2015 திருப்பதி வனப்பகுதிப் படுகொலைகள் |
---|
Location of Chittoor in Andhra Pradesh |
இடம் | சித்தூர், ஆந்திரா |
---|
நாள் | 7 ஏப்ரல் 2015 (2015-04-07) 05:00 a.m. (local time) (UTC+05:30) |
---|
தாக்குதலுக்கு உள்ளானோர் | செம்மரக் கடத்தல் குற்றவாளிகள் |
---|
தாக்குதல் வகை | துப்பாக்கிச் சூடு |
---|
ஆயுதம் | துப்பாக்கி |
---|
இறப்பு(கள்) | 20 |
---|
தாக்கியோர் | ஆந்திரக் காவல்துறை |
---|
நோக்கம் | Punishment |
---|
2015 திருப்பதி வனப்பகுதிப் படுகொலைகள் என்பது ஏப்பிரல் 7, 2015 அன்று ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள சேசாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் குற்றவாளிகள் என்று கூறப்பட்டு 20 பேர் ஆந்திரப்பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கடத்தல் தடுப்புப் படையினரால் கொல்லப்பட்ட சம்பவத்தைக் குறிக்கிறது.
படுகொலை நடைபெற்ற சேசாசலம் மலைப்பகுதி சித்தூர் மாவட்டத்தில் இருப்பதால் சித்தூர் வனப்பகுதிப் படுகொலைகள் எனவும் அறியப்படுகிறது. சேசாசலம் மலைப்பகுதி சித்தூர் கடப்பா மாவட்டங்களில் பரவியுள்ளது. திருமலை பகுதியும் சேசாசலம் மலைப்பகுதியை சார்ந்தது.
தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட மரம்வெட்டும் தொழிலாளர்கள் சேசாசலம் வனப்பகுதியில் உள்ள ஈத்தலகுண்டா பகுதியில் மரம் வெட்டுவதாக அறிந்து வனத்துறையினர் அங்கு சென்றனர். வனத்துறையினர் மீது கோடாரி, கற்களால் அத்தொழிலாளர்கள் தாக்கியதாகவும், அதனால் தற்காத்துக்கொள்ள வேண்டி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் காவல்துறை அறிவித்தது. துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலியாகினர்.[1] அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
குற்றச்சாட்டுகள்
இந்த காவல்துறை மோதல் கொலைகள் போலியாக நடத்தப்பட்ட நாடகம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
- கொலை நடந்த இடத்தில் ஐந்து கிலோ மீட்டர் வரை செம்மரங்கள் இல்லை.
- அங்கு வெட்டியதாக காணப்படும் மரங்களில் வனத்துறையால் வர்ணத்தால் ஏற்கெனவே அடையாளம் இடப்பட்டிருக்கிறது.
- கொல்லப்பட்டவர்களின் உடல்களில் தீக்காயங்கள் காணப்படுகிறது.
- முகம், பின்தலை, மார்பு என்று சரியாக சுடப்பட்ட அடையாளங்கள்
நீதிமன்றம் இயற்கையான மரணமில்லாத போது ஏன் இந்திய தண்டனைச் சட்டம் 302 பதிவு செய்யப்படவில்லை என்று கேட்டு மாநில அரசை திங்கள் கிழமைக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள் இறந்தவர்களின் நெஞ்சிலும் தலையிலும் மட்டும் குண்டு பாய்ந்திருப்பது காவல் துறையின் கூற்றை ஐயம் கொள்ள வைக்கிறது என்றும் பல உடல்கள் தீக்காயத்துடன் உள்ளதாகவும் கூறுகிறார்கள். ஏழு பேர் பேருந்தில் இருந்து ஆந்திர பிரதேச காவல் துறையால் அழைத்துவரப்பட்டு கொல்லப்பட்டார்கள் என்று அப்பேருந்தில் அவர்களுடன் பயணித்தவர் கூறுகிறார்.[2]
8 பேர் கொண்ட உண்மை அறியும் குழு இறந்தவர்களின் உடல்கள் கடுமையாக சித்தவரைக்கப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளன என்றனர். அக்குழுவில் உள்ள சத்தியேந்தர பால் ஐந்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான வழக்குகளை பார்த்துள்ளதாகவும் இதைப் போல் மனிததன்மையற்ற கொலைகளை பார்த்ததில்லை என்று கூறினார். தற்காப்புக்காக சுட்டதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்றும் இது மோசமான திட்டமிடப்பட்ட படுகொலை என்றும் அவர் கூறினார். உண்மை அறியும் குழுவில் வந்த பலரும் இது திட்டமிடப்பட்ட படுகொலை என்று கூறினர்.[3]
கொல்லப்பட்டவர்களின் விவரங்கள்
அரசநத்தம், கருத்தம்பட்டி, ஆலமரத்து வளவு தர்மபுரி மாவட்டம் சித்தேரி மலை பகுதியை சேர்ந்தது.[4] கலசப்பாக்கம் திருவண்ணாமலைக்கு அருகிலுள்ளது. மேல்குப்சானூர் நெம்மியம்பட்டு ஊராட்சிக்குட்பட்டது.[5]
- ஹரிகிருஷ்ணன் - அரசநத்தம் கிராமம்
- ல.லட்சுமணன் - அரசநத்தம் கிராமம்
- வெங்கடேசன் - அரசநத்தம் கிராமம்
- சிவக்குமார் - அரசநத்தம் கிராமம்
- தீர்த்தகிரி மகன் லட்சுமணன் - அரசநத்தம் கிராமம்
- வேலாயுதம் - ஆலமரத்து வளவு கிராமம்
- சிவலிங்கம் - கருத்தம்பட்டி கிராமம்
- பழனி -கலசப்பாக்கம்
- மகேந்திரன் -காந்திநகர்
- சின்னச்சாமி -மேல்குப்சானூர்
- வெள்ளி முத்து -மேல்குப்சானூர்
- கோவிந்தசாமி --மேல்குப்சானூர்
- ராஜேந்திரன் -மேல்குப்சானூர்
- பெருமாள் -வேட்டகிரிப்பளையம்
- பன்னீர்செல்வம் -மேல் கனவாயூர்
- முனுசாமி -முருகப்பாடி
- மூர்த்தி -முருகப்பாடி
- சசிகுமார் -வேட்டகிரிப்பளையம்
- முருகன் -வேட்டகிரிப்பளையம்
- பழனி -காளசமுத்திரம்
தமிழக அரசு
இந்த சம்பவத்தில் மனித உரிமை மீறல் உள்ளதா என்பது குறித்து நம்பகமான விரைவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆந்திரப்பிரதேச முதல்வருக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். மேலும் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா 3 இலட்ச ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.[6]
தலைவர்களின் கண்டனங்கள்
- ஜெயலலிதா - ஆந்திரக் காவல்துறையினரின் நடவடிக்கை சரியானதுதானா? செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினர் தேவையான அளவுக்கு மட்டுமே பலப்பிரயோகம் செய்தார்களா என்பது சந்தேகத்திற்கு உரியதாகவே உள்ளது.[7]
- விஜயகாந்த் - வன விலங்குகளையே கொல்லவே அனுமதியில்லாத போது, மனிதர்களை கொல்வதா?[8]
- வைகோ - ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து சித்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற ம.தி.மு.க., பொதுசெயலர் வைகோ 10 ஏப்ரல் 2015 அன்று வேலூரில் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.[9]
- படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பாத்தார்க்கு தமிழக அரசின் மூன்று இலட்சம் தவிர அதிமுக இரண்டு இலட்சமும்[10] திமுக ஒரு இலட்சமும் [11] தேமுதிக 50,000 ரூபாயும் தருவதாக கூறியுள்ளன.
வழக்குகள் & விசாரணை
- ஐதராபாத்தைச் சேர்ந்த மக்கள் உரிமைக் கழகம் எனும் அமைப்பு தொடர்ந்த வழக்கில் ஆந்திர உயர்நீதி மன்றம், துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர்கள் மீது 302-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யவும், இருமாநில சிக்கலால் உள்ளூர் காவல்துறை விசாரிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.[12]
- 20 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆந்திர பிரதேச அரசு காவலர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து அதை ஆந்திர உயர்நீதி மன்றத்துக்கு தெரிவித்தது.[13]
- தனது கணவரின் உடலை தமிழகத்தில் பிணக்கூறு ஆய்வு செய்யவேண்டும் என்று முனியம்மாள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றும், ஆந்திர நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருவதால், மறு உடற்கூராய்விற்கு உத்தரவிட அதிகாரம் இல்லை என்றும், தேவைப்பட்டால் ஆந்திரா அல்லது உச்சநீதிமன்றத்தை அணுக அறிவுறித்தியுள்ளது. எனினும், கொல்லப்பட்ட 6 பேர்களின் உடல்களை ஏப்ரல் 17 வரை பாதுக்காக்க உத்தரவிட்டுள்ளது.[14] இவரின் கூற்றை ஏற்றுக்கொண்ட ஆந்திர உயர்நீதிமன்றம் மீண்டும் சசிகுமாரின் உடலை பிணக்கூறு ஆய்வு செய்யும் படி உத்தரவிட்டது. புதுச்சேரியில் பிணக்கூறு ஆய்வு செய்யப்படும்[15]
- தேசிய மனித உரிமை ஆணையத்தில் இக்கொலை தொடர்பாக மூன்று பேர் சாட்சியம் அளித்தனர்.[16]
- உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டம் வேட்டகிரிபாளையத்தை சேர்ந்த முருகன், பெருமாள், காந்தி நகரை சேர்ந்த மகேந்திரன் மற்றும் முருகபாடியை சேர்ந்த முனுசாமி, மூர்த்தி ஆகிய 5 பேரின் உறவினர்களும் சசிகுமாரின் மனைவி முனியம்மாளும் மறுபிணக்கூறு ஆய்வு செய்ய உத்தரவிடக்கோரியதை அடுத்து ஆந்திர உயர் நீதிமன்ற ஆணைப்படி, 6 உடல்களுக்கு மறுபிணக்கூறு ஆய்வு செய்ய உஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு தமிழகம் வந்தது.[17][18]
- தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் துணை தலைவர் இரவி தாக்கூர் 20 பேர் கொல்லப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார். இப்படுகொலை தொடர்பாக ஆந்திர காவல்துறை அளித்த பதில் சரியாக இல்லை என்று தெரிவித்தார்.[19]
- தேசிய மனித உரிமை ஆணையம் கொலை நடந்த இடத்திற்கு தங்கள் குழுவை அனுப்பி விசாரணை மேற்கொள்ளும் எனவும் ஆந்திரப் பிரதேச அரசு நீதித்துறை சார்ந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.[20]
- ஐதராபாத் உயர்நீதிமன்றம் தற்போதைய விசாரணை சிறப்பாக இல்லை என்று கூறி சிறப்பு விசாரணை குழுவை அமைத்து 60 நாட்களில் அறிக்கையை நீதிமன்றத்துக்கு வழக்கும் படி ஆணையிட்டுள்ளது.[21]
- 4 பேர் உடைய தேசிய மனித உரிமை ஆணையம் படுகொலை தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 12 குடும்ப உறுப்பினர்களிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தியது.[22]
- இந்தியன் எக்சுபிரசு நிருபர்கள் கொலைசெய்யப்பட்டவர்களின் அலைபேசியை ஆராய்ந்ததில் ஆந்திரப் பிரதேச காவல்துறை சொன்னதற்கு மாறாக உள்ளதை அறிந்தார்கள்.[23]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்