இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையைப் புதுப்பிக்கவும்.
2023 இசுரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் என்பது இசுரேலுக்கும் ஹமாசிற்கும் இடையே நடந்துவரும் போரில் நடைமுறைப்படுத்தப்பட்ட போர் நிறுத்தமாகும். நான்கு நாட்கள் போர் செய்யாது இருத்தல், பிணையாளர்களை விடுவித்தல் ஆகியன இரு பக்கத்தினராலும் ஒப்புக்கொள்ளப்பட்டன. இந்தப் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன.[1] முற்றுகையிடப்பட்ட இசுரேலிலிருந்து பிணையாளர்களாக காசாக்கரைக்குள் கொண்டு செல்லப்பட்ட 50 பேர் ஹமாஸ் போராளிக் குழுவினரால் விடுவிக்கப்படுவர்; இசுரேல் சிறைச்சாலைகளிலுள்ள 150 பாலத்தீனியர்கள் இசுரேலால் விடுவிக்கப்படுவர். இசுரேல் இராணுவத்தால் முற்றுகையிடப்பட்டுள்ள காசாக்கரையினுள் மனிதநேய உதவிகள் நுழைவதற்கு இருதரப்பும் சம்மதித்துள்ளன.[2][3][4]
நவம்பர் 25 வரை, 41 பிணையாளர்களை ஹமாஸ் விடுவித்திருந்தது; 78 பாலத்தீனியக் கைதிகளை இசுரேல் விடுதலை செய்திருந்தது.[5]
போர் நிறுத்தத்தை அடுத்த இரு நாட்களுக்கு நீட்டிப்பதற்கு ஹமாசும் இசுரேல் அரசும் ஒப்புக்கொண்டுள்ளதாக கத்தாரின் வெளியுறவுத் துறை அமைச்சகம் நவம்பர் 27 அன்று தெரிவித்தது.
உடன்பாடு
கத்தார், எகிப்து, ஐக்கிய அமெரிக்கா நாடுகள் மேற்கொண்ட மறைமுகப் பேச்சுவார்த்தைகளின் பலனாக, நவம்பர் 22 அன்று உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது.[6] 4 நாட்கள் போர் நிறுத்தம், 50 இசுரேலிய நாட்டின் பிணையாளர்கள் விடுவிப்பு, 150 பாலத்தினீயர்களின் விடுதலை, அதிகப்படியான மனிதநேய உதவிகளை காசாவிற்குள் அனுமதித்தல் ஆகியன இந்த உடன்பாட்டின் முக்கியக் கூறுகளாகும்.[7][8][9] விடுவிக்கப்படுபவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாக இருப்பர்.[10] தெற்கு காசாவின் வான்வெளியில் இசுரேலின் நடமாட்ட நிறுத்தம், வடக்கு காசாவின் வான்வெளியில் நாள்தோறும் 6 மணி நேரத்திற்கு வானூர்திகள் ஏதும் பறக்காமல் இருத்தல் ஆகியனவும் உள்ளடக்கம் என ஹமாஸ் தெரிவித்தது.[11]
போர் நிறுத்தத்தன்போது, காசாவிலுள்ள விடுவிக்கப்படாத பிணையாளர்களை செஞ்சிலுவை சங்கத்தினர் சந்திக்க இயலாது என ஹமாஸ் அறிவித்தது.[12] இந்தப் போரின் தொடக்கத்தில் நிகழ்ந்த இசுரேலியப் பிணையாளர்கள் பிரச்சினை தொடங்கிய 7 அக்டோபர் 2023 முதற்கொண்டே, இந்தப் பிணையாளர்களை செஞ்சிலுவை சங்கத்தினர் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.[13][14]
போர் நிறுத்தத்தின்போது நடந்த நிகழ்வுகள்
போர் நடந்துகொண்டிருந்த நாட்களில், இசுரேலிய அரசாங்கம் விடுத்த எச்சரிக்கைகளால் வடக்கு காசாவிலிருந்த பொதுமக்கள் தெற்கு காசாவிற்கு இடம்பெயர்ந்திருந்தனர். மீண்டும் திரும்பக் கூடாது என்றும் அச்சிடப்பட்ட துண்டுச்சீட்டுகள் மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன் நூற்றுக்கணக்கான பாலத்தீனியர்கள் வடக்கு காசா நோக்கி செல்லத் தொடங்கினர்.[15]போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆரம்ப நேரத்தில், காசா நகரம் நோக்கி சென்று கொண்டிருந்த பாலத்தீனியர்கள் மீது இசுரேலியப் பாதுகாப்புப் படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அல் ஜசீரா ஆங்கிலத் தொலைக்காட்சி தெரிவித்தது.[16][17] இரண்டு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
போர் நிறுத்த உடன்பாடு மீறப்பட்டதாக இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டினர். நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட நேரம் தொடங்கி, 15 நிமிடத்தில் ஹமாஸ் குழுவானது தெறிப்புகளை ஏவியதாக இசுரேல் குற்றஞ்சாட்டியது. பாலத்தீனியர்கள் மீது இசுரேலின் இராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் ஹாமாசின் கட்டுப்பாட்டிலிருக்கும் காசா உடல்நல அமைச்சகம் தெரிவித்தது.[18] நவம்பர் 24 அன்று வடக்கு காசாவிலிருந்து தெற்கு காசாவிற்குள் செல்ல முயன்ற பொதுமக்கள் மீது இசுரேலின் துப்பாக்கி தாங்கிய வீரர்கள் சுட்டு காயப்படுத்தியதாக ஸ்கை நியூசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.[19][20]