) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற ஒரு நீர்நிலத் தாக்குதல். இத்தாலியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நேச நாட்டுப் படைகள் ஜெர்மானியர்களின் குளிர்காலக் கோட்டினைத் தவிர்த்து, அன்சியோ மற்றும் நெட்டூனோ பகுதிகளில் கடல்வழியாகத் தரையிறங்கி ரோம் நகரைக் கைப்பற்ற முயன்றன. தரையிறக்கம் முடிந்த பின்னர் கடற்கரை முகப்பிலிருந்து உடைத்து வெளியேற நடந்த அன்சியோ சண்டை (Battle of Anzio) இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. செப்டம்பர் 1943ல் இத்தாலி மீது படையெடுத்த நேச நாட்டுப் படைகள் விரைவில் தெற்கு இத்தாலியைக் கைப்பற்றி வடக்கு நோக்கி முன்னேறின. மத்திய இத்தாலியில் அமைந்திருந்த ரோம் நகரைப் பாதுகாக்க ஜெர்மானியர்கள் அதற்கு தெற்கே பல அரண்கோடுகளை அமைத்திருந்தனர். அவற்றுள் மிகப் பலமானது குளிர்காலக் கோடு. அதன் தெற்கிலிருந்து பிற அரண்கோடுகளை ஊடுருவிய நேச நாட்டுப் படைகள் டிசம்பர் 1943ல் குளிர்காலக் கோட்டினை அடைந்து தங்கள் தாக்குதலைத் தொடங்கின. ஆனால் பிற அரண்கோடுகளைப் போல இதை எளிதில் ஊடுருவ அவர்களால் இயலவில்லை. டிசம்பர் 1943 முதல் மே 1944 வரை தொடர்ச்சியாக இதற்கான சண்டைகள் நடைபெற்றன. குளிர்காலக் கோட்டை ஊடுருவ மோண்ட்டி கசீனோ அருகே கடும் சண்டை நடந்து கொண்டிருந்த போது, அக்கோட்டின் பின்னால் படைகளைத் தரையிறக்கி ரோம் நகரைக் கைப்பற்ற நேச நாட்டுத் தலைவர்கள் திட்டமிடத் தொடங்கினர். குளிர்காலக் கோட்டின் பின்னால் இத்தாலியின் மேற்குக் கடற்கரையில் அன்சியோ மற்றும் நெட்டூர்னோ நகரங்களுக்கு அருகே கடல்வழியாகப் படைகளைத் தரையிறக்கினால் எளிதில் ரோம் நகரைக் கைப்பற்றி விடலாம் எனக் கருதினர். ![]() ஜனவரி 22, 1944ம் தேதி அன்சியோ படையிறக்கம் ஆரம்பமானது. தொடக்கத்தில் குறைவான எதிர்ப்பையே எதிர்கொண்ட அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைகள், முதல் நாள் இரவுக்குள் 36000 வீரர்கள் மற்றும் 3200 வண்டிகளை அன்சியோ கடற்கரையில் தரையிறக்கி விட்டன. அன்றே இத்தாலியின் உட்பகுதிக்கு முன்னேறத் தொடங்கி ஐந்து கி.மீ. வரை கைப்பற்றின. ஆனால் அதன்பின் முன்னேற்றத்தை நிறுத்தி விட்டு தாங்கள் தரையிறங்கிய கடற்கரைப் பகுதியைப் பலப்படுத்தத் தொடங்கின. இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்ட இத்தாலியப் போர்முனையின் தலைமைத் தளபதி ஆல்பர்ட் கெஸ்சல்ரிங், துணைப் படைப்பிரிவுகளை அன்சியோ பகுதிக்கு அனுப்பினார். ஜனவரி 24ம் தேதி அன்சியோ கடற்கரை முகப்பு ஜெர்மானியப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு விட்டது. அடுத்த சில நாட்களில் இரு தரப்பிலும் புதிய படைப்பிரிவுகள் அன்சியோ பகுதிக்கு வந்த வண்ணம் இருந்தன. ஜனவரி 29 தேதி வாக்கில் 69,000 நேச நாட்டுப் படையினரும் 71,500 ஜெர்மானியர்களும் இப்பகுதியில் இருந்தனர். ஜனவரி இறுதியில் கடுமையான சண்டைகள் ஆரம்பமாகி; பெப்ரவரி மாதம் முழுவதும் தொடர்ந்தன. இரு தரப்பினரும் இணையான பலம் பெற்றிருந்த படியால் யாருக்கும் எளிதில் வெற்றி கிட்டவில்லை. நேச நாட்டுப் படைகளால் கடற்கரை முகப்பிலிருந்து உடைத்து வெளியேற முடியவில்லை. ஜெர்மானியப் படைகளால், கடற்கரை முகப்பைக் கைப்பற்ற இயலவில்லை. மார்ச்-ஏப்ரல் காலகட்டத்தில் சண்டைகள் ஓய்ந்து தேக்க நிலை உருவானது. மே மாதம் அடுத்த தாக்குதலுக்கான ஆயத்தங்களை நேச நாட்டுப் படைகள் செய்யத் தொடங்கின. மேலும் பல டிவிசன்கள் அன்சியோவில் தரையிறங்கின. இதனால் இங்கிருந்த நேச நாட்டுப் படைபலம் பெருகியது. மே 18ம் தேதி மோண்டிக் கசீனோவில் நேச நாட்டுப் படைகள் குளிர்காலக் கோட்டினை ஐந்து மாதகால சண்டைக்குப்பின்னர் ஊடுருவின. இவ்வெற்றியைப் பயன்படுத்தி அன்சியோவிலும் நேச நாட்டுப் படைகள் தாக்கத் தொடங்கின. இருபுறமிருந்து தாக்கப்பட்ட ஜெர்மானியப் படைகள் தோல்வியடைந்து பின்வாங்கத் தொடங்கின. ஜூன் 5ம் தேதி ரோம் நகரம் கைப்பற்றப்பட்டது. குறிப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia