2023 ஆல்பர்ட்டா காட்டுத்தீ2023 ஆல்பர்ட்டா காட்டுத்தீ (2023 Alberta wildfires) கனடா நாட்டில் உள்ள ஆல்பர்ட்டா மாகாணப் பகுதியில் 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீ விபத்தைக் குறிக்கிறது. கொழுந்து விட்டும், வேகமாகவும் தீ தொடர்ந்து பரவி வருவதால் பல அடி உயரத்துக்கு புகை மண்டலம் எழும்பி உள்ளது. மே 6, 2023 ஆம் நாள் நிலவரப்படி, மாகாணம் முழுவதும் 108 காட்டுத்தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.[1] பல சமூகங்கள் வெளியேற்ற உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக 25,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.[2] காட்டுத் தீயில் 1458 எக்டேர் பகுதி எரிந்து நாசமாகி இருக்கிறது. தீயை அணைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். காட்டுத் தீயில் சிக்கி ஏராளமான வீடுகளும் எரிந்துள்ளன. காட்டுத் தீ காரணமாக மேற்கு கனடாவில் வெப்பம் அதிகரித்துள்ளது. ஆல்பர்ட்டாவில் சில பகுதிகளில் தீயின் சீற்றத்தால் பனி உருகி பிரிட்டிசு கொலம்பியா உட்புற பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரிட்டிசு கொலம்பியாவில் ஆறுகளின் கரைகள் உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. வெப்பம் காரணமாக பனி உருகுவது அதிகமாகியுள்ளது. ஆறுகள், சிற்றோடைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியது என்று அவசரகால மேலாண்மை அமைச்சகம் தெரிவித்தது. காட்டுத்தீ, வெப்பம் காரணமாக 13 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.[3] வெளியேற்றங்கள்ஆல்பர்ட்டா மாகாணம் முழுவதும் பல சமூகங்களுக்கு வெளியேற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டன. அருகாமையில் நிகழ்ந்த இரண்டு காட்டுத் தீ சம்பவங்கள் காரணமாக ஏப்ரல் 29 ஆம் தேதி, மேற்கு மத்திய ஆல்பர்ட்டாவிலுள்ள எவன்சுபர்க் மற்றும் எண்ட்விசுடலின் குக்கிராமங்களுக்கு கட்டாய வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.[4] மே 3 ஆம் தேதி வெளியேற்ற உத்தரவு நீக்கப்பட்டது. ஆனால் தீயின் அளவு அதிகரித்து வருவதால் மே மாதம் 4 ஆம் தேதி மீண்டும் வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.[5] பாக்சு லேக் 162 இந்திய பாதுகாப்புப் பகுதியில் அமைந்துள்ள பாக்சு லேக் எனப்படும் இணைக்கப்படாத சமூகத்திற்கு , மே 3 ஆம் தேதி வெளியேற்ற உத்தரவு வழங்கப்பட்டது, மே 5 ஆம் தேதிக்குள் அனைத்து குடியிருப்பாளர்களும் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மே 5 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி உள்ளூர் காவல் நிலையம், பொதுக் கடை மற்றும் குறைந்தது 20 வீடுகள் தீயில் நாசமாகியுள்ளன.[6] எட்மண்டனில் இருந்து தென்மேற்கே சுமார் 133 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திரேட்டன் பள்ளத்தாக்கு நகரத்திற்கு மே 4 ஆம் தேதியன்று வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கு ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததாக உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.[7] அருகில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக மே 5 ஆம் தேதியன்று நோர்டெக்கு குக்கிராமம் மற்றும் பிக் ஆர்ன் 144ஏ இன் இந்திய இருப்புக்களுக்கு வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது[8] எட்சன் நகரத்திற்கு அருகிலும் பல காட்டுத் தீ சம்பவங்கள் காரணமாக மே 5 ஆம் தேதி வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.[9] பாக்சு கிரீக்கு நகரம் மற்றும் குக்கிராமமான லிட்டில் சுமோக்கி பகுதிகளுக்கும் மே மாதம் 6 ஆம் தேதி வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.[10] மே 6 ஆம் தேதி ஆல்பர்ட்டா மாகாணம் முழுமைக்கும் மாகாண அவசர நிலை அறிவிக்கப்பட்டது.[11] தீயணைப்புஆல்பர்ட்டா காட்டுத்தீயில் இருந்து காக்கும் பருவகால வனப்பகுதி தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆண்டு முழுவதும் பணியாற்றும் தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மே 5 ஆம் தேதி, ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் இருந்து 79 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சிகளுக்கு உதவ வருவார்கள் என்று அறிவித்தது. ஆல்பர்ட்டாவின் பிரதமர் டேனியல் இசுமித்து, தீயினால் 121,909 ஏக்கர் பரப்பளவு எரிந்துள்ளதாக தெரிவித்தார்.[2] மேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia