2008 நொய்டா இரட்டைக் கொலை வழக்கு
2008 நொய்டா இரட்டைக் கொலை வழக்கு அல்லது ஆருஷி-ஹேம்ராஜ் கொலை வழக்கு என்பது இந்தியாவின், நொய்டா நகரில் நடந்த 13 வயது சிறுமி ஆருஷி தல்வார் மற்றும் அவரின் வீட்டில் வேலை செய்த 45 வயது ஹேம்ராஜ் ஆகியோரின் கொலைகளைக் குறிக்கிறது. இக்கொலைகள் நொய்டா நகரில் உள்ள ஆருஷியின் வீட்டில் 2008 மே மாதம் 15, 16 ஆம் தேதி இரவில் நடைபெற்றது. இவ்வழக்கு இந்தியா முழுவதும் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆருஷியின் சடலம் மே 16 ஆம் தேதி அவரின் அறையில் கண்டு பிடிக்கப்பட்டது. ஹேம்ராஜை அந்நேரத்தில் எங்கு தேடியும் காணக் கிடைக்காததால் காவல்துறை, இக்கொலைக்கு அவரே காரணமெனும் முடிவுக்கு வந்தனர். எனினும் மறுநாள் ஹேம்ராஜின் சடலம் ஆருஷி வீட்டு மேல்தளத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இவ்விடத்தில் கொலை நடந்த இடத்திற்கு தாமதமாத வந்ததால், தேவையான ஆதாரங்கள் சேகரிக்க முடியாமல் போனமை காவல்துறையின் மீது கடுமையான விமர்சனங்கள் எழ காரணமாக இருந்தது. அதன்பின் காவல்துறையின் கவனம் ஆருஷியின் பெற்றோரான நுபுர் தல்வார் மற்றும் ராஜேஷ் தல்வார் மீது திரும்பியது. ஆருஷி மற்றும் ஹேம்ராஜ் ஆகியோரை அருவருக்கத்தக்க கோலத்தில் ராஜேஷ் கண்டிருக்க வேண்டும் அதனால் அவ்விருவரை கொலை செய்திருக்கலாம் அல்லது ராஜேஷ் திருமணம் தாண்டிய உறவை பேணியிருக்க வேண்டும் இது ஹேம்ராஜ், ஆருஷி இருவருக்கும் தெரிய வந்ததால் அவர்களை கொலை செய்திருக்கலாம் என வெவ்வேறு காரணங்களை காவல்துறையினர் கூறினர். இது தல்வார் குடும்பம் மற்றும் அவர்களின் உறவினர்களை கோபத்திற்கு உள்ளாக்கியது. காவல்துறையினரின் அசமந்த போக்கை மறைக்கவே இவ்வாறானதொரு பொய்க் குற்றச்சாட்டை தல்வார் மீது சுமத்துகின்றனர் என அவர்கள் கூறினார்கள். பின்பு இவ்வழக்கு விசாரணை நடுவண் புலனாய்வுச் செயலகத்திற்கு மாறியது. அவர்கள் தல்வார் குடும்பத்தை சந்தேகத்திலிருந்து விடுவித்து தல்வாரின் உதவியாளரான கிருஷ்ணா மற்றும் அவரின் நண்பர்கள் ராஜ்குமார், விஜய் மண்டல் ஆகியோரை சந்தேகித்தனர். இம்மூவரையும் ஆழ்நிலை மயக்கத்திற்கு உட்படுத்தி விசாரித்ததில் ஆருஷி, ஹேம்ராஜ் இருவரையும் தாங்களே கொன்றததாக ஒப்பு கொண்டார்கள் என நடுவண் புலனாய்வுச் செயலகம் அறிவித்தது. ஆயினும் ஆழ்நிலை மயக்க விசாரணையில் துல்லியமாக உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியாதெனவும், இம்மூவருக்கு எதிராக உறுதியான வேறு ஆதாரங்கள் எதுவும் கிடைக்காததாலும் இவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆழ்நிலை மயக்க விசாரணை நடத்தியமைக்காக நடுவண் புலனாய்வுச் செயலகம் கண்டனத்திற்கு உள்ளாகியது. 2009ல் இவ்வழக்கு நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் புதிய குழுவிற்கு வழங்கப்பட்டது. இவ்வழக்கை ஆராய்ந்த புதிய குழு இவ்வழக்கை பின் தொடர போதிய ஆதாரங்கள் இல்லை என அறிவித்தது. மேலும் சில சூழ்நிலை ஆதாரங்களால் ராஜேஷ் தல்வார் இக்கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாமென தெரிவித்ததோடு, இவ்வழக்கை முடிப்பதாகவும் அறிவித்தது. இந்த அறிவிப்பு தல்வார்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. எனினும் நீதிமன்றம் இவ்வழக்கில் நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் அறிக்கையின் ஒரு பகுதியான ஆதாரங்கள் போதியளவு இல்லை என்பதை மறுத்து 2013 ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு முறையற்றதென பல்வேறு தரப்பினரால் எதிர்க்கப்பட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து தல்வார் குடும்பத்தினர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அக்டோபர் 12, 2017ல் உயர்நீதிமன்றம் ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோருக்கு எதிராக போதியளவு ஆதாரங்கள் கிடைக்காததாலும் கிடைத்த ஆதாரங்களும் திருப்திகரமாக இல்லாததாலும் இவ்வழக்கிலிருந்து அவர்களை விடுவித்தது. அத்தோடு இவ்வழக்கு விசாரணையில் அசமந்தமாக இருந்த காவல்துறை, நடுவண் புலனாய்வுச் செயலகம், ஊடகங்களை நீதிமன்றம் கண்டித்தது. மார்ச் 8, 2018 ஆம் ஆண்டு நடுவண் புலனாய்வுச் செயலகம் இத்தீர்ப்பக்கெதிராக மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கு இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறது. பின்னணிஆருஷி தல்வார் 1994ம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி பிறந்தார். இவர் நொய்டா அரசு பள்ளியில் கல்வி கற்று வந்தார். ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் இருவரும் பிரபலமான பல் மருத்துவர்கள் ஆவர். இவர்கள் மூவரும் உத்தர பிரதேசத்தில் உள்ள நொய்டா நகரின் பிரிவு 25ல் (ஜல்வாயு விகார்) அமைந்திருக்கும் ஒரு அடுக்குமாடித் தொடர் குடியிருப்பில் வசித்து வந்தனர். ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் இருவரும் நொய்டா நகரின் 27 இம் பிரிவில் அமைந்திருக்கும் அவர்களின் சிகிச்சையகத்தில் பணியை மேற்கொண்டனர். போர்ட்டிஸ் மருத்துவமனையிலும் இருவரும் நோயாளிகளைக் கவனித்து வந்தனர். ராஜேஷ் இம் மருத்துவனையின் பல் சிகிச்சை பிரிவுக்கான தலைமை மருத்துவராக இருந்தார். மேலும் ராஜேஷ் நொய்டா பெரு நகரில் உள்ள ஐ.டி.எஸ் பல் மருத்துவ கல்லூரியில் விரிவுரையாளராகவும் இருந்தார். தல்வார் குடும்பத்தின் நெருங்கிய நண்பர்களான பல் மருத்துவர்கள் பிரபுல் துரானி மற்றும் அனிதா துரானி இருவரும் அந்நகரிலேயே வசித்து வந்தனர். இவ்விரு குடும்பமும் இரு மருத்துவமனைகளில் ஒன்றாகவே பணி புரிந்து வந்தனர்.[1][2] ஹேம்ராஜ் என அழைக்கப்பட்ட யம் பிரசாத் பன்ஜாடே நேபாள நாட்டின் அர்க்காகாஞ்சி மாவட்டத்தில் உள்ள தரபானி எனும் ஊரை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தல்வார் வீட்டில் தங்கி சமையற்காரராகவும் வீட்டு உதவியாளராகவும் பணி புரிந்து வந்தார்.[3] கொலைக்கு முந்தைய நிகழ்வுகள்15 மே பிற்பகல் 9 மணிக்கு முன்
பி.ப. 9 - 10
பி.ப. 10 - பி.ப. 11
பி.ப. 11 - பி.ப. 12
நள்ளிரவின் பின் (மே 16)
வீடு1300 சதுர அடி பரப்பளவைக் கொண்ட தல்வார்களின் வீடு ஒரு பிரதான அறை, மூன்று படுக்கையறை மற்றும் ஒரு வேலையாள் தங்கும் அறை கொண்டது. ராஜேஷ், நுபுர் ஒரு படுக்கை அறையிலும் அதன் பக்கத்து அறையில் ஆருஷியும் வேலையாள் அறையில் ஹேம்ராஜும் இருந்தனர்.[5] ஹேம்ராஜின் அறை வீட்டின் வெளியே இருந்து அறைக்குள் நுழைய ஒரு கதவும் அவ்வறையிலிருந்து வீட்டிற்குள் நுழைய ஒரு கதவும் கொண்டிருந்தது.[9] அவ்வீட்டினுள் நுழைய மூன்று கதவுகள் இருந்தன. முதல் இரண்டு வெளிப்புற கதவுகளும் கம்பி வலைக் கதவுகள் ஆகும். மூன்றாவது கதவு மரக்கதவு, இக்கதவைத் தாண்டியே வீட்டினுள் நுழைய முடியும். ஹேம்ராஜின் அறையில் இருந்து வெளியே செல்ல பயன்படும் கதவு இரண்டு கம்பி வலைக் கதவுகளுக்கும் இடையில் அமைந்திருந்தது.[10] ![]() ஆருஷியின் உடல்16 மே 2008 அன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் தல்வார் வீட்டுப் பணிப்பெண் பாரதி மண்டல் வீட்டின் அழைப்பு மணியை அடித்தார். இவர் ஆறு நாளுக்கு முன்பு வேலைக்கு அமர்த்தப்பட்டவர். தல்வார் தம்பதி காலந்தாழ்ந்து விழித்தெழும் பழக்கம் கொண்டிருந்ததால் வழமையாக ஹேம்ராஜே கதவைத் திறப்பார். எனினும் அன்று காலை இரண்டு முறை அழைப்பு மணி ஒலித்தும் கதவு திறக்கப்பட்டவில்லை. பாரதி முதல் கம்பி கதவைத் தள்ளி திறக்க முயற்சி செய்தும் கதவைத் திறக்க முடியவில்லை என விசாரணையில் தெரிவித்தார்.[11] மூன்றாம் முறை மணி ஒலித்ததும் மரக்கதவைத் திறந்த நுபுர் அதற்கடுத்ததாக இருந்த கம்பிக் கதவின் ஊடே அக்கதவு வெளியே பூட்டியிருப்பதாகக் கூறி ஹேம்ராஜ் எங்கே என பாரதியைக் கேட்டார். பாரதி தனக்குத் தெரியாதென்று கூறவே ஹேம்ராஜ் பால் வாங்க வெளியே சென்றிருக்கலாம் என்று நினைத்த நுபுர் அவர் வரும் வரை பாரதியை காத்திருக்கும் படி கூறினார். அதுவரை காத்திருக்க முடியாது என்ற பாரதி மாற்றுச் சாவியை உப்பரிகை வழியாகக் கீழே போடுமாறு கூறவே நுபுரும் கீழே வரும்படி கூறினார்.[10] அதன்பின் நுபுர் ஹேம்ராஜ் தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொள்ள மறுபுறம் அழைப்புத் துண்டிக்கப்படவே மீண்டும் அழைப்பை மேற்கொண்டார். இம்முறை தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என செய்தி வந்தது.[9] கீழே வந்த பாரதியிடம் நுபுர் மீண்டும் மேலே வந்து கதவு தாழிடப்பட்டிருக்கிறதா அல்லது பூட்டிடப்பட்டிருக்கிறதா என பார்க்குமாறு கூறினார். எனினும் பாரதி கதவு பூட்டியிருந்தால் திரும்பி வர வேண்டுமே எனக் கூறி சாவியை கீழே போடுமாறு கூறினார். பின்பு நுபுர் சாவியை கீழே போட்டார்.[11] தல்வார்களின் கூற்றுப்படி இவ்வேளையில் துயிலெழுந்த ராஜேஷ் பிரதான அறைக்கு வந்தார். அங்கு உணவருந்தும் மேசையில் ஏறத்தாழ நிறைவடைந்திருந்த ஒரு விஸ்கி ரக மதுப்புட்டியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். நுபுரிடம் யார் அந்த மதுப்புட்டியை அங்கு வைத்ததென வினவும் போதே சட்டென்று மிரண்ட ராஜேஷ் நுபுரை ஆருஷியின் அறைக்கு சென்று பார்க்குமாறு கூறினார். ஆருஷியின் அறை கதவு தன்னியக்க தாழ்ப்பாளைக் கொண்டிருந்தது. திறப்பு இல்லாமல் உள்ளிருந்து மட்டுமே திறக்க முடியும். எனினும் அப்போது அக்கதவு திறந்திருந்தது. அதிர்ச்சி அடைந்த தல்வார் தம்பதி உள்ளே நுழைந்ததும் அங்கு கட்டில் மேல் கிடந்த ஆருஷியின் சடலத்தைக் கண்டனர். அதைக் கண்டு ராஜேஷ் அலற நுபுர் உறைந்து நின்றிருந்தார்.[12] இதேவேளை முன் கதவிடம் வந்த பாரதி அதை தள்ளவே அது சாவியில்லாமல் திறந்தது. இரண்டாவது கம்பி கதவு பூட்டிடப்படாமல் வெளியே தாழ்ப்பாள் மட்டும் போடப்பட்டிருந்தது.[11] அதைத் திறந்து வீட்டினுள் நுழைந்த பாரதி அங்கு ராஜேஷ், நுபுர் இருவரும் அழுது கொண்டிருப்பதைக் கண்டார். அவரை ஆருஷியின் அறைக்குள் நுபுர் அழைக்கவே அவர் வந்து அவ் அறையின் வாயிலில் நிற்க, நுபுர் உள்ளே சென்றார். படுக்கையில் கிடந்த ஆருஷியின் உடல் ஒரு போர்வையால் போர்த்தப்பட்டிருந்தது. நுபுர் போர்வையை விலக்க அங்கு ஆருஷியின் கழுத்து வெட்டப்பட்டிருந்ததை பாரதி கண்டார். உடனே பாரதியின் முன் ஹேம்ராஜை தம்பதி இருவரும் குற்றம் சாட்டினர். அதன்பின் பாரதி வீட்டிற்கு வெளியே சென்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்தார். மீண்டும் வீட்டிற்கு வந்த பாரதி தனது வழமையான பணிகளை செய்ய வேண்டுமா என கேட்க தல்வார்கள் தேவையில்லை எனக் கூறவே அவர் தான் வேலை செய்யும் மற்ற வீடுகளுக்கு சென்றார். அதன்பின் தல்வார்கள் தங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பு மேற்கொண்டனர். அவ்வடுக்குமாடித் தொடரின் கீழ்த் தளத்தில் வசிக்கும் புனீஷ் ராய் என்பவர் ஜல்வாயு விகாரின் பாதுகாவலரிடம் காவல் துறையினரை அழைக்குமாறு கூறினார். காவல்துறையினர் வீட்டினுள் நுழைந்த வேளையில் அங்கு பிரதான அறையில் 15 பேர் குழுமியிருந்தனர். மேலும் தல்வார்களின் அறையில் 5-6 பேர் இருந்தனர். ஆருஷியின் அறை மட்டுமே அப்போது வெறுமையாக இருந்தது. இதனால் குற்றம் நடந்த இடம் கலைக்கப்பட்டிருந்தது.[9] இக்கொலையைப் பற்றிக் கேள்விபட்ட செய்தி ஊடகங்கள் காலை 8 மணியளவில் அவ்விடத்தில் குழுமின.[12] ஹேம்ராஜ் மீதான சந்தேகம்மே 16 அன்று இக்கொலையின் பிரதான சூத்திரதாரியாக ஹேம்ராஜ் கருதப்பட்டார். ராஜேஷ் காவல்துறைக்களித்த புகாரில் ஹேம்ராஜ் மீது குற்றம் சுமத்தினார். மேலும் அவர் காவல்துறையிடம் அவ்வீட்டினுள் சோதனை செய்வதை விடுத்து நேபாளத்திலிருக்கும், ஹேம்ராஜின் சொந்த ஊருக்கு சென்று விசாரிக்குமாறும் வற்புறுத்தினார். மது அருந்தி தன்னிலை இழந்திருந்த ஹேம்ராஜ் ஆருஷியின் அறைக்கு சென்று அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயல ஆருஷி அதை வலுவாக எதிர்க்கவே குக்குரி ரகக் கத்தியால் அவரைக் கொலை செய்து இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். அவரைப் பற்றி தகவல் தருவோர்க்கு 25000 இந்திய ரூபாய்கள் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்தது.[9] காலை 8:30 மணியளவில் ராஜேஷின் சகோதரர் தினேஷ், வாகன சாரதி உமேஷ் சர்மா, ராஜேஷின் சிறு வயது நண்பர் அஜய் சந்தா மற்றும் இரு காவல்துறையினர் ஆருஷியின் உடலை பிணக்கூறு ஆய்வுக்கு எடுத்து சென்றனர். மதியம் ஒரு மணியளவில் ஆருஷியின் உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பிரதான அறையில் வைக்கப்பட்டது. பிற்பகல் 4 மணியளவில் ஆருஷியின் உடல் தகனக் கிரியைகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டது. இச்செயற்பாடு பின்னாளில் விமர்சனத்துக்கு உள்ளானது. தல்வார்கள் இது பற்றி கூறும்போது உடல் விரைவாக அழுகத் தொடங்கியதாலும், உறவினர்களின் வற்புறுத்தலாலும் தகனக்கிரியை செய்ததாகக் கூறினர். காவல்துறையும் மேலதிக பரிசோதனை எதுவும் இல்லாத காரணத்தால் சடலத்தை ஒப்படைத்ததாகக் கூறினர்.[12] அதன் பிறகு ஆருஷியின் அறை சுத்தம் செய்யப்பட்டது. காவல்துறையினர் இந்த அவசர சுத்தம் செய்தலுக்காக தல்வார்களின் வேலைக்காரர் மீது குற்றம் சுமத்தினர்.[9] தான் காவல்துறையின் அனுமதியுடனேயே அறையை சுத்தம் செய்ததாகவும், அந்நேரத்தில் பெண் காவலர் ஒருவர் மேற்பார்வையில் இருந்ததாகவும் ராஜேஷின் வேலைக்காரர் விகாஸ் சேத்தி பின்னர் நீதிமன்றத்தில் கூறினார்.[13] ஆருஷியின் உடைகள், போர்வை, தலையணை, இரத்தக் கறை படிந்த மெத்தையின் ஒரு பகுதி ஆகியன தடய பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. அதன்பின் விகாஸ் சேத்தி மூன்று நண்பர்களுடன் சேர்ந்து அம்மெத்தையை தல்வார் வீட்டு மேல்தளத்தில் போட எடுத்து சென்றதாக விகாஸ் நீதிமன்ற விசாரணையில் தெரிவித்தார். ஆனால் மேல்தளம் பூட்டியிருந்ததால் ஒரு வயதான பெண்மனி அம்மெத்தையை அருகிலுள்ள மேல்தளத்தில் போடுமாறு கூற ராஜேஷின் சாரதி சர்மா புனீஷ் டன்டனிடம் சாவியை கேட்க அவர் தனது வீட்டு மேல்தளத்தை திறந்து விட்டார். சர்மா மற்றும் நண்பர்கள் சேர்ந்து மெத்தையை இழுத்து மேல்தளத்தில் போட்டனர். ஒருவரும் கம்பி வேலியால் பிரித்திருந்த பக்கத்து தளத்தில் கிடந்த ஹேம்ராஜின் சடலத்தைக் கவனிக்கவில்லை.[14] புலனாய்வு அதிகாரிகளின் தகவல்படி ஆருஷியின் பிணக்கூறு ஆய்வறிக்கை பி.ப. 3 மணிக்கும் பி.ப.6 மணிக்கும் இடையில் எழுதப்பட்டது. 16 மே அன்று தினேஷ் தல்வார், அவரின் நண்பர் வைத்தியர் சுசில் சௌத்ரி, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி கே. கே. கௌதம் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.[9] 2012இல் புலனாய்வு நீதிமன்றத்தில், இது பற்றி குறிப்பிட்ட கே. கே. கௌதம், மருத்துவர் சௌத்ரி தன்னிடம் பிணக்கூறு ஆய்வறிக்கையில் பாலியல் சம்பந்தப்பட்ட எதையும் இடம்பெற செய்ய வேண்டாம் என்றதாகவும் அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறினார்.[15][16] ஹேம்ராஜின் உடல்மே 16 அன்று காலை ராஜேஷின் நண்பர்களான ராஜிவ் குமார், ரோகித் கொச்சர் ஆகிய இருவரும் ராஜேஷ் தல்வார் வீட்டு மேல்தளத்தின் கதவில் இரத்தக் கறை படிந்திருந்ததாக காவல்துறையிடம் பின்னர் கூறினர். எனினும் உமேஷ் சர்மா, புனீஷ் டன்டன், விகாஸ் மற்றும் சில காவல்துறையினர் அக்கதவில் எந்த இரத்தக் கறையையும் காலையில் தாங்கள் கவனிக்கவில்லை எனக் கூறினார்கள்.[14][17][18] இதிலிருந்து ஆருஷியின் மெத்தையை மேல்தளத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியின் போது இவவிரத்தக் கறை படித்திருக்கலாம் என ஊகிக்க முடிகிறது.[12] கொச்சர் இதைப் பற்றி அகிலேஷ் குமார் எனும் காவலரிடம் தெரிவித்தார் எனக் கூறினார். பிரபுல் துரானி குறிப்பிடும் போது காவலர் அவ்விரத்தக் கறையை துரு என்று கூறியதாகவும் தரையிலிருந்த இரத்தக் கறையை கவனத்தில் கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். வார்ஷ்னேவின் கூற்றுப்படி அக்காவலர் கொலையாளி தனது ஆயுதத்தைப் பதுக்க மேல்தளத்திற்கு வந்திருக்கலாம் எனவும் கதவு மூடியிருக்கவே அவன் திரும்பி சென்றிருக்கலாம் எனவும் கூறினார்.[19] இறுதியாக மேல்தளத்தைப் பார்வையிட காவலர் முடிவு செய்த போது அதற்கான சாவி அப்போது அவர்களிடம் இருக்கவில்லை. காவலர் ராஜேஷிடம் சாவியை கேட்க அதற்கு அவர் வீட்டிற்குள் சென்று நீண்ட நேரத்திற்கு வெளியே வரவில்லை என ரோகித் கொச்சர் தெரிவித்தார்.[20] வார்ஷ்னே இது பற்றி நீதிமன்றத்தில் தெரிவித்த போது ராஜேஷ் மேல்தளத்திற்கு செல்லும் படிக்கட்டிற்கு செல்ல எத்தனித்து பின் மீண்டும் வீட்டிற்கு சென்று விட்டார் என்றார். ராஜேஷ் இது பற்றி குறிப்பிடும் போது அன்று அந்நேரம் என்ன நடந்தது என தனக்கு ஞாபகத்தில் இல்லை எனவும் மேலும் எவ்விதத்திலும் தான் காவலரின் ஆய்வுக்கு இடையூறு விளைவிக்கவில்லை எனவும் கூறியிருந்தார். இறுதியில் கதவை திறக்க முடியாததால் அம்முயற்சி மறுநாள் வரை காவலர்களால் தள்ளி வைக்கப்பட்டது. காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ் மிஷ்ரா குறிப்பிடும் போது மே 16 அன்றே அக்கதவைத் திறக்க கூறியதாகவும் எனினும் அவரின் உதவியாளர்கள் தங்களால் சாவியை கண்டுபிடிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டதோடு கதவைத் திறக்கும் பொறியாளரை உடனடியாகத் தேட முடியவில்லை எனவும் கூறினர் என்றார். மேலும் இக் கவனக்குறைவு தொடர்பாக உயரதிகாரியிடம் முறையிட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.[18] மே 17 காலை ராஜேஷ் மற்றும் நுபுர் இருவரும் தங்கள் மத சடங்குகளின் படி ஆருஷியின் சாம்பலை கங்கை நதியில் கரைக்க அரித்துவார் சென்றனர். வீட்டில் தினேஷ் தல்வார் இரங்கல் தெரிவிக்க வருபவர்களை ஏற்றார். இவர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற பெற்ற காவலர் கே.கே.கௌதம் ஆருஷி மற்றும் ஹேம்ராஜ் ஆகியோரின் அறைகளை சோதனை செய்தார். இரத்தக் கறை படிந்த கைப்பிடி கொண்ட மேல்தள கதவை இவருக்கு தினேஷ் காட்டி அதைத் திறக்குமாறு கோரிக்கை விடுத்தார். கௌதம் உடனே காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ் மிஷ்ராவைத் தொடர்பு கொண்டு கதவைத் உடனடியாக திறக்க வேண்டும் என கூறினார். அதற்கு அவரே அவ்விடத்திற்கு வருவதாகக் கூறினார். எனினும் காவல் நிலைய அதிகாரி ஒருவரை அனுப்பி வைத்தார். கதவுக்கான சாவி இன்னும் கிடைக்காததால் அனிதா துரானி தல்வார்களின் அயலாரான புனீஷிடம் அக்கதவிற்கான மாற்று சாவி ஏதும் இருக்குமா என கேட்க அவர் இல்லை எனக் கூறினார். இறுதியில் ததாராம் என்பவர் அக்கதவின் பூட்டை உடைத்தார்.[15] மேல்தளத்திற்கு வந்த அக்குழு இரத்தத் தடத்தைக் கண்டனர். மு.ப.10:30க்கு இரத்த வெள்ளத்தில் கிடந்த அழுகிய சடலம் ஒன்று அங்கு கண்டு பிடிக்கப்பட்டது.[5] தினேஷ் தல்வாரினால் அந்த சடலத்தை அடையாளம் காண முடியவில்லை. அவர் அரித்துவாருக்கு சென்று கொண்டிருந்த ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வாரை உடனடியாகத் திரும்பி வருமாறு தொலைபேசியில் அழைத்து கூறினார். இதேவேளை காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ் மிஷ்ராவும் அவ்விடத்துக்கு சமூகமளித்தார்.[15] திரும்பி வந்த தல்வார் தம்பதியில் ராஜேஷ் மட்டும் வீட்டினுள் நுழைய ஆருஷியின் சாம்பலோடு வீட்டிற்குள் நுழைய மாட்டேன் என தெரிவித்த நுபுர் தல்வார் வாகனத்திலேயே இருந்தார். மேல்தளத்திற்கு வந்த ராஜேஷினாலும் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை அடையாளம் காண முடியவில்லை. பின்னர் ஹேம்ராஜின் நண்பர் ஒருவரினால் அச்சடலம் ஹேம்ராஜினுடையதென உறுதிபடுத்தப்பட்டது. பின்பு தல்வார்கள் தங்கள் அரித்துவார் பயணத்தை அதே நாளில் தொடர்ந்தனர். அங்கு ஆருஷியின் இறந்த நேரத்தை மு.ப. 2 மணி என புரோகிதர்களிடம் அவர்கள் தெரிவித்தனர்.[21] ஹேம்ராஜின் பிணக்கூறு ஆய்வை மருத்துவர் நரேஷ் ராஜ் அன்றிரவு மேற்க் கொண்டார். ஆதாரங்கள்உத்தர பிரதேச காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக சமூகமளிக்காததால் தடயவியல் ஆய்வாளர்கள் அவ்விடத்துக்கு வருகை தந்த போது ஆட்கள் பலர் அவ்வீட்டினுள் எவ்வித அனுமதியுமின்றி சுதந்திரமாக உலவிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஊடகத் துறையினரும் அடங்குவர். நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் அறிக்கை படி 90 வீதமான தடயங்கள் இதனால் அழிந்தன.[22] காயங்கள்பிணக்கூறு ஆய்வறிக்கையின் பிரகாரம் ஆருஷி மற்றும் ஹேம்ராஜ் நள்ளிரவு 12 மணியிலிருந்து 1 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் இறந்தனர்.[23] இருவரும் கனமான மழுங்கிய ஆயுதத்தால் முதலில் தாக்கப்பட்டனர். இத்தாக்குதலால் U அல்லது V வடிவ தழும்பு ஏற்பட்டிருந்தது. இத்தாக்குதலே மரணத்திற்கு காரணமாக அமைந்தது. பின் அவர்களின் கழுத்து கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.[5] இறந்தவர்களின் உடலில் இருந்த காயங்கள்ஆருஷிஆருஷியின் இடது கண்ணிற்கு மேல் நெற்றியில் கனமான ஆயுதத்தால் தாக்குதல் நடந்திருக்கிறது. நடுவண் புலனாய்வுச் செயலக அறிக்கையில் பிடர் எலும்பிலும் அடிபட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தது. எனினும் தல்வார்களின் வழக்கறிஞர் பிணக்கூறு ஆய்வறிக்கையில் இடப்பக்க நெற்றி சுவரெலும்பில் ஏற்பட்டிருந்த காயம் மட்டுமே குறித்திருக்கிறது எனக் கூறினார்.[24] இத்தாக்குதல் 4 cm × 3 cm அளவு வடுவையும் மூளையில் 8 cm × 2 cm அளவுடைய இரத்தக்கட்டியை ஏற்படுத்தியுள்ளது.[25] ஆருஷியின் கழுத்து 14 cm × 6 cm என்ற அளவில் வெட்டப்பட்டிருந்தது. வெட்டிய இடத்திலிருந்த இரத்தம் தெறிக்காமல் வெளியேறி உறைந்திருந்தது. இது முதலில் ஆயுதத்தால் தாக்கி பின்னர் கழுத்து வெட்டப்பட்டமையை உறுதி செய்கிறது.[25] ஹேம்ராஜ்ஹேம்ராஜின் தலையின் பின்புறத்தில் ஆயுத தாக்குதலால் காயம் ஏற்பட்டது. அவரின் கழுத்தில் காணப்பட்ட வெட்டு ஆருஷியின் கழுத்தில் இருந்த வெட்டை முழுதொத்திருந்தது.[26] தாக்கிய ஆயுதம்2008 மே மாதம் தடயவியல் ஆய்வாளர்கள், ஆருஷி முதலில் கனத்த கூர் விளிம்பு உடைய ஆயுதத்தால் நெற்றியில் தாக்கப்பட்டார் என தெரிவித்தனர். தாக்குதல் நடந்து இரண்டு நிமிடத்தில் உயிர் பிரிந்ததை இரத்தக் கட்டியினளவை வைத்து உறுதி செய்தனர்.[25] 2012இல் ஆருஷியின் பெற்றோர் குற்றம் சாட்டப்பட்டதன் பின் ஆருஷியின் தலையில் உண்டான வடுவின் அளவும் ராஜேஷின் குழிப்பந்துத் தடியின் முனை அளவும் ஒத்திருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர் என நடுவண் புலனாய்வுச் செயலகம் தெரிவித்தது.[5] மருத்துவர் சுனில் டோரே அவ்வாயுதம் குழிப்பந்துத் தடியாக இருக்கலாம் எனத் தெரிவித்தார். இதை எதிர்த்த தல்வார் தரப்பு குழிப்பந்துத் தடி எனும் வார்த்தையை நடுவண் புலனாய்வாளர்களே மருத்துவரை சொல்ல வைத்தனர் என்றது.[26] மேலும் தல்வார்களின் வழக்கறிஞர் நீதி மன்றத்தில் இது பற்றி குறிப்பிடும் போது ஆருஷியின் மண்டையோடு அதிக அழுத்தத்தினால் வெடித்துள்ளது எனவும் அது குழிப்பந்துத் தடியால் ஏற்பட்டிருக்க முடியாது எனவும் புலனாய்வு அதிகாரி மருத்துவர் ஆர். கே. சர்மா தெரிவித்தார் என்றார். வெட்டிய ஆயுதம்கொல்லப்பட்டோரின் கழுத்தை வெட்டிய ஆயுதம் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. இருவரின் கழுத்திலிருந்த காயங்களும் ஒரே அளவானதாக இருந்ததால் பயன்படுத்திய ஆயுதமும் ஒன்றாகவே இருக்க வேண்டுமென கண்டு பிடிக்கப்பட்டது. இருவரின் கழுத்து மூச்சுக் குழாய் நரம்புகள் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரின் கவனத்தோடும் நேர்த்தியோடும் வெட்டியிருப்பதாக தடயவியல் நிபுணர்கள் 2008 மே அன்று குறிப்பிட்டனர்.[25] ஆரம்பத்தில் அறுவை சிகிச்சைக்கு பயன்படும் கத்தியால் கழுத்து வெட்டப்பட்டது என தெரிவித்த காவல்துறையினர் ஆருஷியின் பெற்றோரை முதலில் சந்தேகித்தனர். எனினும் 2008 சூன் மாத அளவில் கொலைக்கு பயன்பட்டது குக்குரி எனும் நேபாள நாட்டு ரகக் கத்தி என்ற புலனாய்வாளர்களின் சந்தேகம் மூன்று நேபாள நாட்டு நண்பர்களின் மீது திரும்பியது. நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் இரண்டாம் குழு கொலைக்கு பயன்பட்டது அறுவை சிகிச்சை கத்தி எனும் முடிவுக்கு வந்தது. 2013இல் அவர்கள் நீதிமன்றத்தில் ஆருஷியின் பெற்றோர் இருவரும் மௌலானா அசாத் மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை பயின்றவர்கள் எனத் தெரிவித்தனர். இதற்கு எதிராக தல்வார் தரப்பு குறிப்பிடும் போது பல் மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தியால் ஒரு சென்டிமீட்டர் ஆழம் வரையே வெட்ட முடியும் எனவும் இது கழுத்து குருதி நாளத்தை வெட்டப் போதுமானதல்ல எனவும் குறிப்பிட்டனர்.[27] மருத்துவர் ஆர். கே. சர்மாவின் கூற்றுப்படி 10ம் ரக அறுவை சிகிச்சை கத்தியால் (பல் மருத்துவர்கள் இக்கத்தியை உபயோகிப்பதில்லை) அல்லது குக்குரியால் இரு கழுத்துகளும் வெட்டியிருந்தது.[28] ஆருஷியின் அறைஆருஷியின் உடல் மெல்லிய வெள்ளைத் துணியினால் போர்த்தி கட்டிலின் மேல் கிடத்தப்பட்டிருந்தது. அவரின் முகம் ஒரு பள்ளிப்பையால் மூடியிருந்தது.[29] ஆருஷியின் படுக்கையறைக் கதவின் முன்பக்கம், தலையணை, கட்டில், சுவர், தரை ஆகியவற்றில் இரத்தத் துளிகள் காணப்பட்டது. எனினும் இரத்தம் தெறிக்கும் தூரத்திலிருந்த விளையாட்டுப் பொருட்கள், கட்டிலின் பின்னால் வைக்கப்பட்டிருந்த இளஞ்சிவப்பு நிற தலையணை ஆகியவற்றில் இரத்தத் துளிகள் எதுவும் இல்லை. இதிலிருந்து அப்பொருட்கள் கொலையின் பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்தது தெரிகிறது. ஆருஷியின் உடல் சீராக கட்டில் மேல் கிடந்தது. படுக்கை விரிப்பு கலையாமல் இருந்தது.[30] புலனாய்வாளர்களின் குறிப்புப்படி ஆருஷி கொல்லப்படுவதற்கு முன் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் எவ்வித இரத்தக் கறையும் இருக்கவில்லை.[31] ஆருஷியின் உடல்2008ல் மருத்துவர் சுனில் டோரே சமர்ப்பித்த பிணக்கூறு அறிக்கையில், ஆருஷியின் பிறப்புறுப்பு பகுதியில் அசாதாரணமாக எதையும் காணக் கிடைக்காததால் அவர் வன்புணர்வு செய்யப்பட்டவில்லை எனக் காட்டியது. மேலும் ஆருஷியின் யோனியில் வெண்கழிவுப் படிவும் கண்டு பிடிக்கப்பட்டது. அப்படிவை உள்ளுர் மருத்துவமனை நோயியல் பிரிவுக்கு அனுப்பி பகுப்பாய்ந்ததில், அதில் விந்துக் கறை எதுவும் இருக்கவில்லை என அறிய வந்தது. 2009இல் அப்படிவு சேதமடையச் செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகித்த புலனாய்வாளர்கள் அப்படிவை நடுவண் புலனாய்வுச் செயலக ஆய்வுகூடத்துக்கு அனுப்பி ஆராய்ந்ததில் அம்மாதிரி சேதமடையச்செய்யப்பட்டது என அறிவித்தனர் மேலும் இது வேண்டுமென்று செய்யப்பட்டவில்லை எனவும் குறிக்கப்பட்டது. பூப்பெய்திய 13-14 வயது சிறுமிகளில் இவ்வாறான வெண் கழிவுகள் காணப்படுவது இயல்பென மருத்துவர் ஊர்மிளா சர்மா குறிப்பிட்டார்.[32] ஆருஷியின் படுக்கையில் வட்ட வடிவிலான ஈரத்தடம் காணப்பட்டது. அது சிறுநீர்க்கறை அல்ல. ஆருஷியின் உள்ளாடை, மேற்காற்சட்டை எதிலும் சிறுநீர் கறையோ அல்லது வேறு திரவ தடமோ எதுவும் இருக்கவில்லை. அவர் அணிந்திருந்த மேற்காற்சட்டை சற்று கீழிறங்கி இருந்தது. கொலையாளி ஆருஷியின் இடுப்பு பகுதிக்கு கீழிருந்த தடயங்களை அழித்து விட்டு, அக்காற்சட்டையை அணிவித்திருக்கலாம் என நடுவண் புலனாய்வாளர்கள் சந்தேகித்தனர்.[9] எனினும் 2012இல் மருத்துவர் டோரே ஆருஷி வன்புணர்வு செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லாத போதிலும், அவரின் பிறப்புறுப்பு விரிந்திருந்ததை கவனித்ததாகக் கூறினார்.[9] இவ்வாறான விரிவு சடலம் விறைத்த பின் பிறப்புறுப்பைக் கையாண்டால் மட்டுமே ஏற்படும் எனவும் இதிலிருந்து ஆருஷி இறந்த பின்னர் அவரின் யோனி சுத்தம் செய்யப்பட்டுள்ளது எனும் முடிவுக்கு வருவதாகவும் அவர் கூறினார்.[26] ஹேம்ராஜின் உடல்ஹேம்ராஜின் முழங்கைகளிலிருந்த சிராய்ப்புகள் மற்றும் இரத்தத் தடம் ஆகியவற்றைக் கொண்டு கணிக்கும் போது அவரின் உடல் மரணத்தின் பின் வீட்டின் மேல்தளத்தில் குறைந்தது இருபது அடி தூரமாவது இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என தெரிய வருகிறது.[33][34] ஹேம்ராஜின் உடல் மேல்தள நுழைவாயிலின் இடப்புறத்திலிருந்த வளிப் பதனப் பொறியின் வெளி இயந்திரத்தின் அருகே ஒரு கூரை குளிவிப்பான் பலகத்தால் மூடி வைக்கப்பட்டிருந்தது. அவ்வியந்திரத்தின் அருகே அதிக இரத்தம் காணப்பட்டதால் சடலம் இயந்திரம் வரை இழுத்துச் செல்லப்பட்டது என்பதை அறிய முடிகிறது. தடயவியல் வல்லுநர்கள் ஹேம்ராஜின் உடல் ஒரு போர்வையால் சுற்றி இழுக்கப்பட்டதால் இரத்தத் தடம் உருவாகி இருந்தது எனக் குறிப்பிட்டனர்.[5] புற ஊதாக் கதிர் சோதனையின் படி ஹேம்ராஜின் இரத்தம் வீட்டின் மேல் தளத்தைத் தவிர வேறெந்த இடத்திலும் சிந்தி இருக்கவில்லை என்பதால் அவர் மேல்தளத்திலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. மே 17 அன்று மேல்தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகளில் இருந்த இரத்தக் கறை மெத்தையைத் தூக்கிச் செல்லும் போது ஏற்பட்டிருக்கலாம்.[12] ஒரு பெரிய படுக்கை விரிப்பொன்று தல்வார் வீட்டு மேல்தளத்தையும் பக்கத்துத் தளத்தையும் பிரிக்கும் கம்பி வேலி மீது விரிக்கப்பட்டிருந்தது. சற்று மங்கிய இரத்தத்தினாலான உள்ளங்கை அச்சு ஒன்று மேல்தள சுவரில் புலனாய்வாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டது. அவ்விரத்தம் ஹேம்ராஜினுடையதென கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அவ்வச்சை அடையாளம் காண முடியவில்லை. மேலும் இரத்தம் தோய்ந்த பாதணிச் சுவடு ஒன்றையும் காவல்துறையினர் கண்டு பிடித்தனர். அதன் அளவு 8 அல்லது 9 ஆகவிருந்தது.[35] தல்வார்களின் வழக்கறிஞர் பினாகி மிஷ்ராவின் கூற்றுப்படி ஹேம்ராஜின் உடலை முதன் முதலில் கண்டவர்கள் அவரின் வாயில் முடிகள் சிலவற்றை பார்த்ததாகக் குறிப்பிட்டிருந்தனர். அது கொலையாளியினதாகக் கூட இருக்கலாம். எனினும் காவல்துறையினர் இதை பரிசோதிக்கவில்லை. ஹேம்ராஜின் வயிற்றில் 25 மில்லிலீட்டர் திரவம் மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் மே 16 அன்று சமையலறையிலிருந்த அவரின் உணவு தீண்டப்படாமல் இருந்தது. இதிலிருந்து அவர் கொலையுண்ட தருணம் உணவு எதுவும் உட்கொண்டிருக்கவில்லை எனத் தெரிகிறது.[36][37] ஹேம்ராஜின் அறை2008 சூலை முதலாம் தேதி அன்று நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் முதல் குழு கே. கே. கௌதமிடம் மே 17 ஆம் தேதி ஹேம்ராஜின் அறை எவ்வாறு இருந்தது என்று விசாரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அவ்வறிக்கையில் அவர் ஹேம்ராஜின் அறையில் மூன்று கண்ணாடிக் குவளைகளும் (அதில் இரு குவளைகளில் மது இருந்தது) இரு மதுப்புட்டிகளும், ஒரு மென் பான குப்பியும் இருந்ததாகக் கூறினார் என குறிப்பிட்டிருந்தது.[38] அதில் ஒரு மதுப்புட்டியில் ஹேம்ராஜின் டி.என்.ஏ. இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் புலனாய்வாளர்களின் விசாரணையில் ஹேம்ராஜ் மதுப்பழக்கம் அற்றவர் எனத் தெரிய வந்தது. மேலும் அவ்வறிக்கையில் ஹேம்ராஜின் அறையிலிருந்த மெத்தையில் பிரயோகித்திருந்த அழுத்தத்தை வைத்து அங்கு மூவர் இருந்திருக்கலாமென கே.கே.கௌதம் கூறியதாகக் குறித்திருந்தது. 2012இல் கௌதம் நீதிமன்றத்தில் அக்கண்ணாடிக் குவளைகளில் மது இருக்கவில்லை எனவும் மெத்தையை வைத்து தான் அங்கு மூவர் இருந்ததாகக் கூறவில்லை எனவும் தெரிவித்தார். நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் முதல் குழுவிலிருந்த ஆய்வாளர் தான் கூறாததையும் கூறியதை மிகைப்படுத்தியும் அறிக்கை சமர்ப்பித்தார் என கௌதம் குறிப்பிட்டார்.[39] இவ்வழக்கைப் பற்றி சுருக்கமா
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia