2014 ஆங்காங் எதிர்ப்புகள்
![]() 2014 ஆங்காங் எதிர்ப்புகள், அல்லது குடை இயக்கம் அல்லது குடைப் புரட்சி, தேசிய மக்கள் பேராயத்தின் நிலைக்குழு செப்டம்பர் 2014இல் தேர்தல் சீர்திருத்தங்களைக் குறித்த முன்மொழிவை அறிவித்த பின்னர் எதிர்ப்பாளர்கள் அரசுத் தலைமையகத்திற்கு வெளியே எதிர்ப்புகள் தெரிவித்தும் பல முக்கிய நகரச் சந்திகளில் முற்றுகையிட்டும் நடத்தும் எதிர்ப்பு இயக்கமாகும்.[5] தேசியப் பேராயத்தின் நியமனக் குழுவின் அனுமதி பெற்ற மூன்று வேட்பாளர்களுக்குள்தான் பொதுத்தேர்தல் நடைபெறும் என்ற சீர்திருத்தமே எதிர்ப்புகளுக்குக் காரணமாகும். மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளரும் பொறுப்பேற்கும் முன்னர் நடுவண் அரசினால் முறையாக நியமிக்கப்பட வேண்டும். ஆங்கொங் மாணவர் பேரவையும் இசுகாலரிசமும் 22 செப்டம்பர் 2014 அன்று அரசு அலுவலகங்கள் முன்னர் போராட்டத்தைத் துவங்கினர்.[6] செப்டம்பர் 26 மாலையில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நடுவண் அரசு வளாகத்தின் முன்னர் பாதுகாப்பை மீறி உட்புகுந்தனர். காவல்துறை நுழைவாயிலை மூடி இரவு முழுவதும் அவர்களை அங்கேயே சிறை வைத்தனர். இது போராட்டத்தை மேலும் வலுவாக்கியதுடன் மேலும் பலர் இணைந்து காவலரை சூழ்ந்தனர். காவலர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்குமிடையேயான சண்டைச்சூழல் நாள் முழுவதும் நீடித்தது. இடையே காவலர்கள் நிராயுதபாணிகளான போராட்டக்காரர்களை தடி கொண்டும் மிளகுப்பொடி தெளிவித்தும் கலைக்க முயன்றனர். அன்புடனும் அமைதியாகவும் மையத்தை ஆக்கிரமி இயக்கம் உடனடியாக குடிசார் சட்டமறுப்பு இயக்கத்தில் இறங்குவதாக அறிவித்தது.[7] செப்டம்பர் 28 அன்று மதியவேளையில், எதிர்ப்பாளர்கள் ஆர்கோர்ட்டு சாலையையும் பின்னர் குயின்சுவே சாலையையும் ஆக்கிரமித்தனர். பலமணி நேர சண்டைச்சூழலுக்குப் பின்னர் காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளையும் நீர் பீரங்கிகளையும் கூட்டத்தின் மீது பயன்படுத்தினர்; கலையாவிடில் இரப்பர் குண்டுகளை சுடப் போவதாக அறிவித்தனர்.[8] இந்த எதிர்ப்புகள் அக்டோபர் 6 முதல் நிறுத்தப்பட வேண்டும் என அரசு இறுதி எச்சரிக்கை விடுத்தது; இதனை போராட்டக்காரர்கள் ஏற்காதபோதும் அரசு அலுவலர்கள் தங்கள் அலுவலகங்களுக்குச் செல்ல அனுமதித்தனர்.[9] இந்தப் போராட்டங்களைத் தூண்டிவிட்டதில் மேற்கத்திய ஊடகங்களுக்குப் பங்கு இருப்பதாக அரசுடமையான சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.[10] ஆங்கொங் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தால் அக்டோபர் 4 முதல் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பொன்றில், கேட்கப்பட்ட 850 மக்களில் 59% மக்கள் போராட்டத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.[11] காட்சிக்கூடம்
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia