2019 யுன் லாங் தாக்குதல் என்பது ஆங்காங்கின் யுன் லாங் பெருநகர தொடருந்து நிலையத்தில் நடந்த ஒரு வன்முறைத் தாக்குதல் ஆகும். ஆங்காங்கில் குற்றச் சம்பவங்களில் கைதாவோரை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டமுன்மொழிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் 2019 ஆம் ஆண்டின் மத்தியில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். 2019 ஆம் ஆண்டு சூலை 21 மற்றும் சூலை 22 ஆகிய நாட்களில் முகமூடி அணிந்த 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களைப் பல்வேறு ஆயுதங்கள் கொண்டு கடுமையாகத் தாக்கினர்.[1][2][3] இந்தத் தாக்குதல் யுன் லாங்கின் எம்.டி.ஆர். தொடருந்துச் சேவை தொடருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் தாக்கியவர்கள் முதியோர், குழந்தைகள் அனைவரையும் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் போராட்டக்காரர்கள், சட்டத்தை உருவாக்குபவர்கள், பத்திரியாளர்கள் உள்ளிட்ட 45 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலானது சியாங் வானில் நடந்த 2019 ஆங்காங் போராட்டத்தைத் தொடர்ந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த மக்களாட்சி ஆதரவு போராட்டக்காரர்களை மிரட்டும் விதமான செயலாக அமைந்திருந்தனவாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவசரச் சேவை எண் 999 இற்கு 1000 க்கும் மேற்பட்ட அழைப்புகள் செய்தும் கூட [4] காவல்துறையினர் 30 நிமிடங்களுக்கும் மேலாக அங்கு வந்து சேரவில்லை. இறுதியாக தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்ற 1 நிமிடத்திற்குப் பிறகு காவல் துறையினர் அங்கு வந்து சேர்ந்துள்ளனர்.[5][6][7] அன்றைய இரவு வரை எவ்வித கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. பலர் காவல்துறையினர் பொதுமக்களைக் காக்கத் தவறி விட்டதாகக் குற்றஞ்சாட்டினர். இன்னும் சிலர் காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட முரட்டுக்கூட்டத்திற்கு உடந்தையாக இருந்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டினர்.[8]
பின்னணி
ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்களை சீனா, தைவான் அல்லது மக்காவு பகுதிகளுக்கு நாடு கடத்தி, குற்ற வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க வசதியாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர கேரி லாம் தலைமையிலான ஹாங்காங் அரசு நிர்வாகம் ஏப்ரல் 2019-இல் முடிவு செய்தது. இச்சட்டத் திருத்தத்திற்கு ஹாங்காங் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில்[9] பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் இச்சட்ட மசோதாவிற்கு எதிராக 9 சூன் 2019 முதல் ஹாங்காங் அரசிற்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.[10] இப்போராட்டத்தில் 800 அதிகமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.[11] குற்றவாளிகளை சீன அரசிடம் ஒப்படைப்பதற்காக குற்றவாளிகள் பரிமாற்ற சட்டத்தில் கொண்டு வந்த திருத்த மசோதாவை ஆதரித்த அரசாங்க ஆதரவாளர்கள், காவல் துறையினரை சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பவர்கள் என பாராட்டினர். அரசாங்க எதிர்ப்பாளர்களின் கருப்பு ஆடைக் குறியீட்டிற்கு மாறாக, அரசாங்க ஆதரவாளர்கள் வெள்ளை நிற ஆடைகளை அணிந்தனர். வெள்ளை ஆடை அணிந்த மக்கள் ஜூலை 19 அன்று ஆங்காங்கில் உள்ள தாய் போ லென்னான் சுவரில் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான வாசகங்களை எழுதினர். மேலும், சூலை 20 அன்று காவல்துறையினருக்கான ஆதரவைக் காட்டும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
தாக்குதல்
மாலைப்பொழுதில் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களாகத் தங்களைக் கூறிக்கொண்டவர்கள் வெள்ளை நிற சட்டைகளை அணிந்து கொண்டு தங்கள் கைகளில் இரும்புத் தடிகளையும், மரக்கட்டைகளையும் கொண்டு யுன் லாங் நகரில் கூடினர். பிற்பகல் 10 மணியளவில் தெருக்களில் இருந்த மக்கள் மற்றும் அவர்களின் மகிழ்வுந்துகளை கண்மூடித்தனமாகத் தாக்கினர். அவர்கள் குறிப்பாக கருப்பு நிற ஆடை அணிந்திருந்தவர்களைக் குறிவைத்து தாக்கியதுடன், பத்திரிக்கையாளர்களையும் தாக்கினர்.[12][13] வெள்ளை நிற நீண்ட ஆடையை அணிந்திருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரும் இந்தத் தாக்குதலில் காயமுற்றிருந்தார்.[14]
பிற்பகல் 10:30 மணியளவில் வெண்ணிற சட்டையணிந்த ஒரு நூறு பேர் யுன் லாங் தொடருந்து நிலையத்தில் புகுந்து நடைமேடையில் நின்றிருந்தோரையும், தொடருந்தின் பெட்டிகளில் உள்ளிருந்தோரையும் தாக்கினர்.[15][16]